கூடிக் களித்திட…

கொஞ்சும் மொழிபேசி கூடிக் களித்திட
எஞ்சிய உணவினை இன்பமாய் – அஞ்சுகமும்
கூட்டாய் பகிர்ந்துண்ணக் கண்டுமனது ஏங்கியது
கூட்டுக் குடும்பம் நினைத்து…

~பிரியமுடன் பிரியா 💕

பூமியின் ஆட்டம்…

விண் முட்டும்
அடுக்ககங்கள்
நகரினில் முளைக்க ஆற்றுப்படுக்கையில்
வரம்பின்றி மணல் அள்ளப்பட்டது
சுயநலம் பேணும் மனிதத்தால்..
வானம் பொய்க்க
நிலமெல்லாம் மலடாக நகர்நோக்கி நகர்ந்தது கிராமங்கள்.
மக்கள் நெருக்கத்தின் நீர் தேவைக்காய்
நிலமகளைச் சல்லடையாக்கினான் ஆழ்துளைக் கிணறுகளால்.
வலித் தாளா நிலமகள்
சாய்ந்து விழுகையில்
அடுக்ககத்தின் உச்சி அறை
தரையைத் தொட்டு
கொண்டிருந்தது.
மண்ணில் புதையுண்டவர்கள்
பூகம்பமென அலறிக் கொண்டிருப்பது
வானம் வரை
கேட்டுக் கொண்டிருந்தது.

~பிரியமுடன் பிரியா 🙏🏻

மெளன மொழி…

மெளன மொழி அழகு
அதைவிட உன் கால்
கொலுசு பேசும்
மொழி அழகோ அழகு…

உன் பாதம் நீரில்
நனைய
என் நெஞ்சம்
குளிர்ந்தது…

பாசியே
வழுக்கி விழுந்தது
உன்னைக் கண்டு…

உன்
பாதம் பட்டதால்
மோட்சம் பெற்றன
மீன்கள்…

உன் கொலுசுச்
சத்தத்தில் நதி நீர்கூட
நகர மறுக்கிறது…

முத்தாய் மாறி
உன் பாதங்களை
முத்தமிடக் காத்திருந்தன
குளக்கரையில் மீன்கள்…

~பிரியமுடன் பிரியா 💕

வெட்கிப்போய்…

வெட்கிப்போய் உறைக்குள்
ஒளிந்து கொண்டது
செவ்வல்லி இதழழகில்
உதட்டுச்சாயம்…

நித்திலம் சிப்பிக்குள்
உறையாமல் போனது
உன் பல்லழகில்…

இரவிவர்மன் ஓவியம்
உயிர்பெற்றதோவென வியந்தனர்
நீ வீதியில் நடைபோட…

மருதாணிச் செடி
சிவப்பதற்கு
கடன் கேட்டது
உன் கைச்சிவப்பழகில்…

உன் வீட்டு மொட்டை மாடியில்
மட்டும் மழைச்சாரல் அடித்தது
நீ தலை துவட்டுமழகில்…

வானவில் எட்டாம்
வண்ணத்தைச் சேர்க்க
விண்ணப்பித்தது
உன் வன்ன(அழகு) நிறத்தில்…

~பிரியமுடன் பிரியா 💕

தேவதை நீ…

தேவதை நீ…

தெவிட்டாத கீதமும் தேனாகப் பாய்ந்து
அவிட்டம் ஒளிநாண்மீன் ஆடி – கவிதை
வடித்திட ஆனந்த பூமிக்கு வந்த
அடிவான தேவதை நீ…

அவிட்டம் – நட்சத்திரத்தின் பெயர்
நாண்மீன் – நட்சத்திரம்

~பிரியமுடன் பிரியா

சிலேடை வெண்பா…

குழந்தையாகி…

எங்கள் வீட்டருகில் ஆலமரமொன்று விரிந்து பரந்து இருந்தது.
பிறந்தபொழுதினில் வலுவான கிளையொன்றில் அம்மாவின் பருத்தி புடவையில் ஆனைக்கட்டி தாலாட்ட
ஆழ்ந்துறங்கினேன்.
பிள்ளைப்பருவந்தனில் விழுதில் ஊஞ்சல் கட்டி விளையாட விண்ணைத் தொட்டேன்.
பள்ளிப்பருவந்தனில்
தோளில் சாய்ந்து
பேசிப்பழகும் தோழியாகினேன்.
பருவமெய்தியபொழுதினில்
ஏகாந்த இரவில் தனிமை நாடி தஞ்சமடைந்து நித்திரையில்லா
குமரியாய் கனவு கண்டேன்.
மணமாகி கடல்கடந்து வந்தபொழுதினில் தாரைத்தாரையாக கண்ணீர்விட்டு கட்டிப்பிடித்து முத்தமிட்டு பிரியாவிடைக் கொடுத்தேன்.
ஆண்டு பலகடந்து
மீண்டும் ஊருக்குச் சென்றபொழுதினில்
காத்திருந்த மடிதனில் படுத்துறங்க என்னை
குழந்தையாக்கிக் கொண்டது.

~பிரியமுடன் பிரியா 💕

எச்சம் விருட்சம்…

விழுந்த பறவையின் எச்சமதில்
விருட்சம் தோன்றியது
விருட்சம் தழைத்து இலைகள் அரும்பியது
இலையின் துளைகள் நீரை வெளியேற்றியது
நீரின் ஈரப்பதம் மேகம் உறிந்தது
மேகம் உறிந்து மழை பொழிந்தது
மழை பொழிந்து மண் செழித்தது
மண் செழித்து செடி வளர்ந்தது
செடி வளர்ந்து பூக்கள் மலர்ந்தது
பூக்கள் மலர்ந்து தேன் தந்தது
தேன் தர வண்டுக்கு உணவானது
வண்டு பறந்து மகரந்தச் சேர்க்கைக்கு வித்திட்டது
மகரந்தச் சேர்க்கை இனப்பெருக்கம் பெருக்கியது
இனப்பெருக்கம் பெருகிக் கனி வந்தது
கனி வந்து பறவைக்கு உணவானது
பறவை கழிவானது மண்ணில் விழுந்து எச்சமானது

இல்லது தோன்றாது.
உள்ளது அழியாது.

~பிரியமுடன் பிரியா 💕

தாலாட்டும் தாய்…

ருசிக்கும் இசையை ரசிக்கச் சமைத்துப்
புசிக்கவே வாழ்வோம் உயிர்…

துஞ்சு வராத துயர இரவிலே
நெஞ்சத்தைத் தாலாட்டும் தாய்…

துள்ளலான பாட்டிலே தூறலாய் இன்னிசையில்
உள்ளம் நனைக்கும் மழை…

இசைக்குப் பிடித்த இனிய புதல்வன்
இசைஞானி வாழ்கப்பல் லாண்டு…

~பிரியமுடன் பிரியா 🎶

கால்தடம்…

கால்தடம்…

அந்தி சாய்கையில்
அழகோவியமாய்
நெஞ்சம் தொட்டவள்
வீதி வழி சென்றாள்.
அன்பெனும் மலர்கொண்டு
வார்த்தைச் சரம் தொடுக்க
அவளோ வசவுகளைக் கொட்டி
நெருப்பு பார்வையொன்றை வீசினாள்.
நெஞ்சத்தில் ஊசியொன்று தைத்து
சல்லடைக் கண்ணாகப் பொத்தலாக்கியது.
எட்டாக் கனவாகி விடுமோவென
எண்ணிக் கடக்கையில்
ஓரப்பார்வையொன்றை
விசயனின் அம்பென வீசிச்சென்றாள்.
அப்பார்வையில் களிமண்
அச்சாக
நம்பிக்கை கொண்டது மனம்.
பின்னொரு நன்னாளில்
காத்திருப்பு கலைந்துபோனது
வீதி வழிச் சென்றவள் வீட்டினில்
கால்தடம் பதித்து வாழ்க்கைத்
துணையாய் வந்தபொழுது.

~பிரியமுடன் பிரியா 💕
5/4/2020

கவிதை ஒன்று பிறக்க…

ஆனந்தம் வந்து
அகத்தில் அமர
கற்பனை ஊற்றாய்
கருத்தில் உதிக்க

மெல்ல மனது
சிறகை விரிக்க
வானில் எட்டி
சிட்டாய் பறக்க

வசந்தம் வந்து
வாழ்வைத் தீண்ட
வரிகள் இங்கு
வளமாய் தோன்ற

இட்டன் அருள்
இட்டமாய் கிடைக்க
சொற்கள் வந்து
சோர்வின்றி விழ

சிந்தும் புன்னகை
செவ்விதழில் வழிய
சிந்தனையில் அழகு
சந்தம் பிறக்க

நினைவுகள் எல்லாம்
நெஞ்சில் பூக்க
புனைவுகள் இங்கே
புதிதாய் தோன்ற

உணர்வுகள் எல்லாம்
ஊற்றாய் பெருக
உவமை எல்லாம்
உள்ளம் நாட

கண்கள் இங்கே
காகிதத்தைத் தேட
கரங்கள் மீண்டும்
கவிதை எழுத

விரல்கள் இங்கே
பேனா ஏந்த
இனிதே கவிதை
ஒன்று பிறக்க(கிறுக்க)…

~பிரியமுடன் பிரியா 💕