என்னுள் நான்…

தனிமையே! உன்னையே தேடியே நிதமும்;

இனிமையுடன் நானாக ஏற்றல்; – நினைவா?

தியானமா? இல்லையேல் சாபமா?; அன்பர்

உயிராகத் தந்த வரம்…

அன்பர் – அன்பிற்கு உரியவர்

பொருள்:

தனிமையைத் தேடுவது அன்பிற்கு உரியவர்கள் தந்த வரம்.

~ பிரியமுடன் பிரியா 💕

ஐயமிட்டு உண்…

மா மா என அழைத்திடும்
ஆவின் கூட்டம்
மும் மும் என முந்தி ஓடிடும்
முயலின் கூட்டம்
லொள் லொள் என நலம் நாடிடும்
நாயின் கூட்டம் எனப்
பல பல்லுயிர்களுக்குப்
பாசத்துடன் இரை கொடுத்தும்

கனிய கனியளிக்கும் மரம்
கடவுளுக்கு மலரளிக்கும் செடி
படர்ந்து காயளிக்கும் கொடி
பசியாற உணவளிக்கும் நெற்கதிர்
நிற்க நிழலளிக்கும் விருட்சம்
நித்தமும் நீரூற்றி வளர்த்தும்

தலைவாழை இலையில்
தித்திக்கும் இனிப்புடன்
உள்ளக் களிப்புடன்
உறவுடன் உறவாடி
வீடு வந்த விருந்தினருக்கு
விருந்து படைத்து
பிறகு உண்பதும்

உழைத்து உண்ணும்
உண்டிதனை தான்
உண்ணும் முன்
உடல் நிலை குறைந்தோர்க்கு
தட்டில் நிறைத்து
தன்னாலான உதவி செய்தும்

பசித்துப் புசிக்கும் முன்
பசியென்று நாடி வரும்
இல்லோருக்குச் சோறுதனை
இருகை கொண்டு இன்பமுடன்
அகம் மகிழ்ந்து அள்ளி தந்து
அறத்துடன் நடப்பதும்

இவ்வுலகில் இன்னுயிர்க்கு
ஈந்து இசைப்பட வாழ்ந்து
எஞ்சியதையே இன்பமாக
எண் சாண் யாக்கையின் வயிறுள்
இச்சையுடன்
இடுவதே ஐயமிட்டு உண்…!

~பிரியமுடன் பிரியா 💕

இவரின்றி அசையாது…

கோபுரம் போல்
குவிந்து தெருவோரம் கிடக்கும்
மக்கும் மக்காத குப்பையின்
மணத்தை நுகராமல் மூக்கை
கைகளால் மூடிய வண்ணம்
கடந்து செல்லும் நம்மில்

எத்தனை பேருக்கு இதனை
எள்ளவும் விடாமல் சுத்தம்
செய்யும் மாமனிதருக்கும்
சுவாசிக்கும் மூக்குண்டு என
நினைப்பதுண்டு..?

இவரின்றி ஓர் குப்பையும்
இம்மியளவு அசையாது
இயற்கையைப் பாதுகாக்கும்
இவருக்கு எம்மானலானது
இரு கை தூக்கித் தொழுது
இட்டேன் கழிவுகளைத் தொட்டியில்..

அகன்றது கொசுத்தொல்லை
அழகானது தெரு
அடுத்த வாரம் வந்த பெரியவருக்கு
அரும்பியது புன்னகை
அது தெருவைவிடவும்
அழகாய் இருந்தது..!

~பிரியமுடன் பிரியா

இரையை தேடி…

மழையின் துளி
விழுந்த நொடி
பசி தீர்ந்தது நெற்பயிர்களுக்கு..!

பணக்காரனுக்கும் வரும்
ஏழைக்கும் வரும் வேளைக்கு
பசி..!

தனி ஒருவருக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்
அழியும் பிச்சைக்காரர் இனம்..!

சத்தம் போட்டு
இருப்பதை உணர்த்தியது
பசித்த வயிறு..!

பசியின் பிணிக்கு
நிரந்தர உணவானது
அரளிவிதை..!

தட்டிலிருந்த சில்லறைகள்
சத்தம் சுருதி கூட்டியது
எழும் பசியின் ஓலத்திற்கு..!

~பிரியமுடன் பிரியா

இருளும் ஒளியும்…

பகலை இரவாக்கும்
இரவை பகலாக்கும்
ஒளிரும் பாலத்தின் மின்விளக்கு..!

இறுக்கப் பற்றினேன்
இருக்கமாய் அமர்ந்தேன்
இருட்டு பாலாத்தினடி பயணத்தில்..!

பட்டப் பகல் வேளையில்
எரிந்தது மின்விளக்கு நட்ட நடு சாலையில்
இருட்டுப் பாலத்தினடியில்..!

கணநேரம் கண் மூடி
கனவு கண்டேன்
கணவன் ஊர்தி ஓட்ட..!

மினுமினுத்து சொலிசொலித்து
சுடர்விட்டது கழுத்தாரம்
சுரங்கத்தின் மின்விளக்கு..!

என்னை என்னுள் தேடினேன்
கண்டேன் இனிமையின் மகிமை
தனிமையான ஊர்தி பயணம்..!

~பிரியமுடன் பிரியா

இதுவும் கடந்து போகும்…

தோல்விக்குப் பின் வெற்றி
அடைந்திடலாம்…
இடருக்குப் பின் இன்பம்
கிட்டிடலாம்…
குழப்பத்திற்குப் பின் தெளிவு
கிடைத்திடலாம்…
தனிமைக்குப் பின் துணை
வந்திடலாம்…
இருளுக்குப் பின் ஒளி
பிறந்திடலாம்…
அருளுக்குப் பின் இறைவனடி
சேர்ந்திடலாம்…
வெளிச்சத்தின் விடியலை எதிர்பார்த்துச் சென்றிடலாம்…
சிக்கெனச் சிறகை விரித்துப் பறந்திடலாம்…
சுதந்திரக் காற்றைச் சுவாசித்து
மகிழ்ந்திடலாம்…
இருப்பின் அருமை இல்லாதபொழுது
அறிந்திடலாம்..

~பிரியமுடன் பிரியா

புகுந்த வீடு…

வயசு எம்பதுக்கு மேலானாலும்
வீட்டில அறுபது வயசுப்புள்ள
வயிறு நெறயச் சாப்பிட்டானா
வைச்ச தட்டப் பாத்துப் பரிதவிக்கும்
தம் மக பேரன் பேத்தி எடுத்தாலும்
தான் பெத்தவளை பாட்டியாக
பாக்காமா வளத்தக் குட்டியாக
பொத்திப் பாதுகாக்கும்
கொள்ளுப் பசங்க
கோலாகலமா ஓடியாடக்
குடுகுடு கெழவியானாலும்
கோயிலுக்கு நோன்பிருக்கக்
குதியாய் குதிக்கும்
கல்யாணம் காட்சி
கருத்தா சந்ததிகளுக்கு
காலத்தில நடக்கக்
காசு சேர்க்கும்
அம்புட்டையும் சேர்த்து
அளவில்லா பாசத்தை
அடுக்கடுக்காக கொடுக்கும்
பெத்த மனம் பித்து
பொறந்த புள்ளைங்கச் சொத்துனு
வாழ்ந்த மகராசி
வாழ்வின் கடைசியில
புத்தி மறந்து
புள்ள மனம் கல்லுயென
புரியும் முன்னே
புத்தம் புது இடமாக
முதியோர் இல்லத்தில்
சேர்த்து விடுவது ஏனோ …

~பிரியமுடன் பிரியா 💕

அஞ்சாத நெஞ்சம்…

முதல் முறையாக 12 வரிகளான பஃறொடை_வெண்பா.

அஞ்சாத நெஞ்சம்…

சஞ்சல மற்று சிரிப்புடன் ஊர்விட்டு;
சஞ்சி தலையிலே சிக்கென; – நெஞ்சிலே
செஞ்சடையோன் மீதுள்ள சக்திகள் உந்தவே;
நஞ்சை எதிர்த்து நடந்து தினமுமே;
அஞ்ஞையின் கையில் அமுதம் உணவாக;
துஞ்சு பயிலத் துணிகளே – மிஞ்சின;
பிஞ்சிகள் இல்லா பெரிதான வாழ்வியலை;
குஞ்சுகள் கற்றன கல்வியாய் தந்தையிடம்;
வஞ்சி கணவருடன் வாழ்க்கை சிறக்கவே;
பிஞ்சுகளைத் தோளணைத்து பாதையில் – இஞ்சியுடன்;
பஞ்சங்கள் யாவும் பறந்திட காதங்கள்;
அஞ்சாமல் வந்தது நன்று…

அஞ்ஞை – மகள், துஞ்சு – உறக்கம்
பிஞ்சி – சோம்பல், சஞ்சி – பை
செஞ்சடையோன் – ஈசன்
இஞ்சி – வீரம், நன்று – சிறப்பு

~பிரியமுடன் பிரியா 🙏🏻

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்…

அன்பு ஊற்றாகப் பெருகட்டும்!
ஆசைகள் யாவும் பூர்த்தியாகட்டும்!
இன்பங்கள் வாழ்வில் நிறையட்டும்!
ஈகை குணம் பெருகட்டும்!
உழவு தொழில் சிறக்கட்டும்!
ஊற்றாக உவகை பெருகட்டும்!
எல்லோரின் மனம் நிறையட்டும்!
ஏணியில் வாழ்வு ஏறட்டும்!
ஐங்கரன் அருள் கிட்டட்டும்!
ஒற்றுமை வலிமை நிலைக்கட்டும்!
ஓங்காரம் மந்திரம் ஒலிக்கட்டும்!
ஔலியா வேண்டுதல் நிறைவேறட்டும்!

ஔலியா – பக்தர்கள்

அன்பான சொந்தங்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
💐💐💐

~பிரியமுடன் பிரியா 🙏🏻

காற்றாடும் நினைவுகள்…

காற்றாடும் நினைவுகள்…

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
நல்ல மலரும் நினைவுகள்
ஞாபகம் வருதே!

புத்தி தெரிந்த நாள் முதல்
புகுந்த வீடு சென்ற நாள் வரை
பசார் தெருவில் அலைந்து திரிந்த
பசுமையான காட்சிகள் வலம் வருதே

பொத்தான் அழுத்த விளக்கு எரியும்
பௌர்ணமி நிலவு போல ஒளி வீசும்
கொளுத்தும் வெயிலுக்குக் குளுகுளு
காத்து வீசும் காற்றாடி கனவில் வருதே

(ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..)

கை அசைந்தால் கானம் பாடி
கிண்கிண்யாய் ஓசை எழுப்பி
கன்னி வருவதைக் காட்டிக் கொடுக்கும்
கண்ணாடி வளைவிச் சத்தம் வருதே

காமாட்சி அம்மனுக்கு விளக்கு ஏற்றி
கதம்பம் மலர் மாலை சூட்டி
கிழமை வெள்ளி தோறும் அர்சனைக்குக்
குங்குமம் வாங்கினது கண்ணில் வருதே

(ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..)

வாரம் விடுமுறையில் கூடும் சந்தையில்
வண்ண பட்டாம்பூச்சி படபடத்து
வாங்க வா வா என்றழைத்த
வாசனையில்லா பூக்கள் மணம் சுற்றி வருதே

கைப்பிடி வைத்த கண்ணாடி எடுத்து
கண்ணிமைக்கு வைத்த மையைத் துள்ளும்
தங்க மீனாகக் கற்பனை செய்து கதைத்த
தோழிமார் தருணங்கள் துள்ளி வருதே

(ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..)

சுடும் வெயிலில் விடாது பேரம் பேசி
சரியக்கா பார்த்து விலை போட்டு
சந்தோசமாகக் கொடுங்கள் என வாங்கிய
சிங்கார பொட்டுகள் மின்னி வருதே

பாவாடைக்குப் பொருந்தப் பச்சை ரிப்பன்
பட்டுக் குட்டி அக்கா பெண்ணிற்குக் கிலுகிலுப்பை
அம்மாவிற்குக் கோபுரம் பூசும் மஞ்சள் தூள்
அன்புத் தம்பிக்குப் பம்பரம் வாங்கியது சுழன்று வருதே

(ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..)

ஆடித் திருவிழாவிற்கு இருபது ரூபா
அப்பா கொடுக்க பாட்டியிடம் ஐம்பது ரூபா
ஆட்டய போட்டு அம்மாவிடம் அடிபட்டு
ஆட்டம் ஆடியது ஓடி வருதே

கடல் கடந்து வந்தாலும்
காலம் உருண்டு சென்றாலும்
கால்கள் காதம் நடந்து சென்ற
கடைவீதி கண்ணில் கொண்டு வருதே

(ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..)

~பிரியமுடன் பிரியா💕