அந்திசாயும் சந்தை…

மந்தையில் மாதந்தோறும் கூடும்

சந்தைக்கு அக்காவுடன் சலசலத்து

ஒத்தையடிப் பாதையில் ஒய்யாரமாக

எந்தையுடன்(தமையன்) சண்டைப் பிடித்து

தந்தைத் தந்த காசுடன்

அத்தைத் துணையுடன் போவோம்..!

முந்திக்கொண்டு சந்தைக்கு வந்தவுடன்

முந்தைய வடிவில் இல்லாமல் புதிய

விந்தையான கண்ணாடி வளையல்

சிந்தை மகிழக் கையில் அடுக்குவோம்

சந்தோசமாக அக்காவும் நானும்..!

எந்தையோ தம்பிக்குப் பிடித்த

தொந்திக்காரர் விற்கும்

பந்தை வாங்கப் பந்தாவாக

உந்திச் சென்று பேரம் பேசக்

கந்துவட்டிக்காரராய்

தொந்திக்காரர் மறுக்க

நொந்துபோய் கேட்ட விலையை

அந்தோ பரிதாபமாய் கொடுத்து

பந்தை வாங்கி வருவான்..!

சொத்தையில்லா பிஞ்சுக்

கத்தரிக்காய் காரக்குழம்புக்கு

பித்தம் போக்கும் இஞ்சியோ

தித்திக்கும் மாங்காய் பச்சடிக்குக்

கொத்தாகக் கொத்தமல்லி

சத்தான சமையலுக்கென

அத்தனைக் காய்களையும்

எத்தனையோ முறை எடுத்துப்பார்த்து

முந்தானையில் முடிந்திருக்கும்

கத்தையான காசில் கச்சிதமாய் வாங்கி

அத்தை நிறைப்பாள் கூடையை..!

கந்தலான காகிதத்தில் சுத்திய

வெந்த கலக்காய்ச் சுண்டல்

மெத்தைபோல மிருதுவான பஞ்சுமிட்டாயென

மொத்தமாய் வாங்கி சுவைத்துக்கொண்டே

சத்தம் போட்டு ஆடு ராமாவென

வித்தைக்காரர் கத்த

மந்திக் காட்டும்

வித்தையை இரசித்துப் பார்ப்போம்..!

அந்தி சாயும் வேளையில்

சொந்தங்கள் சிலர்

சந்தையில் சந்திக்க

சந்தோசமாக உறவாடிப்

பிந்தி மெதுவாக நடந்து

சந்து பொந்தில் நுழைந்து

வந்து வீட்டுக்கு

இந்தாவென அண்ணன் தம்பிக்குப்

பந்தைக் கொடுக்க அவன் ஆர்ப்பரிக்க

அத்தை அம்மாவிடம்

சந்தைக் கதை(டை) கதைக்க

முந்திக்கொண்டு நாங்கள் வளவி காட்ட

தந்தையோ உச்சிமோந்து மெச்சுவார்..!

– பிரியா பாஸ்கரன் 🙏🏻

வாசலில் வானவில்…

வைகறை விடியலை

இரசிக்க கற்றுக்

கொண்டேன்

நீ கோலமிடுமழகில்…

🌸

பூக்கோலத்தின் நடுவில்

நிதமும் கண்டேன்

பௌர்ணமி நிலவை…

🌸

நீ வைக்கும்

புள்ளியில் ஆரம்பித்தது

நம் வாழ்கைப்பயணம்…

🌸

உன் விழிகள்

கோலத்தில் நர்த்தனமாட

என் விழிகளில்

உன் நர்த்தனம்…

🌸

வளைந்து நெளிந்து

வர்ணக்கோலமிட்ட

விரல்களுக்கு

ஒத்தடமானது இதழ்கள்…

🌸

பிஞ்சு விரல்கள்

கொஞ்சி வரைந்ததில்

நெஞ்சு பித்தானது…

🌸

பனியில் நனைந்த

பதுமை கண்டு

சிலையானேன்…

🌸

மார்கழி பனியில் உன்

மாக்கோலம் வாசலில் நிறைய

எம்மனதில் நம் மணக்கோலம்….

🌸

வானவில் வாசலுக்கு

வந்துவிட்டதோ

வண்ணக்கோலமிட?

~பிரியமுடன் பிரியா 🌺

ஏன் பெண்ணுக்குப் பெண்ணே…

அம்மாவாக பெண்ணை

கொண்டாட

மாமியாராக மருமகளைப்

பந்தாடுபவர்கள்…

கல்யாண சந்தையில்

கணக்காக வரதட்சணை

கேட்கும் மாமியார்கள்…

பொட்டச்சி பிறந்ததுக்கு

முகம் சுழிக்கும்

பொட்டச்சிகள்..

ஆணுக்கு நிகராக ஓடியாடி

என்ன வேலை செய்தாலும்

பெரிய வேலைக்குப் போய்

கிழிக்கிறாயென தூற்றுபவர்கள்…

பணியில் பதவி உயர்வை

பல்லிளித்துத்தான் பெற்றதாக

பழிப்பவர்கள்..

பாரதி கண்ட புதுமைப் பெண்

கனவுகள் நனவானாலும்

பெண்ணுக்குப் பெண்

இன்னும் எதிரியோ ?

~ பிரியமுடன் பிரியா 💕

கணநேரமும் உனை ….

கண்ணைமூடி முத்தமிட ..

வெட்கமில்லாமல்

கண்ணாடி கண்காணித்தது …

🌸

வெப்பத்தையும் குளிரையும்

ஒரே நேரத்தில் உணர்த்திவிடுகிறாய்

உன் இதழொற்றலில்…

🌸

போர்வை கோபித்துக்கொண்டது

போட்டியாக நீ மாறியதால்…

🌸

விழி மூடியே முத்தமிடு

இல்லையெனில் உன் விழியில்

தொலைந்து விடுவேன்…

🌸

காணாமல் தவிக்கும்

தவிப்பும் சுகமே…

கணநேரமும் உனை

நினைக்க வைப்பதால்…

🌸

நீ கோபப்படுத்தி

அழ வைப்பதை

இரசிக்கிறேன் பின்னே

உன் அலைபேசி என்னை

விடாமல் அழைப்பதால்…

🌸

நீ பேசுவது பிடிக்கும்

உன்னைப் பற்றித்

தெரிந்தவர்கள் பேசக் கேட்க

இன்னும் பிடிக்கும்…

🌸

சிவப்பு ரோசா மட்டுமில்லை

நீ செய்து கொடுத்த

காளிப்பூ குழம்பும்

காதலை உணர்த்தும்…

🌸

சத்தமின்றி யுத்தமிட்ட

இதழ்களால்

சத்தம் போட்டது

இதயங்கள்…

🌸

புகைப்படத்தில் நீ சிந்தும்

புன்னகையில் கூட

மொத்தமாய் மூழ்குகிறேன்…

~பிரியமுடன் பிரியா 💕

வயல்வெளி தேவதைகள்…

தலையாட்டும் உன் அழகைக் காணக்

காத்திருக்கிறோம் ஒன்றுகூடி…

குலவை சத்தமிட்டுக் களைபறிக்க

குழந்தை நீயும் குமரியாவாய்…

நிலமகளுக்குப் பச்சை பட்டாடை

உடுத்தி அழகு பார்த்தது நெற்கதிர்…

மேகத்தின் மோகத்தில் பொழியும் பனிச்சாரல்

அடைக்கலமானது பச்சை கம்பளத்தில்…

நெல்மணிகள் பூத்துக் குலுங்க

விதைத்தவன் மனம் ஆனந்தத்தில் பொங்குகிறது…

இச்சையாகப் பெய்த மழையில்

பச்சை வயல்கள் பாய் விரித்தது…

வரப்பில் உழைக்கும் மங்கையரின்

அலங்கார அணிவகுப்பு…

உலகுக்கு உணவு படைக்கும்

வயல்வெளி தேவதைகள்…

களைபறித்து கானம் பாடக்

காரிகைகள் தயார்

கணக்குப்பிள்ளை தலையாட்டினால்…

நெல் விதைத்தவர் நியாயவிலைக்கடையில்

எடையில் பெற்றார் அரிசியை…

~ பிரியமுடன் பிரியா 💕

தாய்யானையின் தாலாட்டு…

அழகு செல்லமே

காலூன்றி

நம்பிக்கையுடன்

தும்பிக்கை கொண்டு

அள்ளி அருந்திடுவாய்

ஆற்று நீர்தனை

அணைத்துத் தாங்க தூணாக

உன்னருகில் நானிருக்க…

கண்ணே கண்மணியே

கதிரவன் கண் பட்டிட

ஒளிக் கதிர்கள்

மேனி தொட்டு

வைரமாய் சொலித்திடக்

கொஞ்சி குலவி

முத்தமிட்டு

அள்ளி அணைத்திடப்

பிஞ்சு முகந்தனை

நெஞ்சில் அன்பு பெருகுதே…

செல்லப் பட்டே

இக்கரை கடந்து

அக்கரை செல்ல

குட்டி பாதங்கள்

நீரில் சதிபோட

நீண்ட அழகு

பின்னல் அசைந்தாடத்

துள்ளி விளையாடி

ஒய்யார நடைபோடும்

அழகுதனை

காண மலரும் என்னகமே…

~பிரியமுடன் பிரியா 🐘 💕

வைரப் பதக்கம்…

இலையோடு இதழுத்தம்

செய்திடும் காதலி..

மண்செழிக்க மண்டியிட்டு

உறவாடும் உறவு…

பல்லுயிர் ஓம்புவதால்

சாகாவரம் பெற்றவள்..

விண்ணுக்கும் மண்ணுக்கும்

உகந்த உறவினர்…

மேகத்தின் மோகத்தில்

உதித்த முத்து…

வானத்திற்கும் பூமிக்கும்

இலவச தூதுவர்…

இலைக்கு அணியாகி

அழகுச்சேர்த்த வைரப்பதக்கம்…

பச்சையாடை பாவைக்குத்

தெளித்த பன்னீர்…

கதிரவன் கதிர்பட்டு

மாயமாகும் மந்திரவாதி…

~பிரியமுடன் பிரியா 💧

சமத்துவத்தின் சாட்சி 2…

ஊன் படைக்கும் உழவர்கள்

உழும் எருதுகளாகினர் கலிகாலத்தில்…

உழைப்பவனுக்கு கைகளும்

ஆயுதம் உயிர்வாழ…

இருமாடு பூட்டினால் தான்

வண்டி முன்னேறும் என்பதற்குச் சாட்சி…

சமத்துவத்தைச் சந்ததிகளுக்கு

கற்றுத் தரும் கற்காத மேதைகள்…

வறுமையை எதிர்த்து

போராடும் தன்னம்பிக்கையாளர்கள்..

வானம் பார்த்த பூமியுடன் வரம்

வாங்கக் காத்திருக்கும் பொறுமைசாலிகள்…

வேகாத வெயிலில்

விளைத்த உணவுக்கு

குளிர்சாதன அறையில் விலை நிர்ணயம்…

அரசாங்கத்தை எதிர்பார்த்தால்

அடுப்பு எரியாது…

விதைத்தவனுக்கு ஊனும் உழும் மாடும் சொந்தமில்லை…

உணவு துறை அமைச்சர்

அறியாத விளை நிலங்கள்…

~பிரியமுடன் பிரியா 🙏🏻

சமத்துவத்தின் சாட்சி…

மனதில் திடமும்

உடலில் வலுவும்

எண்ணத்தில் தெளிவும்

செயலில் நிமிர்வும்

வாழ்க்கையில் பிடிப்பும்

நடத்தையில் கண்ணியமும்

குடும்பத்தின் கடமையும்

தொழிலில் நேர்மையும்

உழைப்பில் நம்பிக்கையும்

ஒற்றுமையின் பலத்தையும்

உணர்ந்து செயல்பட்டால்

உழவிலிருந்து உலகையாளும்

வரை எங்காயினும்

ஆண்ணென்ன பெண்ணென்ன

எல்லோரும் சமமே…

~பிரியமுடன் பிரியா 🙏🏻

கல்லறையில் காதல்…

உதிக்கும் முன்னே

கல்லறையில் சமாதி

ஆக்கப்பட்டது

சாதிமத கட்டுப்பாட்டால்…

கல்லறையிலும் காதல்

கைகூடவில்லை

அவளைப் புதைக்க

அவன் எரிக்கப்பட்டான்…

வாழ்கையில்

வலிகளைச் சந்திக்க

வலிமையில்லாமல்

கொல்லப்பட்டது…

பதில்கள் தெரியாத

கேள்விகளால்

படு தோல்வியடைந்து

புதைக்கப்பட்டது

மணவ(னஅ)றையில்…

மௌனமாய்

உனை கொல்ல

மௌனமே

சாட்சியானது…

நெஞ்சில் பச்சை

குத்தி வைக்கப்பட்டது

நிரந்தரமாய்

ஆன்மாவோடு பயணிக்க..

~பிரியமுடன் பிரியா 💗