
மனிதரில்..
மாநிறம் சிலர்
கார்முகில் சிலர்
செந்நிறம் சிலர்
மஞ்சள் சிலர்
சிலர் உயரம்
சிலர் குள்ளம்
சிலர் மெலிவு
சிலர் பருமன்
சிலர் செல்வர்
சிலர் ஏதிலார்
சிலர் எப்போதும் மகிழ்வர்
சிலர் கவலையால் துவள்வர்
சிலர் கல்லாமல் கற்றவர்
சிலர் கற்றும் கல்லாதவர்
சிலர் சொற்புத்தி
சிலர் சுயபுத்தி
சிலர் வெண்புத்தி
வேற்றுமையில்
ஒற்றுமை கண்டால்
என்றென்றும் ஊற்றெடுக்கும்
உளமார்ந்த உள்ளன்பு..
அன்பைப் பெருக்கி ஆனந்த
இன்பத்தில் திளைத்து
நீண்ட ஆயுள் வளர்க்க
வேண்டிய மக்கள்..
அடித்துக் கொள்ள
ஆயிரம் காரணம்..
அன்றாடம் ஊடகங்கள்
அடுக்கடுக்காக
பட்டியலிடும்..
அரசியல் தூண்டும்
வீண்மதவெறி கலவரம்
சாதிக் கட்சித்
தலைவன் தன்னலத்திற்குத்
தூண்டும் வேண்டா
ஆர்ப்பாட்டம் அதற்கு
அப்பாவி பலிகடா
ஊர்மக்கள்
அரசியல் கட்சித்
தலைவர் கைது
அதிகார வர்க்கத்தின்
அட்டூழியம்..
அரசுப் பேருந்து
அடித்து நொறுக்கப்பட்டு
அழுகுரல் எங்கெங்கும்
அவலநிலையில்
ஊர்மக்கள்..
அண்ணன் தம்பிக்குள்
சொத்துத் தகராறு
அறுந்தது தொப்புள் கொடி சொந்தம்..
இழந்தது இது நாள் வரை
கட்டி காப்பாற்றிய மானம்..
அழுக்காற்றினால்
சுற்றமுடன் அடிதடி
ஆயுசுக்கும் தீராப்பகை
அடுத்த தலைமுறைக்கும்
அழிவைத் தரும் பகையைப்
போதிக்கும் மடமை..
வலியார் நில ஆக்கிரமிப்பு ஆசையால்
எளியாரிடம் வளர்க்கும் வலுச்சண்டை..
எதிர்த்து நின்ற எளியாரை ஒடுக்க
வலியார் காசுக்கு
அமர்த்தும் அடியாட்கள்..
ஆண்டாண்டாக
அண்டை மாநிலங்களுள்
ஆற்று நீர் பங்கிட்டுப் பிணக்கு
அடிதடி கலவரத்தில்
அப்பாவி மக்கள் உயிரிழப்பு..
அடித்துக் கொண்டதால்
ஆவது என்னவோ?
அழுக்காற்றினால் உயர்ந்தார்
உண்டோ?
கொதித்துப் பிறரை
அடித்துக் கிழித்து
உடலிருந்து
உதிரும் சிவப்புக்
குருதி தனக்கும் உதிர
கண்டாலும் ஒன்றே
என கொண்டாலும்
மடமையால்
தொடரும் மூடர்கள்..
மனிதரின் நிறம் மாறலாம்
அறிவுத் திறம் மாறலாம்
உருவம் வேறாகலாம்
வழிபடும் இறைவன் வேறாகலாம்
ஏன் இறைவனையே மறுக்கலாம்
இனம் மொழி சாதி இன்னும் எத்தனை வேறானாலும்
அன்பால் ஒன்றுபட்ட
கள்ளமில்லா மக்கள் உள்ளத்தில்
ஏற்றிவிட்ட சினத்தால் நமக்குள்
ஒற்றுமையை மறந்து சண்டையிட்டு
உதிர்க்கும் உதிரம் வேறாகுமா? –
உணர்ந்தால்..
உதிரம் உதிர்ந்து
உறைவதை
தவிர்க்கலாம்
தடுக்கலாம்..
“நிறம் மாறும் நிறம் மாறாது”!
-பிரியா பாஸ்கரன் 🙏🏾