கருமை நிறம் கொண்டவரைக் கண்டாலே தொட்டால் எடுத்துப் பொட்டு வைத்துக் கொள்ளும் கருமை வண்ணமென முகம் சுளித்தவரும் உப்புமா அடிப்பிடித்தாலே காந்தல் கருப்பாக இருக்கிறதெனச் சாப்பிடாமல் தவிர்த்தவரும் மாநிறம் கூட மருமகளாக வரத் தகுதியில்லையென நினைத்தவரும் கொண்ட பக்கத்துவீட்டு செவத்த மாமியின் திதியன்று அதே குணம்கொண்ட அவர் மகன் அன்னம் வைத்து உணவூட்டலுக்கு கா காவென அழைக்க வந்ததோ ஓர் அண்டம் காக்கை. அண்டம் காக்கை உருவில் அம்மாவைக் கண்ட மகனின் மனதில் படிந்த கருமைக்குப் பலத்த அடி.
இரைச்சல் இல்லா பேரமைதி கொண்ட நாளொன்றில் மக்கள் செவ்வெனே கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். மனதிற்கு நெருக்கமானவர்கள் இன்பத்தை மட்டுமே அளித்து எதிர்பார்ப்புகளை விருப்பமுடன் பூர்த்திச் செய்கின்றனர். அரசியல் என்ற வார்த்தை அகராதியில் இல்லாமல் அழிந்து போக வண்ணாத்திப் பூச்சி போல மனம் ஆனந்தத்தில் பறக்கிறது. தீடிரென பக்கவாட்டிலிருந்து எழுப்பொலி சத்தம் காதைப் பிளக்க அடித்துப் பிடித்து எழ கண்டது கனவு என்று தெரிந்தது. நினைவில் இருக்கையில் கனவிடம் விண்ணப்பம் வைத்தேன் ஏமாற்றம் இல்லாத கனவுகள் வேண்டுமென எங்கே கனவில் விண்ணப்பம் வைத்தால் கனவாகி விடுமோ என்று.
கடமை அறிந்து காலத்தில் பணியாற்று நேர்மை வழி நடந்து நல்லனவற்றைச் செய் மெய்வழியில் நடந்து பொய்மை தவிர் கற்ற நெறியில் நடந்து அறத்தில் நில் ஒற்றுமை கடைப்பிடித்து ஊரோடு வாழ் பல்லுயிர் மதித்து ஒப்புரவு ஒழுகு..!