
விடிவு…
இரவு துயிலும் இசையில் விடிவு
வரவாய் நிதமும் வருமே – அரணில்
உருகும் விழிகள் உறக்கம் விழிக்க
அருகன் புரிவான் அருள்…
~பிரியமுடன் பிரியா 🙏🏻
My thoughts and lyrics

விடிவு…
இரவு துயிலும் இசையில் விடிவு
வரவாய் நிதமும் வருமே – அரணில்
உருகும் விழிகள் உறக்கம் விழிக்க
அருகன் புரிவான் அருள்…
~பிரியமுடன் பிரியா 🙏🏻
ஊரடங்கு உத்தரவு
சுதந்திரமாய் திரிந்தன
எருமைகள்..!
ஊரடங்கு உத்தரவு
ஊரெங்கும் திறப்பு
மயானம்..!!
அண்டை வீடும்
அண்டை மாநிலம்
அடுக்குமாடி குடியிருப்பு..!
~பிரியா.

மெல்லவே புல்வெளியில் மங்கை விடியலிலே
அல்லிமலர் பாதம் அடிவைத்து – செல்லவே
கண்ட பிறையுமே காதலைச் சொல்லியே
விண்விட்டுச் சென்றது பார்…
~பிரியமுடன் பிரியா 💕

மோகமோ மோனமோ தேடுதே வாழவா
தேனினிதே தந்த குழகு…
குழகு – அழகு
மாலை மாற்று குறள்வெண்பா
~பிரியமுடன் பிரியா 💕

நெடுநேரம் நீ உறங்க
நொடிதோறும் தாலாட்டு…
தோளிலாடும் ஊஞ்சலில்
தோடி இராகம்…
வீட்டிலே தாயாய்
வேலையில் தாதியாய்…
தலைகுனியாமல் இருக்க
தலைகணம் சுமந்தாள்…
~பிரியமுடன் பிரியா 💕

நீந்தத் தெரியாமலேயே
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
உன் கன்னக்குழியில்…
நீ எதற்காகத் தேநீருக்குச்
சர்க்கரை வாங்கக்
கடைக்குச் செல்கிறாய்..?
பேசாமல் ஒரு துளி
சுவைத்துவிட்டுக் கொடு
அது போதும்.
நீ கடந்து செல்கையில்
மயில் தோகை விரித்தாடியது
பெண் மயிலோவென…
உன் மீது பட்டு கீழே
விழுந்த மழைத்துளிகள்
ஏங்கித் தவித்தன.
நீ அவைகளை உன்னுள்
தேக்கி வைத்துக்
கொள்ள மாட்டாயாயென.
நீ திட்டும் அழகில்
சிலையாகி நின்று விடுவேன்.
~பிரியமுடன் பிரியா 💕

வயிற்றை எரிக்கும்
அணையாத நெருப்பு
மது..!
வீதியெங்கும் கொண்டாட்டம்
வீடுதோறும் திண்டாட்டம்
இன்றைய தமிழகம்..!
எப்பொழுதும் ஒரே சொல்
நாளையிலிருந்து நல்லவனாவேன் குடிகாரன்..!
தலையாட்டி பொம்மை
விற்பனை அதிகமாகிறது
குடிகாரன்..!
ஊரடங்கு உத்தரவு
ஊரெங்கும் திறப்பு
மதுபானக்கடை..!
~பிரியமுடன் பிரியா 🙏🏻

மஞ்சுமது மெல்லவே மழை பொழிந்திட
அஞ்சி மயிலோ ஆடியசைந்து நடைபோட்டிட
கொஞ்சமே உணவினை கொத்தித் தின்றிட
கெஞ்சியே தன்னவளைக் கவர தோகைவிரித்தாட
தஞ்சமெனக் கோவில் தேடி வந்திட்ட
வஞ்சியோ இதனை விரும்பிக் கண்டிட
சஞ்சல மனமது சடுதியில் குறைந்திட
நெஞ்சமது மகிழ்விலே நெகிழ்ந்து மலர்ந்திட
நெஞ்சுடை யோன்பதம் நாடி போற்றிட
பஞ்செனக் கவலைகள் பறந்து சென்றிட
விஞ்சிய பேரமைதி விரைவில் வந்திட
செஞ்சமது தெளிவதனை சிந்தை பெற்றிட
துஞ்சுமது கண்கள் தானாகத் தழுவிடவே..!
மஞ்சு – வெண் மேகம்
அஞ்சி – தலைவன்
செஞ்ச – முழுதும்
துஞ்சு – உறக்கம்
நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்த வரிகள்…
~பிரியமுடன் பிரியா 🙏🏻
நடக்கக் கற்றுத் தந்து
விழுந்த போதில்
எழுந்து நட
உன்னால் முடியுமென
ஊக்கம் தந்த அப்பா…
மின்சாரம் போய்விட்டால்
இரவுத் தூக்கத்தை
இழந்து தன் துண்டை
விசிறியாக்கி வீசிய அப்பா..
வளர்ந்த பருவத்தில்
தோள் கொடுத்து
தடம் மாறாமல்
தாங்கி நின்ற
தோழன் அப்பா…
தவறு இழைத்தால்
திட்டித் தீர்க்காமல்
தட்டிக் கொடுக்க
தஞ்சமடைந்த நெஞ்சம் அப்பா…
தட்டில் நிறைந்த
உணவுதனை எனக்கு
ஒருவாய் ஊட்டிய பிறகே
உண்ணும் அப்பா…
பெண்ணியம் பேசாமல்
பெண்ணியம் போற்றும்
கதாநாயகன் அப்பா…
வானம் பார்த்த பூமியாயினும்
வாடாமல் அருகன் துணைகொண்டு
வளமான பூமியாய் ஆக்க
உழைத்த தெய்வம் அப்பா…
தளர்ந்து போனால்
இரவு போய் பகல் வரும்
நிச்சயமென
தன்னம்பிக்கை ஊட்டிய
ஆசான் அப்பா…
சிறுக சேர்த்துப்
பெருகக் கட்டி எனக்குப்
பொன் நகை பூட்டி
புன்னகையோடு
அழகு பார்த்த அப்பா…
எந்த வேலையாயினும்
எடுத்த காரியத்தை
எள்ளவும் குறையின்றி
முடிக்கக் கற்றுத்தந்த
ஆசான் அப்பா…
தனக்கென சேர்க்காமல்
தன் சந்ததிக்குச் சேர்த்த
தனவங்கி அப்பா…
பிள்ளைகளைத் தன்
சொத்தாகக் கருதி அன்பை
அள்ள அள்ளக் குறையாமல்
கொடுத்து வாழும்
கோடீசுவரர் அப்பா…
சங்கடம் பலவர
கண்கலங்கி நிற்கையில்
தன் மடி தாங்கி
என்பலம் என்னவென
எடுத்துரைத்த
தாயுமானவர் அப்பா..!
ஏழேழு சென்மத்திற்கும்
உன் மகளாய் வந்து உதித்து
உன் அன்பில் திளைத்து
உன் தோளில் பவனி வந்து
உன் மடிசாய்ந்து உறங்கி
உன் பேரப் பேத்திகள்
உன் தோளிலாடி
உன் தாலாட்டு கேட்டு
உன்னருகில் வளர
ஆசை அப்பா…
~பிரியமுடன் பிரியா
6/21/20
அனைத்து தந்தையர்களுக்கும்
இனிய தந்தையர் தின
நல்வாழ்த்துக்கள் 💐💐💐

கம்பளம் விரித்து
கவிதை பாடியது
மலர்கள்…
அலர்ந்த பூக்களின்
புன்னகையில் புலர்ந்தது
பொன்னான நாள்…
பூக்கள் கூடி முடிவெடுத்தன
அவள் வரும் பாதையில்
மட்டும் தான் விழுவேனென…
பாரத்தைத் தாங்கும்
பூமித்தாய்க்கு பூச்சூடும்
உதிர்ந்த மலர்கள்…
காற்று காதோடு
சொன்ன கதைக்குக்
குலுங்கிச் சிரித்தன
மலர்கள்…
புல்வெளியில்
பூக்களின் மேடை
யார் வருகைக்கோ..?!
~பிரியமுடன் பிரியா
My thoughts and lyrics
A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.
My thoughts and lyrics
Longreads : The best longform stories on the web
The latest news on WordPress.com and the WordPress community.