அலையில் நனைந்த சிலை…

அழகான பௌர்ணமி
நாளொன்றில் தங்கத் தாரகையாய்
மின்னும் நிலவின் ஒளியில்
நர்த்தனமாடும் நட்சத்திரங்களுக்கு
சங்கீதச் சாரல்கள் தெளித்து
சுருதி தப்பாமல்
தாள இலயம் இட்டுக்கொண்டிருந்தது.
கரைகாணாத
காதலுடன் கால் நனைக்க
வெண்திரை சரங்கள்
வேகமாய்த் தீண்டி
நொடியில் பட்டென
கடலுக்குள் போன பரிசத்தில்
உணர்வுகள் அலையென எழவே
கரையோரமாய் நடைபோட்டு
தேர்போல் மெல்ல அசைந்தாடியது
பிரம்மன் வடித்த சிலையொன்று.

~பிரியமுடன் பிரியா 💕

அலையும் ஆமையும்…

ஆமையொன்று கடலிலிருந்து
கரை நோக்கி வந்தது
தன் இனம் தழைக்க.
வெளிவந்த பிஞ்சுகள்
சில தடம்மாறா
கடலில் இறங்க
சில தடம்மாறி
தரையில் ஊறும்.
அலையில் ஆனந்தமாய்
நொக்கென நீந்தும்
ஆமையென இன்பத்தை
தன்னில் தேடிடும்
மாந்தருக்கு வாழ்வில் சுவைகூட
தரையில் தளர்வாய்
நடக்கும் ஆமையென இன்பத்தை
வெளியில் தேடிடும்
மாந்தருக்கு வாழ்வில் சுமைகூட
தேடுதலுக்கு முன்
தேர்ந்தெடுக்க வேண்டும்
தேடலின் தளத்தை..!

~பிரியமுடன் பிரியா 💕
5-1-20

மேகத் தாரகை…

சாளரமற்ற அலுவலக
அறையொன்றினுள்
சோ வெனும் சத்தம் செவியில் விழ
எட்டிப் பார்க்கிறேன் கதவு திறந்து.

ஆர்ப்பரிக்கும் தோழி
மேகத் தாரகை மோகம் கொண்டு
விண்ணுலகிலிருந்து
மண்ணுலகம் வந்திருந்தாள்.

அலுவலக அச்சத்தை
உளியின்றி உடைத்து
பளிக்கு பாவையை ஓடிச்சென்று
கட்டிப்பிடித்து முத்தமிட
கானக் குயில் உள்ளிருந்து
கானம் பாட யாக்கை மயிலாக மாறி
தோகை விரித்தாடியது.

புழுதி ஆடையணிந்த வாகனத்திற்கு
தூய ஆடை அணிவித்து
நெருப்பு துண்டுகளால் காயம்பட்ட சாலைக்குச் சில்லென ஒத்தடம் தந்து
உயிரில்லா புல்லுக்கு உணவாகி
உயிர் தந்தாள்.

ஒய்யென மோகம் தணிந்து திரும்ப
வருவேனென மாயமாய் மறைய
ஒண்டினேன்
ஓட்டிற்குள் ஆமையென சாளரமற்ற அறையில்….

~பிரியமுடன் பிரியா 💕
4-30-20

மரியாதை நிமித்தம்…

அதிகாலையில் எழுப்பொலியோடு
ஆரம்பமானது
அன்றைய ஓட்டம்.
நந்தையின் ஓடாய் ஆகிவிட்ட வேலைப் பளு எனக்கூறும் உறவுக்கு
வாழ்த்தொன்றை சொல்ல
அலைபேசியில் அழைப்பது கூட கானல் நீராக
ஆகுமோவென எண்ணுகிறேன்.
அலைபேசியில் விடாது
கருப்பாய் அழைத்து
நலம் நலமறிய ஆவலென
உரைக்க ஒரு சொல்லை
பூவெனத் தொடுக்க முயலுகிறேன்.
நலமறியாமலேயே துண்டிக்கப்பட்டது இணைப்பு
மரியாதை நிமித்தமின்றி
அலுவல பணி நிமித்தத்தோடு.

~பிரியமுடன் பிரியா 💕

புகைப்பட விருது…

சூழ்ந்த குப்பையில்
சுடும் மணலில்
கிழிந்த துகிலில்
உருட்டும் கோலியில்
மலர்ந்த முகத்தில்
உட்கார்ந்த விதத்தில்
வைக்கும் வணக்கத்தில்
எடுக்கப்பட்டான் புகைப்படத்தில்..
படம் வென்றது
சிறந்த புகைப்பட விருது…

சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டும் எனச்
சுடும் மணலின் அனுபவத்தால்
கூறும் பிஞ்சு பருவம்…

ஆடம்பர ஆடைகளின்
ஆசையை அழித்தால்
ஆயிரம் ஓட்டைகளை
அடைக்கலாம் புரிந்தது
அந்த சிறுவனின் ஆடையில்..

கந்தலே ஆகாத ஆடையைக் கரித்துணியாய் பயன்படுத்தும்
பாரினில் பலர்
பாரியாக மாறலாம்…

கிழிந்த துகில் கண்டு
காசு தரச் சிறுவன் வேண்டாம்
அப்பா வாங்கி தருமென
கம்பீரமாய் வணக்கம் வைத்து
ஏற்பது இகழ்ச்சியை
உணர வைத்தான்…

~பிரியமுடன் பிரியா 💕

நாட்டு கோழி ஒன்று…

நாட்டுக் கோழி ஒன்று
பறந்து திரிந்து சென்று
கண்ட குப்பையைக் கிண்டு
தூசியாகப் பறந்தது விண்டு
மூக்கை மறைத்தது துண்டு
அங்குச் சின்ன வாண்டு
கோலிக் குண்டு கொண்டு
வீதியில் ஓடிச் சென்று
விரலில் உருட்டக் கண்டு
நான் பேச அண்டு
அவனின் கந்தல் கண்டு
மனம் பட்டது காண்டு
கொடுத்தேன் என் துண்டு
மறுத்தது வேண்டாம் ஈண்டு
நானோ முகம் இண்டு
கேட்டேன் ஏன் என்று
சொன்னது செல்லச் செண்டு
கண்களில் கனவு கண்டு
வரும் இந்த ஆண்டு
தை பொங்கல் அன்று
அப்பா தருவார் முண்டு
கூடவே சட்டை இரண்டு
புதுத்துணி அணிய உண்டு
கேட்டேன் படித்து என்னாவாயென்று
கூறினான் விளையாட்டில் வென்று
பெரிய ஆளாவேன் என்று
வணங்கினேன் அவனை இன்று
முகத்தில் சிரிப்பு பூண்டு
வைத்தான் சல்யூட் பாண்டு…!

கிண்டு – கிளறியெடு
விண்டு – காற்று
அண்டு – அருகில் வந்து
காண்டு – துன்பம்
ஈண்டு – இப்பொழுது
இண்டு – தொட்டாற்சிணுங்கி செடி
முண்டு – வேட்டி

~பிரியமுடன் பிரியா 💕

இடைவேளை…

உறவுகள் தழைக்க
உற்றோர் மனதில்
நிலைக்க உறவுக்குள்
வேண்டும் இடைவேளை

மனதைப் படிக்கும் மௌன போராட்டத்தில் வரும்
கண்ணீர் கேவல்களுக்கு
வேண்டும் இடைவேளை

தோல்வியின் முத்திரையைக்
கிழித்தெறிந்து வெற்றி
சின்னத்தைப் பதிக்க
வேண்டும் இடைவேளை

சீரிய சிந்தனை
சிந்தைக்குள் எழச் சீழ் பிடித்த
எண்ணத்திற்குத் தடைபோட
வேண்டும் இடைவேளை

இலகு வாழ்வு வாழ
இனிமை கூட
எதிர்பார்ப்பிடம் இருந்து
வேண்டும் இடைவேளை

தேடல்களுக்கு
விடைகாண விழைகையில்
நம்மிடமிருந்தே நமக்கு
வேண்டும் இடைவேளை

~பிரியமுடன் பிரியா 💕

உன்னை மொய்க்கும் கவிதை …

இடி சத்தம் கூட
இனிமையானது
நீ அச்சோ அருச்சுனா
அச்சத்தில் அணைக்கையில்…

வண்ணாத்திப்பூச்சிகளின்
வன்னம் மங்கியது…
நீ தோட்டத்தில்
உலவும் பொழுது…

நிர்வாணமாய்
காத்திருந்தது கயிறு
நீ போர்த்தும் ஆடைக்காய்…

நினைக்க வேண்டாமெனச்
சொல்லிவிட்டாய்
நினைக்கக்கூடாதெனச்
சொல்லிக்கொண்டே
உன்னை நினைக்கிறது மனம்…

நீ தேநீர் போடச்
சர்க்கரையை எடுக்கிறாய்.
சர்க்கரையை விட்டுவிட்டு
உன்னையே மொய்க்கின்றன
எறும்புகள்…

பக்கத்து வீட்டுக் குழந்தையைக்
கொஞ்சி முத்தமிடுமழகில்
மீண்டும் குழந்தையாகிட ஆசை…

~பிரியமுடன் பிரியா 💕

காத்திருக்கும் கடவுள்…

காரப் பொரி விற்று
காரமாக இருக்கும்
வாழ்வு மலரட்டும்
இனிப்பாக…

உடைந்த கூடை
சொல்லும் உழைக்கும்
வர்க்கத்தின் நிலை…

கண்ணைப் பறிக்கும்
வண்ணமாய் இருக்கும்
வயிற்றை நிறைக்கும்
காரப் பொரி வாங்கும்
கரங்கள் கொடுக்கும்
காசை பார்க்கும்
தாத்தாவின் முகமும்
மலர்ந்து சிரிக்கும்…

ஆளில்லா சாலையில்
அடுத்து வரும் பக்தனுக்குக்
காத்திருக்கும் கடவுள்…

மழையின் ஒரு துளி
மண்ணை வாழ வைக்கும்
நம்மின் ஒரு ரூபாய் துளி
இவரை வாழவைக்கும்…

மொறு மொறு பொரி
நமுத்துப் போகாமல் விற்குமா
சந்தேகத்தை எடுத்துரைக்கும்
நெற்றியின் கவலை கோடுகள்…

~ பிரியமுடன் பிரியா 💕

வாழவைப்பான் அரி…

நடைபாதை சாரி
கூடை நிறையக் காரப் பொரி
கூவிவிற்கும் தாத்தா மாரி
காத்திருக்கிறார் வருவானா பாரி
மிதிவண்டியில் ஏறி…
கை நிறையக் காரப் பொரி
வெட்டிய தக்காளி எலுமிச்சை நெரி
நறுக்கிய மிளகாய் வெங்காயம் தோலுரி
போட்டு தினத்தந்தியில் கிரி
போலக் குவித்துத் தருவார் மாரி
நாவில் எச்சில் ஊறி
காரத்தில் கண்கள் சோரி
கொட்ட இன்னும் கோரி
வாங்கித் தின்பான் பாரி
சுவையே தாத்தாவின் மூரி
எனப் பாராட்டுக்களை வாரி
வழங்கி பணம் கொடுக்கும் பாரி
மனதில் காரப் பொரி வேரி
நிறையப் பார்க்கலாம் தாத்தா மாரி…
செல்வான் மிதிவண்டியில் ஏறி…
இருவரையும் முகம் மலர சிரி
என வாழ்த்தி வாழவைப்பான் அரி…

சாரி – பக்கம்
நெரி – கையால் நிமிண்டி
கிரி – மலை
தோலுரி – தோல் நீக்கி
சோரி – மழை
மூரி – சிறப்பு
வேரி – வாசனை

~பிரியமுடன் பிரியா 💕