வியக்கிறேன்
அகன்ற பிரபஞ்சத்தில்
எதிர்கொள்ளும் பேரிடர்களை
முளைக்காத சிறகுகளால்
பறக்கிறேன்
சாலைக்குக் கொணர்கிறேன்
எல்லையில்லாத வானை
எதிர்நீச்சலாகிறேன்
அலையில்லாத கடலில்
வளைந்தோடும் பாதையில்
நடையாகிறேன்
இப்பொழுது
“சும்மா இரு” அதட்டுகிறாள் ஔவை
முட்டி மோதி
போர்வையினுள் முடங்குகிறேன்
பேருறக்கம்
அந்நொடியில்
அண்டப் பெருவெளியிலிருந்து
ஒரு துளி ஆற்றல்
இறங்குகிறது என்னுள்
பெருமழையென
~ ப்ரியா பாஸ்கரன்
