நீண்ட வெக்கைக்குப்பின் சிறிது காற்றில்
தன்னை உலர்த்திக் கொண்டிருந்தது
இன்றைய நாள்

அடவுகளைப் பயின்று
துளித்த வியர்வைத் தணிக்கச்
சன்னலில் திரை விலக்கி
ஆசுவாசப்பட எத்தனிக்கிறாள் மகள்

உரத்த குரலில் அடுத்து சண்டைப் பயிற்சிக்கு ஆயத்தமாகி
முண்டியடித்து உடைமாற்றி
நான்காவது ஆட்டத்தைப்
பூமி அதிர அதிர ஆடுகிறாள்

பிறகு
கணக்கு பாடத்தை முடிக்கலாம் சடுதியிலென அழைக்க
எந்திரமாய் நிற்கிறாள்

முனகலுடன் ஆரம்பமாயிற்று
கூட்டல் பெருக்கல் குறியீடுகள் சதங்கையின்றி ஆடத்தொடங்குகின்றன

ஒரு பக்கம் முடித்து மறுபக்கம் செய்து
நிமிரும் முன்னர்
ஆங்கிலம் அறிவியலென
மீளக் குவிகின்றன சுமைகள்

சில மணி நேரக் கடும் பயிற்சிக்குப் பின்னர்
களைத்துச் சோர்ந்து
கதவுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறாள்

மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்
பாப்பா என்று
காற்றில் மிதந்த வந்த பாடலில்
வெக்கை இருளெனக்
கவ்வத் தொடங்கியது

~ ப்ரியா பாஸ்கரன்

One thought on “

Leave a comment