
வண்டை அழைத்தது வாவென்று அலர்ந்திட்ட
வண்ணமான பூவினின் வாசமும் – திண்ணமாக;
காற்றின் வழியே கிடைத்திட்ட சேதிதனை
ஏற்று மதுண்ணவந்த தின்று…
பிரியமுடன் பிரியா 🌻
My thoughts and lyrics

வண்டை அழைத்தது வாவென்று அலர்ந்திட்ட
வண்ணமான பூவினின் வாசமும் – திண்ணமாக;
காற்றின் வழியே கிடைத்திட்ட சேதிதனை
ஏற்று மதுண்ணவந்த தின்று…
பிரியமுடன் பிரியா 🌻

நித்தம் வந்து
நித்திலமாய் மின்னும்
ஏகாந்த இரவில்
எழிலாக உலவும்
மொட்டை மாடியில்
குளிர் வீசும்
ஏழை வீட்டில்
விளக்காய் ஒளிரும்
பித்தன் சடையில்
பிறையாய் இருக்கும்
கவிஞன் கவியில்
கதாநாயகி ஆகும்
மழலை கையில்
பொம்மையாய் மாறும்
காதலன் கடிதத்தில்
பவனி வரும்
பாவையின் மனதில்…
~பிரியமுடன் பிரியா 💕

அம்மா என்றால் கரு
அம்மா என்றால் கருணை
அம்மா என்றால் கம்பீரம்
அம்மா என்றால் கடமை
அம்மா என்றால் கண்ணியம்
அம்மா என்றால் கட்டுப்பாடு
அம்மா என்றால் சிறப்பு
அம்மா என்றால் கொடை
அம்மா என்றால் மன்னிப்பு
அம்மா என்றால் உயிர்
அம்மா என்றால் உணர்வு
அம்மா என்றால் உலகம்
அம்மா என்றால் ஒளி
அம்மா என்றால் நம்பிக்கை
அம்மா என்றால் ஆக்கம்
அம்மா என்றால் குரு
அம்மா என்றால் நட்பு
அம்மா என்றால் காவல்
அம்மா என்றால் இயற்கை
அம்மா என்றால் மழலை
அம்மா என்றால் கடவுள்
~பிரியமுடன் பிரியா 💕

உழவு காக்கும்…
கலப்பை எழுதும் கவிதை நிலத்தில்
அலகு வளரும் அழகு – மலராய்;
உலர்வாய் மனதில் உவகை கொடுக்கும்
உலகினைக் காக்கும் உழவு…
அலகு – கதிர்
உலர்வாய் – ஈரமாய்
~பிரியமுடன் பிரியா 🌾

முடிவில்லா முடிவொன்றின்
முடிச்சை அவிழ்க்க
மதில் மேல் பூனையாய்
தவிக்கும் மனம்.
எட்டாதவொன்றை
புளிக்கும் பழமென
விட்டுவிலகிய நரிமனமாய்
மறக்கச் செய்யும்
சிந்தித்த மூளை.
மீண்டும் மீண்டும்
கந்துவட்டிக்காரனுக்குக் கூறும்
தவணைச் சொற்களாய்
உருண்டோடிக்
கொண்டேயிருக்கிறது நாட்கள்.
தினம் மாற்றும்
சட்டையா நான்
சாட்டையடி கேள்வியோடு
நகர்கிறது மனம்.
~பிரியமுடன் பிரியா

சரவண பவனே சண்முகனே வேலவனே
மயிலோனே வாகனம் மயில் மீதேறி
வேலாயுதம் கொண்டு வினை களையவே
விரைவில் வந்திடுவாய் வேண்டி நின்தாள்
பணிந்து நின்றிடும் பக்தனுக்கு அறியாமையகற்றி
ஞானம் நல்கிடுவாய் ஞானசேக ரனனே
தெய்வானை வள்ளியோடு தம்பதி யராய்
காட்சி தந்து கந்தனே எமக்கு
அருள்வாய் அமைதி அயில்வேலவனே என்றும்
யாமிருக்க பயம் யாதுமில்லை என்றுரைத்து
கருணை விழியால் காத்திடு குருவாய்
நிமலனின் மகனே நாதனே குகனே!
~பிரியமுடன் பிரியா 🙏🏻
பாவகை: அகவல் பா

வண்ணங்கள் இல்லாத வானமழை கொட்டிடக்
கண்ணைப் பறித்துக் கனிந்ததே – எண்ணமும்
வர்ணமாகத் தோன்றி வரையவே உள்ளமும்
நிர்மலமாய் ஆனதன் றோ…
~பிரியமுடன் பிரியா 💕

வானில் சிறகடித்துப் பறந்து
சுதந்திர காற்றை இழுத்து
சுவாசிக்கும் தருணம்
எழுப்பொலி அடித்து
தரை இறக்கியது
கனவு உலகிலிருந்து…
நெஞ்சைக் குறிபார்த்துவர
வரும் சொல்லம்புகள்
மலர் அம்புகளாக மாறுவதன் மாயாமென்னவோ கனவில்…
இறையடி சேருகிறேன்
விழிக்கும்முன் தேடுகிறேன்
சொர்க்கத்தில் இருக்கிறேனாயென
முளைத்தது
மும்மலங்கள் கனவிலும்…
வெள்ளைத்தாள்கள்
நீலமையிட்டு நிரம்புகின்றன
சிவப்பு மையிட்ட எண்களை
காணவேண்டாமென
கண்கசக்கி எழ
விடிந்தால் ஆண்டு தேர்வு…
திக்கு தெரியாத
பாலைவனத்தில் பயணம்
மண்ணை சுழற்றி கண்ணை
மறைத்தது சூறாவளி
தீடிரென இருகரங்கள் இழுத்து
நெஞ்சோடு அனைத்தது
முகம்பார்க்கும்முன் முழித்துவிட
கணவனின்
கையனைப்பில் நான்…
முதல் பக்கத்தில்
கையெழுத்திட்டேன்
வாசகர்களுக்கு…
கனவில் எழுதிய
கவிதைப் புத்தகத்தில்…
~பிரியமுடன் பிரியா 💕

பள்ளிப் பாடங்கள்
மட்டுமல்லாது
வாழ்வு சிறக்க
தினம் ஒரு திருக்குறள்
தமிழ் நீதி உணர
கொன்றை வேந்தன்
ஒழுக்க நெறி நிற்க
ஆசாரக்கோவை
கணிதவியல் கற்க
கணக்கதிகாரம்
ஆனைமுகத்தன் துதிபாட
விநாயகர் அகவல்
கந்தனை வழிபட
கந்தர் அனுபூதி
சந்த நயம் கற்க
திருப்புகழ்
சிவனடியார் சிறப்பறிய
பெரியபுராணம்
சிந்தனை வளம் பெருக
அபிராமி அந்தாதி
திருமண வாழ்வு சிறக்க
தொல்காப்பியம்
கற்பனைத்திறன் வளர
சிலப்பதிகாரம்
இதிகாசம் அறிய
இராமாயணம் மகாபாரதம்
அட்டாங்க யோகம் பயில
அரிய திருமந்திரம்
வரலாறு கற்க
பத்துப்பாட்டு
வாழ்வியல் கற்க
எட்டுத் தொகை
அறம்பல கற்க
பதிணென்கீழ்கணக்கென
தகுந்ததைத் தேர்ந்தெடுத்து
தக்க சமயத்தில் பயன்படுத்த
ஒன்றிப் படித்து வாழ்வில்
ஒண்மை ஓங்க
ஒப்புரவு ஒழுக
ஓகை பெருக
ஓங்காரம் உருப்போட்டு
ஓதுவது ஒழியேல்..!
ஒண்மை – செழிப்பு
ஓகை – உவகை
~பிரியமுடன் பிரியா 🙏🏻

கொத்தித் தின்னும் சொப்பு இதழும்
செக்கச் சிவந்த நீண்ட மூக்கும்
கொஞ்சும் மொழி பேசும் அழகும்
தத்தி தாவும் செல்ல அஞ்சுகமே
விருந்துண்ண குடும்பமாய் வந்தாயோ
கூடி குலவி மகிழ்ந்து உண்டாயோ
உள்ளம் கொள்ளை போனதே
என்கூட்டைத் தேடி மனம் ஓடுதே..!
~பிரியமுடன் பிரியா 💕
My thoughts and lyrics
A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.
My thoughts and lyrics
Longreads : The best longform stories on the web
The latest news on WordPress.com and the WordPress community.