போதை மருந்து…

போதை மருந்து…

கனவுகளில் மிதக்கவைக்கும்
கானல்நீரை துரத்தவைக்கும்
கற்பை விலைபேசவைக்கும்
கதறித் துடிக்கவைக்கும்

புத்திசாலியை அறிவிலியாக்கும்
புன்னகையைத் தொலைக்கவைக்கும்
புகழை அபகரிக்கும்
போதைக்கு அடிமையாக்கும்

தன்னையே மறக்கடிக்கும்
தடுமாறி விழவைக்கும்
தன்மானம் இழக்கவைக்கும்
தன்னைச்சார்ந்தவர்களைத் துன்புறுத்தவைக்கும்

இளைஞரைக் குறிவைக்கும்
இருட்டைப் பிடிக்கவைக்கும்
இச்சையை அதிகரிக்கும்
இன்னலில்லையென நம்பவைக்கும்

விடத்தை விழுங்கிடவைக்கும்
விளையாட மறக்கவைக்கும்
வீட்டினுள் முடங்கவைக்கும்
வீதியில் நிற்கவைக்கும்

பெற்றோரைத் தள்ளிவைக்கும்
பணத்தைத் திருடவைக்கும்
பிஞ்சிலேப் பழுக்கவைக்கும்
பயத்தைத் தக்கவைக்கும்

குழிபறித்துத் தள்ளவைக்கும்
குப்பையில் உழலவைக்கும்
குருதியில் ஊறவைக்கும்
கூனிகுருகி நிற்கவைக்கும்

உண்மையைப் பொய்யாக்கும்
உணர்வினை மழுங்கடிக்கும்
உறவுகளை எதிரியாக்கும்
உயிரை மெல்லக்குடிக்கும்

காத்திருப்பை ஏற்கமறுக்கும்
காண்போரை முகம்சுழிக்கவைக்கும்
காலனைச்சடுதியில் வரவைக்கும்
கண்ணீரஞ்சலி ஒட்டவைக்கும்…!

~பிரியமுடன் பிரியா

காதல் என்றால்…

விழியின் மணியால் அழைத்து
மௌன மொழியால் பேசி
விருப்பத்தைச் சுவசத்தால் உணர்த்தி
மறுமொழியை இமையசைவால் பெற்று
இதய சிம்மாசனத்தில் அமர்த்தி
பாராட்டை கையசைவால் தெரிவித்து
ஆயிரம் பேரால் கூடின சபையினிலும்
கலந்த நெஞ்சங்கள் கண்களால்
உயிர்ப்புடன் உறவாடி மகிழ்ந்து
பிரிந்தே இருந்தாலும் பிரியமுடன்
மனதை ஆற்றலால் படித்து
வரும் வசந்த காலத்திற்கு
வாரணமாயிரம் கனவுகளுடன்
காத்திருப்பதே காதல்..!

~பிரியமுடன் பிரியா 💕

தினந்தோறும் காதல்…

பெற்றோருக்குக் காதல் உருப்படாமல் போகும் கலாச்சாரம், வயது கோளாறு
பாட்டி தாத்தாவிற்குக் காதல் ஒரு கத்தரிக்காய்
அத்தைக்குக் காதல் அகராதியிலிருந்து
அகற்றப்பட வேண்டியது
பக்கத்து வீட்டு மாமாவிற்குக் காதல் வம்புப்பேச்சு
சிலருக்குக் காதல் கதைகளில் மட்டுமே அனுபவித்து இரசிக்க வேண்டியது
சிலருக்குக் காதல் ஒரு கெட்ட வார்த்தை
சிலருக்குக் காதல் ஒரு புனிதம்
சிலருக்குக் காதல் ஒரு உல்லாச விடயம்
சிலருக்குக் காதல் மகிழ்ச்சியின் உச்சம்
சிலருக்குக் காதல் நரகத்தின் கொடுமை
சிலருக்குக் காதல் இனக்கவர்ச்சி
சிலருக்குக் காதல் ஆர்மோன் செய்யும் வேலை
எனக்குக் காதல் “உணர்வு” யாக்கை நோக்கமில்லாத அன்பு
பெற்றோரிடம் செலுத்தும் காதல் இயற்கையானது
கணவரிடம் காட்டும் காதல் காலத்திற்கும் இருக்கும்
பிள்ளைகளிடம் தோன்றும் காதல் நிபந்தனையற்ற பாசத்தைப் பறைசாற்றும்
தோழமைகளிடம் காட்டும் காதல் திரும்ப எதிர்பார்க்கும் அலர்ந்தகாதல்
உறவுகளிடம் வைக்கும் காதல் இன்ப துன்பத்தில் பங்கு ஏற்கும்
ஆசானிடம் செலுத்தும் காதல் மரியாதை
இறைவனிடம் வைக்கும் காதல் பக்தியின் மூலம் முக்தியை அடையும் மார்க்கம்
எல்லோரிடம் செலுத்தும் காதல் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும்
தெளிவில்லாத வயதில் வரும் காதல் மாயை
தெளிந்த வயதில் வரும் காதல் கல்யாணத்திற்கு வித்திடும்
பல்லுயிர் மீது வைக்கும் காதல் மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்டது
எனக்கு என் காதல் தினமும் தோன்றும் உணர்வு, வெளிப்பட்டு உரிய இடத்தில் சென்று சேரும்
மதமில்லை சாதியில்லை
மதத்திலுமில்லை சாதியிலுமில்லை
வயதுமில்லை
நான் வளர்க்கும் உணர்வு..!

அலர்ந்தகாதல் – மிகுந்த அன்பு
யாக்கை – உடல்

~பிரியமுடன் பிரியா 💕

கறைபடிந்த மனங்கள்…

கண்கள் ஒன்றுடன்
ஒன்று மோத
மௌன மொழியில்
கதைத்துக் கொண்டன.
பிறரிடம் பேசி மகிழ்ந்து
பல் தெரியச் சிரித்ததை
கேட்டு இரசித்தன.
சோகம் வாட்டினால் இருதயம்
கண்ணீர் விட்டுக்
கதறி அழுதன.
பிடித்த உணவை
இலையில் சுருட்டி
பரிமாறிக் கொண்டன.
கண்ட வெறி பிடித்த மிருகம்
காட்டுக் கத்தலாய்
கத்தி ஊரைக் கூட்டின.
கனவுகள் கலைக்கப்பட்டு
பணத்திற்குப் பேரம்
பேசி விற்கப்பட்டன.
இரண்டும் நடுச்சாமத்தில் அரளி விதைக்கு இரையாகின.
கொழுந்துவிட்டு வெவ்வேறு
காட்டில் தீமுட்டி எரிக்கப்பட்டன.
கங்கையில் கரைக்கப்பட்டபோது
கறைபடிந்த மனங்கள் கண்டு
எள்ளலுடன் சிரித்து இணைந்தன.

~பிரியமுடன் பிரியா 💕

கண்ணாடி குடுவை…

கண்ணாடிக் குடுவையில்
அடைபட்டிருக்கும் வண்ணங்கள்
கண்ணைக் கவர்ந்தது.
விலை கொடுத்து வாங்க
அன்று சம்பாதித்த
கூலிப்பணத்துடன்
வண்ணங்களும் கரைந்தது.
வயிறு பசியெடுக்க
முட்டைக் கொத்துக்கறியும்
உள்ளிறங்கியது.
வழிநெடுக வாயாட
இருளுடன் நடை போட்டது.
எண்ணங்கள் தலைக்கேறத்
தடுமாறி வீதியில் விழுந்தது.
தன்மானம் போனது
தெரியாமல் தன்மகனால்
வீடு போய்ச் சேர்ந்தது.
விடியலும் வந்து
தொடர்கதையானது
இடுகாடு போகும் வரை.

~பிரியமுடன் பிரியா

நிகோடின் கரை…

இதழிலி கவிதை ….

நிகோடின் கரை

தீயால் எரித்து
உதட்டில் வைத்து
உயிர் குடிக்க கொழுந்திட்டெரிய
உள்ளிழுத்து உறிந்து
சுவாசத்தை நிறைத்து
விரல் சுட வர
அவசரத்துடன் அதனை கீழெறிந்து
வெற்றிலை வாயில் அடைக்க
அங்குக் குழந்தை ஓடி வர
அனைத்தெடுத்து
நச்சென இச்சிட
ரோசா இதழ் கரையானது…

~பிரியமுடன் பிரியா

புறக்கணிப்பு…

புறக்கணிப்பு…

குறுஞ்செய்திக்குப் பதில்
அனுப்புவதில்லை…
கேள்விகளுக்கு விடை
அளிப்பதில்லை…
புலனச் செய்திகள் போய்ச்
சேர்வதில்லை…
அலைபேசியின் அழைப்பை
எடுப்பதில்லை…
முகநூல்களின் விசாரிப்புகளுக்கு
முகம் கொடுப்பதில்லை…
கண்களுக்கு எங்கும்
அகப்படுவதில்லை..
அன்பான விசாரிப்புகளுக்கு
செவிசாய்ப்பதில்லை…
இதற்காக எல்லாம் பிடித்தவர்களின் புறக்கணிப்பை மனதும் ஏற்பதில்லை…

~பிரியமுடன் பிரியா 💕

ஏற்பது இகழ்ச்சி…

இலவச பொருள் தந்து மக்களிடம்
ஓட்டு யாசிக்கும் அரசியல்வாதி
ஓட்டுப் போட அரசியல்வதியிடம்
காசை யாசிக்கும் மக்கள்

கடமை செய்ய பொதுசனத்திடம்
இலஞ்சம் யாசிக்கும் அரசு ஊழியன்
காரியம் ஆக அதிகாரிகளிடம் யாசித்து சேவகம் செய்யும் மக்கள்

பக்கத்து வீட்டில் இரவலாகச்
சர்க்கரை வாங்குபவர்
அடுத்தரிடம் தனக்கு தேவையானதை யாசித்து ஏற்பவர்

உடம்பில் தெம்பிருக்க உழைத்து உண்ணாமல் பிச்சை எடுப்பவர்
பணம் படைத்தவன் பிறர் தானமாகத்
தருவதை பறந்தடித்து வாங்குபவர்

இவ்வாறாக பல விதத்தில்
இருப்பவர் பிறரிடம்
இரந்து பொருள் கேட்பதும்
இனாமாகப் பிறர் ஈவதை பெறுவதும்
இரண்டுமே ஏற்பது

இகழ்ச்சி எனக் கொள்க..!

~பிரியமுடன் பிரியா 💕

கானக்குயில்…

கானக்குயில்
கள்ளுண்ண வந்தது
களைப்பில்…

மயக்கும் கானக்குயில்
மயங்கியது மலரிடம்…

இதழோடு
இதழணைத்து
இச்சென்றது
இசைக்குருவி…

மலர்களுக்கு மலர்
தூது செல்லும் தூதுவன்…

மண்ணில் வீழ்ந்து
மாண்டு போகும் முன்
தன்னிடம் உள்ளதை
தரும் வள்ளல்…

மஞ்சள் பறவை
மலரிடம் இரகசிய உடன்படிக்கை
மகரந்தச்சேர்க்கைக்கு…

~பிரியமுடன் பிரியா 💕

கரோனா கள்ளன் துளிப்பாக்கள்…

விட்டான் பீடி
பிடித்தான் பீதி
கரோனாவால்..!

மனிதம் மறந்தவனின்
முகமூடி கிழிந்தது
நுண்கிருமியால்..!

விற்பனை விலையில்லாமலே
கடைகளில் கூட்டம் அலைமோதியது
கரோனா கொண்டாட்டத்தால்..!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பாரதியின் பாடலைத் தேடிப்படித்தான்
கரோனா பீதியால்..!

புறந்தூய்மை நீரான் அமையும்
அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்
சுகாதாரத்தூய்மை காரோனாவால் காணப்படும்..!

சுத்தம் குடி இல்லாததால்
குடியில் நுழைந்தது
கரோனா கள்ளன்..!

கண்டதே காட்சி
கொண்டதே கோலம்
கரோனாவின் அவலம்..!

~பிரியமுடன் பிரியா 💕