முற்றுப் பெறாக் கவிதை


கொடு நோயாய்த்
தனிமை

அனலெனச்
சுடுமிந்தப் பனிநாளில்
குதிர்கிறது என் நாகணவாய்ச்சியின்
நினைவு

பசிய மேப்பிள் மரக் கவட்டில்
ஓர்
இளவெயிற்பொழுதில்
வந்தமர்ந்தது மஞ்ஞையாய்
தோகை விரித்து

உண்கண் வீச்சில் கேண்மையாய்
வசீகரிக்க மூழ்கினேன்
கவிதைக்கு கருயெடுக்க

கபாலக்கிடங்கில்
தேனீயாய்ப் பறந்தலைகின்ற அல்லல்
அறுந்து குதுகலமாகியது

விருட்டெனப் பறந்திட்டது
பட்சி தனித்து எனது ஆன்மாவின்
ஆலாபனையுடன்

நாகணவாய்ச்சியின்
ஒற்றை உண்கண் வீச்சில்
நினைவுகள் துரத்த
முசுவின் குருளையாய்த்
தாவுகிறது மனது

குளிர்பற்றி எரிகின்ற யாமத்தில்
துயிலின்றி தவிக்கின்றோம்
நானும்
எனது மசித்துளியும்
முற்றுப் பெறாக் கவிதைக்காய்
இன்றும்.

ப்ரியா பாஸ்கரன்
1.10.22

பால்யத்தின் சாவி

நாகணவாய்ப்புள் வண்ணத்தில் மேகம்வானம் மதகு திறந்து கொட்டியது பெருமழை


சுருக்காகப் பள்ளி மணியடிக்கவீடு திரும்புகிறேன்வீதியெங்கும் வெள்ளக்காடு


முழந்தாள் வரை இழுத்துச் சொருகிய பாவாடை விளிம்பில் ஈரம்


நீர் சொட்ட வீட்டினுள் நுழைகிறேன்


முற்றத்தின் அண்டாக்களில் நீர்நிரம்பி நுரைக்கிறதுஅம்மா ஆற்றிய டபராவின் குளம்பியாய்


வாம்மா குட்டியெனத் தாழ்வாரத்தில் காத்திருக்கும்அப்பாவின் குரல்


கூடவேஆவி பறக்கும் வடையின் வாசம்
பால்யத்தின் சாவி கொண்டு திறக்கஇன்றும்தொண்டைக் குழிக்குள் சூடாக இறங்குகிறது அப்பா ஊட்டிய வடை.


~ ப்ரியா பாஸ்கரன்

சொட்டும் முத்தத் துளி


அடைமழை நேரத்துக்
குகைக்குள்

ஓவியம் வரையத் தேடிய
பச்சிலையின் நுனியில்
சொட்டிய ஈரத்தில்

நுகர்ந்தேன்
கவிதையாய் உனது
முத்தத்தின் வாசம்.

~ ப்ரியா பாஸ்கரன்.

சொற்கள் நிரம்பி வழியும் குடுவை


கொடுங்கோடைச் சொற்களால்
இகல் பாராட்டிச்
சுட்டெரிக்கும் மனிதர்கள்

பாளம் பாளமாய் வெடிக்கிறது மனது
மனம் போன திசையில் பயணிக்க
பெரு மழையுடன்
இருண்ட காண்டாவனம்

ஓராயிரம் நெருப்பெறும்புகள்
மொய்த்திருந்து
தின்னுகின்றன மனதை

வலியால் துடிதுடிக்க
ஆர்ப்பரித்தெழுகின்றன
கொடிய நினைவுகள்

அவற்றின் பிடியிலிருந்து
லாவகமாகத் தப்பியோடிக்
கண்டெடுக்கிறேன்
நீ கொடுத்த சொற்களின் குடுவையை

திக்கொன்றாய் அவிழ்த்துக்
கொட்டுகின்றேன்
வழி நெடுக அர்த்தங்கள்.

~ ப்ரியா பாஸ்கரன்.