கைகோர்த்து வீதியுலா…

விழியின் முறைப்பு கூட
காதல் மொழி பேசுதடா
உதட்டு சிரிப்பு கூட
கள்ளுண்ட போதை அளிக்குதடா

மீசை முறுக்கின் மீது
மீளாத ஆசையடா
புருவ ஏற்றத்தில்
புத்தி பேதலித்ததடா

சுவாச கதகதப்பில்
குளிர் போக்கும் போர்வையானாயடா
தடுமாறி விழும்பொழுது
கைத்தடியாய் மாறினாயடா

நெஞ்சமதில் தஞ்சம் கொள்ள
நாடி நரம்பெல்லாம் துடிக்குதடா
தோள் வளைவில் துயில் கொள்ள
மனம் தோகை விரித்தாடுதடா

மயக்கும் வார்த்தை கேட்டு
உள்ளம் பித்தானதடா
மங்கையிவள் மனமறிந்து
மலர்ப்பாதை அளித்தவனடா

கையணப்பில் கட்டுண்டு
காலமெல்லாம் வாழ்திடுவேனடா
கண்விழி பார்த்து
கைகோர்த்து வீதியுலா செல்வோமடா

~பிரியமுடன் பிரியா 💕

உயிராய் நீ என்னில்…

உயிராய் நீ என்னில்…

கண்ணில் விரைந்து
விழியில் நிறைத்து
இதயத்தில் நுழைந்து
இசையில் இணைந்து
நாணத்தில் சிவந்து
தன்னில் வியந்து
காலத்தில் நிறைந்து
வாழ்வில் துணையாய்
வாழ்வாங்கு வாழ்கிறேன்
காதலால் உன்னில்
உயிராய் நீ என்னில்…

~பிரியமுடன் பிரியா 💕

இதழகல் கவி முயற்சி…
இதழகல்: உதடு ஒட்டாமல் உச்சரிக்கும் வார்த்தைகள்.

கல்யாண ஊர்கோலம்…

கல்யாண ஊர்கோலம்…

கருமாரி கோவிலிலே
தெப்பக் குளத்தருகே நிக்கையிலே
கருங்கூந்தல் காத்திலாட
தெருவோரம் போவாளே

அப்ப நான் பார்க்க
அந்த நேரம்
ஓர விழி பார்வையில
ஒய்யாரமா நடப்பாளே

நெனப்பெல்லாம் அவளிருக்க
நெஞ்சுகுழி தடதடக்க
கண்ணால பாக்கையில
காந்த விழியால இழுப்பாளே

காலாற நடந்து
கல்லூரி போகையில
கதை பேசி தோழிமாருடன்
கலகலவென சிரிப்பாளே

பாவாடை தாவணியில
பச்ச ரிப்பனில
சிமிக்கி காதிலாட
சில்வண்டாட்டம் பறப்பாளே

வெள்ளி கெழமையில
வெளக்கு ஏத்தக்
கொலுசு சிணுங்க
காமாட்சிய தரிசிக்க வருவாளே

மல்லிகை தோட்டத்தில
மணமா அவ சிரிக்க
மலர்ந்த ரோசாவா
நடுவில அவளிருக்க

வாய்க்கால் தாண்டி
வரப்பு மேல போகாம
கொடப்புடிச்ச கையோட
குத்திட்டு நிப்பேனே

பொய் சொன்னா
பொங்கி எழுவாளே
சண்டி ராணியாய்
நெனச்சத செய்து முடிப்பாளே

உதவின்னா ஓடிபோயி
ஊருக்கு முன்னே நிப்பாளே
தனக்கென்னனு போகாம
தாயாகப் பார்ப்பாளே

நெதமும் கனவில
நான் அவள காண
நின்னு மணிக்கணக்கா பேச
விடியலும் வாராம போகாதோ

ஊரே எம்பேச்சு கேட்டிருக்க
உம்பேச்ச கேட்க நானிருக்க
உம்மனச திறந்து சொல்லுவாயோ
உனக்கு சம்மதமென

தைமாச பொறந்திருச்சு
திருவிழாவும் வந்திருச்சு
பரிசம் போட நான் வர
தேரோடும் வீதியிலே
போவாமா கல்யாண ஊர்கோலம் ….

~பிரியமுடன் பிரியா 💕

நெசவு துளிப்பாக்கள்…

ஆயிரம் உயிரினம் கொல்லப்பட்டது
ஆனந்தமாகக் கொண்டாடுகிறோம்
பட்டுச்சேலையில்..!

பட்டாடை பளபளக்க
பட்டாம்பூச்சியாய் திரிகிறோம்
பட்டுபூழுவின் தியாகத்தால்..!

பட்டு பாவாடைக்கு
தக்ளி சுற்றும் சிறுமி
அணிந்திருப்பதோ சீட்டி(அ) கந்தல் பாவாடை..!

தினம் புத்தாடை நெய்பவன்
வருடம் முழுதும் காத்திருக்கிறான்
பொங்கல் இனாம் துணிக்கு..!

டக் டக் சத்தமிட்டு
பொம்மலாட்டம் ஆடும்
தறி..!

கால்களும் கைகளும் நர்த்தனமாடின
அழகான நடனம் அரங்கேறியது
தறியில் வண்ண ஆடைகள்..!

தசாவதாரத்தின் காட்சிகள்
இராதா கிருட்டிணன் காதல் காவியம்
நெசவாளியின் கைவண்ணத்தில்..!

கண்ணனின் மயக்கும் புன்னகை
வண்ண பட்டுச்சேலையில்
நெவாளி ஓவியனானான்..!

~பிரியமுடன் பிரியா 💕

பெண்ணை மதிப்போம்…

பெண்ணை மதிப்போம்…

அகிலத்தின் சக்தியானவள்
அருகனின் பாதியானவள்
அமைதியின் திருவுருவானவள்
அனைத்தும் அறிந்தவள்..!

கள்ளிப்பாலைக் கடந்தவள்
கருவைச் சுமப்பவள்
கண்ணின் மணியானவள்
கற்பகத்தருப் போன்றவள்..!

கண்ணாளனின் மனமறிந்தவள்
காரியத்தில் உறுதுணையானவள்
கண்ணின் இமையானவள்
கங்கை நதியானவள்..!

மண்ணின் தெய்வமானவள்
மழலையை ஈன்றவள்
மங்காத புகழ்கொண்டவள்
மனதில் உறுதிகொண்டவள்..!

உதிரத்தைப் பாலாக்கியவள்
உள்ளத்தில் மென்மையானவள்
உறக்கத்தைத் துறந்தவள்
ஊன்றுகோலாய் இருப்பவள்..!

வலி பொறுப்பவள்
வன்மத்தைக் கண்டிப்பவள்
வந்தனத்திற்கு உரியவள்
விசித்திர பிறவியிவள்..!

சொல்லிலேச் சிறந்தவள்
சிந்திக்கத் தெரிந்தவள்
சமையலில் கைதேர்ந்தவள்
சரித்திரத்தில் போற்றத்தக்கவள்..!

ஆணைப் போற்றுபவள்
ஆணைவிட மனவலிமையுடையவள்
அன்பே உருவானவள்
அழகில் மிளிருபவள்..!

பிழைகளை மன்னிப்பவள்
பொறுமையின் சிகரமானவள்
பொய்களைச் சகிக்காதவள்
பொங்கியெழும் குணங்கொண்டவள்..!

தவறுகளைத் தட்டிக்கேட்பவள்
தானத்தைச் செய்பவள்
தன்னலம் இல்லாதவள்
தனக்கென்றுச் சேர்க்காதவள்..!

பார்போற்றும் இனத்தவள்
பல்கலைக் கற்றவள்
பாசமான குணத்தவள்
பலபரிமாணங்களைக் கொண்டவள்..!

~பிரியமுடன் பிரியா 💕

இருதயலீசுவரர் வயல்…

ஏர்பிடித்து ஏர் உழும் உழவர்கள்

களை பறிக்கும் சீமாட்டிகள்

தண்ணீர் நிறைந்திருக்கும் கிணறுகள்

நீர் பாய்ந்து நிரம்பும் தொட்டிகள்

வாய்க்காலில் பாய்ந்தோடும் நீரோடைகள்

மகிழ்ந்து இசைபாடும் குருவிகள்

காற்றுக்குத் தலையாட்டும் நாற்றுகள்

உட்கார்ந்து ஓய்வெடுக்கும் தும்பிகள்

பறந்து படபடக்கும் பட்டாம்பூச்சிகள்

பாத்தியாகப் பிரிக்கும் வரப்புகள்

பரந்து விரிந்திருக்கும் வயல்வெளிகள்

உலகுக்கு உணவு படைக்கும் தெய்வங்கள்

அனைத்தையும் பாதுகாத்து வாழவைத்து

எமைக்காக்கும் எம்பெருமான் இருதயலீசுவரரே

உம் பதம் போற்றி வணங்குகிறேன்..!

~பிரியமுடன் பிரியா 💕

பெண்ணே நீ…

பெண்ணே நீ…

இயற்கையைக் காக்கும் அன்னையாய்

பூலோகத்தைத் தாங்கும் பூமாதேவியாய்

பாய்ந்தோடும் நதிகளின் பெயராய்

சிவனின் சரிபாதியான சக்தியாய்

அரக்கனை வதம்செய்த பகவதியாய்

அன்பில் அன்னை தெரசாவாய்

ஆத்திச்சூடி கொடுத்த ஔவையாய்

கருவைச் சுமக்கும் தாயாய்

கணவனுக்குத் தாய்க்குப்பின் தாரமாய்

அன்னைபோல கண்டிக்கும் அக்காவாய்

செல்லச் சண்டையிடும் தங்கையாய்

அனைத்து முத்தமிடும் மகளாய்

தலைகோதி மடியேந்தும் பாட்டியாய்

துன்பத்தில் தோள் தாங்கும் தோழியாய்

சமைத்துப் பசியாற்றும் அன்னபூரணியாய்

சாதனை படைத்த சாவ்லாவாய்

ஆணின் வெற்றிக்கு பின்னிருக்கும் பெண்ணாய்

அனைத்திலும் நிறைந்திருக்கும் தெய்வமாய்

உனை மதித்துப் போற்றுவோம்

உண்மையை உள்ளத்தில் ஏற்போம்..!

மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐

~பிரியமுடன் பிரியா 💕

அரசியல் கவித்துளிகள் 2…

மரத்திற்கு மரம் தாவியது குரங்கு

எங்கும் நிரந்தரமில்லை

கூட்டணிக் கட்சி..!

🌺

ஐந்தாண்டு திட்டம்

அமோக வருமானம்

கூட்டணிக் கட்சி..!

🌺

சாதி கட்சித் தலைவன்

ரோசாவை ஒதுக்கி வைத்தான்

சாதி மல்லியால்..!

🌺

பட்டம் தேவையில்லை

அரசாங்க உத்தியோகம்

சட்டசபை உறுப்பினர்..!

🌺

ஏமாறுபவன் இருக்கும்வரை

ஏமாற்றுபவன் இருப்பான்

தேர்தல் வாக்குறுதி..!(அ)

அரசியல்வாதி..!

🌺

கோயில் குளங்கள்

அனைத்தும் தூர்வாரப்பட்டன

தாமரைக்காக..!

🌺

இலஞ்சம் எவ்வளவு கொடுத்தாய்?

எவ்வளவு வாங்கினாய்? கேட்டது

அல்லி தாமரையிடம் சின்னத்திற்காக..!

~பிரியமுடன் பிரியா

பூமி செழித்திட…

ஊதக்காற்று அடித்திட

மேகம் கருத்திட

வானம் இறங்கிட

பொதிகை தொட்டிட

மழை வரப்பார்த்திட

மரங்கள் அசைந்திட

மாடுகள் கூடிட

கன்றுகள் உரசிட

தாய்ப்பசு மகிழ்ந்திட

காளைகள் சிலிர்த்திட

மாவென அழைத்திட

கானம் ஒலித்திட

தீவனம் அசைபோட்டிட

கொம்புகள் முட்டிட

வால் ஆடிட

சாணம் போட்டிட

கோமூத்திரம் கழித்திட

மண்ணுக்கு உரமாகிட

இயற்கை போற்றிட

பூமி செழித்திட

பசுமை தழைத்திட

உழவு செய்திட

ஏர் பிடித்திட

எருதுகள் உழுதிட

பயிர்கள் வளர்ந்திட

விளைச்சல் பெருகிட

விதைத்தவன் பேரானந்தமாகிட

நெல்மணிகள் உணவாகிட

பல்லுயிர்கள் புசித்திட

வைக்கோல் தீவனமாகிட

பசுக்கள் சுவைத்திட

பால் சுரந்திட

கன்றுக்கு பாலூட்டிட

மழலைகள் அருந்திட

ஆண்டவனுக்கு அபிடேகமாகிட

ஆவினம் ஆண்டவனாகிட

மனம் கூத்தாட

கால்கள் சதிராட

பாட்டுப் பாடிட

போற்றி வணங்கிட

சுயதொழில் பெருகிட

வாழ்வாங்கு வாழ்ந்திடவே…!

~பிரியமுடன் பிரியா 💕

முதுகெலும்பு…

இருந்து காலால் உழைக்க

இறந்து தோளாய் உழைக்கும்…

🌺

உதிரத்தைப் பாலாக்கி

தாயானாய்…

காளையும் காவலனாகும்

காப்பாளனுக்கு…

🌺

பிழைப்பு நாடி ஓடும்

பொறியியல் பட்டம்…

பிழைப்பு தேடித் தரும்

ஆவின் கூட்டம்…

🌺

வலைத்தளம் விற்றால்

பிடித்து வாங்கும்

ஆயாக்கள் சொன்னால்

இடித்து உரைக்கும்

இளைஞர் பட்டாளம்…

கிருமிநாசினி

கோமாதா கோமூத்திரத்தை…

🌺

இடையர்கள் எல்லோரும்

இக்கால கோபால கிருட்டிணரே

இயற்கையைக் காப்பதினால்…

🌺

பசுஞ்சாணங்களும் கடவுளே

மண்ணை மலடாக்காமல் காப்பதால்…

🌺

விவசாயத்தின் முதுகெலும்பு

ஏர் உழும் எருதுகள்…

~பிரியமுடன் பிரியா 💕