
மன உண்டியல்…
காணும் பொங்கலுக்குக்
காலையிலேயே எழுந்து
கிணற்று நீரை
கிடுகிடுவெனச் சேந்தி
கடகடவென காக்கா குளியல்
குளித்து விட்டு
கல் தோசை இட்லி சாம்பார் வடை
கூட நான்கு சேர்த்துக்
கட்டுக் கட்டிவிட்டு
கச்சிதமாகப் பொங்கலுக்கு வாங்கின
காஞ்சிபுரப் பட்டுப் பாவாடை சட்டையணிந்து
கருங்கூந்தலை இழுத்து இருக்கப் பின்னி
குஞ்சம் வைத்துக் கட்டி
கமகமக்கும் மல்லியுடன்
கனகாம்பரத்தைச் சடையில் வைத்து
கண்ணுக்கு மையிட்டு
கருத்தாக நெற்றியில் பொட்டிட்டு
கல் ஜிமிக்கி காதிலாட
கழுத்தில் காசுமாலை மினுமினுக்க
கைகளில் கண்ணாடி வளைவி குலுங்கக்
கண்ணாடியில் ஆயிரம் முறைக்கு மேலே
கணக்கில்லாமல் அப்படி இப்படியெனக்
கண்டு களித்து தயாராகிக்
காணும் பொங்கல் வசூலுக்குக்
கிளம்புவேன்
கடைக்குட்டி செல்ல தம்பியுடன்
காலில் விழுந்து ஆசி வாங்கினால்
காசு தருவார்கள் கேட்காமலே
கை நிறைய..
அன்னை தந்தையிடம்
ஆசி வாங்க அன்புடன் அழகாக
வாழ்த்தி உச்சி மோந்து மொத்தமாய்
நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு
அடுத்து தாத்தாவின் தாடையில்
நச்சென இச்சு வைத்துக்
கொஞ்சி மகிழ்ந்து குதூகலமாய்
ஆசி பெற பதினாறும் பெற்றுப்
பெரு வாழ்வு வாழ வாழ்த்தி
பச்சை நோட்டு கட்டிலிருந்து
கொத்தாய் கொடுக்க
கெத்தாகத் தம்பியிடம் காட்டிவிட்டு
அப்போதுதான் வேலைக்குச் செல்ல
ஆரம்பித்த அண்ணனின் காலில் டபக்கென விழுந்து
அவன் சட்டையிலிருப்பதை
அலக்காக ஆட்டய போட்டு
அன்பாகத் தலை முடி களைத்து விளையாட அவன்
அடிக்க துரத்தும் முன்
ஓட்டமாக ஓடுவோம்
அடுத்த வசூலுக்கு…
அடுத்த வீட்டு அம்சா பெரியம்மா
தலைவர் குமாரு பெரியப்பா
மச்சுவீட்டு இராசி பெரியம்மா
குண்டு பாட்டி செயலட்சுமி
சாந்தமான சாந்தா அத்தை
வெற்றிலை குதப்பும் பரதன் மாமா
பக்கத்து வீட்டுச் சின்ன தாத்தா
அப்பப்பா மூச்சு விட்டு ஆசுவாசப்பட
நேரமில்லாமல் ஊரையே
சுற்று சுற்றி ஐந்து ரூபாய் நாணயம்
முதல் ஐந்நூறு ரூபாய் நோட்டுவரை
வசூலித்து முடித்து இறுதியாகப் படையெடுப்போம்
பாட்டி வீட்டை நோக்கி…
பாட்டி கொள்ளை பிரியத்துடன்
கட்டியணைத்து முத்தமிட்டுக்
கட்டியிருக்கும் புத்தாடையைக்
கண்டு செல்லம் பட்டு இராசாத்தியென
கணக்கில்லா வார்த்தை கொண்டு
கன்னம் வழித்து ஆசையுடன் பேசி
ஊட்டும் பொங்கலை இச்சையுடன்
உண்டு மடியில் தலை சாய்க்க
நெற்றி தடவி தலை கோதி
கொஞ்சும் மொழிதனில் நெஞ்சம் உருக
முற்றத்தில் வீசும் காற்றினில் கண்கள் சொருக
உடல் தளர்ந்து உறக்கம் வரும் வேளையில்
தங்கக்கம்பி தம்பி கருத்தாகக் காசை எண்ணி இவ்வளவெனக் கூவிட
வந்த உறக்கம் பஞ்சாகப் பறக்க
அலறியடித்து பாட்டியின் பங்கைப்
பாங்குடன் வாங்க ஆசி பெறப்
பலவற்றைப் பாட்டாகப் பாடி
பாசமுடன் முந்தானையில் முடிந்த
காசை கணக்காகப் பங்கிட்டுத் தர
நானும் தொட்டுத் தொட்டு எண்ணி
ஆனந்தமாய் மகிழ்ந்து
மண் உண்டியலில் சேமிப்பாக சேர
அவையனைத்தும் இன்றும்
மன உண்டியலில் நிறைவாய் உள்ளது …!
~பிரியமுடன் பிரியா 💕