
கண்டேன் விழுந்தேன் காதலில்…
அந்தி சாயும் வேளையில்
அழகு மலர்ச் சோலையில்
தென்றல் சன்னமாக வீசுகையில்
அன்பன் புல்லாங்குழலில்
ஆனந்த இராகம் இசைக்கையில்
தாமரை தலையாட்டி இரசிக்கையில்
கமல மொட்டுகள் மலரத் துடிக்கையில்
கானப் பறவைகள் பாட மறக்கையில்
கிள்ளைகள் பேச்சிழந்து கேட்கையில்
கன்னியிவள் கண்விழி மயங்குகையில்
கரங்கள் தோளோடு இணைகையில்
சுவாசங்கள் பரிமாறப்படுகையில்
யாக்கை இறகாகப் பறக்கையில்
மயிலாக நர்த்தனமாடுகையில்
கொலுசுகள் தாளம் சேர்க்கையில்
வண்ணாடை குடையாக விரிகையில்
கார்கூந்தல் ஆடிடும் அழகினில்
இன்ப வெள்ளம் பெருகுகையில்
இட்டம் கொண்டு கண்ணசைவில்
இருமணம் இணைய இசைகையில்
கற்பனை கொண்டு வரைந்ததில்
கண்முன்னே காட்சியாய் விரிகையில்
காவியமான ஓவியம் உயிர்பெற்றதில்
கண்டேன் விழுந்தேன் காதலில்
மீண்டும் கண்ணன் இராதையில்…
~பிரியமுடன் பிரியா 💕









