பறவையின் சிறகசைவென
கட்டுண்டிருக்கிறது சட்டங்களுக்கிடையில்
உறவுகளுக்கான எனது நேசம்
கோடாரிக் காம்பின் கூர்முனையாய்ச்
சொற்கள் பதம்பார்க்க
நொறுங்கி உடைகிறது மனது
வெளியேறுகிறது நேசத்தின் உயிர்
துளி துளியாய்
அவர்கள் சொற்களில் சிதறி
அள்ள நினைப்பது சாத்தியமா
பாதரச கடலில் கரைந்த சொற்களை
பழுதடைந்த கண்ணாடியைப்
பிசின் கொண்டு சரிசெய்தாலும்
வெட்ட வெளிச்சமாய் விரிசல்
நிற்க,
ஆறாத வடுக்களைச்
சுமக்கும் நெஞ்சத்திற்கு
ஆயுளுக்குமான
நிபந்தனையற்ற நேசத்தின் விதி
~ப்ரியா பாஸ்கரன்
