
பிரிந்து இருக்க மறந்து இருப்போம்
பிரிவுகளை; ஆனால் நினைவை – பிரியாமல்;
இன்றும் பிறர்நலம் வேண்டித் திரும்பவும்
என்றும் இணையும் வரை…
~பிரியமுடன் பிரியா 💕
My thoughts and lyrics

பிரிந்து இருக்க மறந்து இருப்போம்
பிரிவுகளை; ஆனால் நினைவை – பிரியாமல்;
இன்றும் பிறர்நலம் வேண்டித் திரும்பவும்
என்றும் இணையும் வரை…
~பிரியமுடன் பிரியா 💕

ஆண்டாண்டாய் யாரோ அரசியல் செய்யவும்
வேண்டிய லாபம் வரஅவர்கள் – தூண்டவும்
ஈண்டு உயிரை மதியாமல் சண்டையிட்டு
மாண்டு மடிவதே னோ?
~பிரியா பாஸ்கரன் 🙏

அடி அழகியே..
மௌனமாய் ஆயிரம்
கதைகள் கதைப்பவளே
ஆயிரத்தில் எதைச் சொல்ல
இங்கு வந்தாய்?
அம்மா உனை காட்டி
அனுதினமும்
அம்மு ஊட்டியதை
அழகாக ஞாபகப் படுத்த வந்தாயா?
வண்டின் ரீங்காரம்
வந்து தாலாட்டும் காற்று
வாசலில் நீ வர
நெய்மணக்கும் நிலாச்சோறு
நினைவு படுத்த வந்தாயா?
வெளியூர் சென்ற
தலைவனைக் கண்டு விட்டு
அவன் நலனை
அவசரமாகச் சொல்ல வந்தாயா?
விமானத்தில் பயணம் செய்யச்
சன்னலோரத்தில் அமர
வழியனுப்ப மனமில்லாமல்
வழித்துணையாய் வந்ததைத்
தொடர வந்தாயா?
மனதில் மலர்ந்து
மணம் பரப்பும்
மகிழ்ச்சியான தருணங்களை
உன்னுடன் பகிரத் துடிக்கும்
என் துடிப்பை
உணர்ந்து கேட்க வந்தாயா?
இரவின் ஏகாந்தத்தைப் போக்கி
இனிமை சேர்க்க
ஆகாயத்தில்
அழகோவியமாய் வந்தாயா?
முழுமதியான நீ
வெண்பட்டுடத்தி
பேரெழிலுடன் இராணியாகப்
பவனி வருவதைப்
பார்க்கச் சொல்ல வந்தாயா?
காலமெல்லாம் கவிஞரின்
கவிதைக்குக் கருவாகி
நிலாப்பெண்ணாக உலா வருவதைக்
கூற வந்தாயா?
இருள் அகற்றி
ஒளி ஏற்றிக்
கோலோச்சி
வானில் பிறைசூடா
மணிமகுடமாக விளக்குவதை
விளம்ப வந்தாயா?
நித்தமும் நித்திரையில்
கற்பனை கனவு காண
உன் தாலாட்டு வேண்டி
தவமிருப்பேனென
தெரிந்து தான் வந்தாயா?
வா நிலாவே..
என் வான் நிலாவே..!
– பிரியமுடன் பிரியா 🌙

இனிய புத்தாண்டு மலரட்டும்..!
பழைய கசப்புகள் மறந்து
வாழ்வில் இனிப்பு சுவைத்து
ஏற்றத் தாழ்வுகள் கடந்து
புதிய சிந்தனைகள் வளர்ந்து
ஊக்கம் கைவிடாது உழைத்து
எதிலும் வெற்றிகள் அடைந்து
உறவுகள் பலம் சேர்ந்து
உள்ளம் உவகையில் திளைத்து
சுற்றுச் சூழல் காத்து
மரம் செழிப்பாக வளர்ந்து
மழை நிறைவாகப் பொழிந்து
மண் வளம் பெருத்து
பயிர்கள் பசுமையாகச் செழித்து
நல்ல மகசூல் விளைந்து
வயிறார உணவு கிடைத்து
உடல் ஆரோக்கியம் சிறந்து
பல்லுயிர் போற்றி காத்து
சாதிமத பேதம் மறைந்து
பிரிவுகள் எல்லாம் பறந்து
ஒற்றுமை எங்கும் உயர்ந்து
மனித நேயம் சிறந்து
வருமாண்டு வசந்தமாய் வந்து
வளம் பல அடைந்து
வாழ்வாங்கு வாழ்வு நிலைத்து
மங்களம் எங்கும் நிறைந்திருக்க
இனிய புத்தாண்டு மலரட்டும்..!
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
~பிரியமுடன் பிரியா 💐

ஆனைமுகத்தனே..!
அம்மையப்பன் மைந்தனே
பிடித்த வைத்த
மண்ணிலும் தெய்வமாக
இருக்கும் விநாயகனே..
வேலவனின் அண்ணனே
விந்தை உருவம்கொண்ட
வித்தகனே
வினைதீர்க்கும் வல்லவனே..
அன்னை தந்தையே
உலகென மாங்கனி கொண்டு
உணர்த்திய
அம்பிகைதனயனே..
கண்கவர் கரிமுகனே
தொழில் சிறக்க தும்பிக்கைக்கொண்டு
துணையிருக்கும்
நம்பிக்கை தரும் ஐங்கரத்தானே..
உமையவள் திருமகனே
கண்ட இடமெல்லாம்
உன் முகமே
காணக் கண்டேன் கணபதியே..
பானை வயிறு கொண்ட
ஆனைமுகத்தனே
உன்பாதம் தேடிவந்தேன்
அருளிடுவாய் ஆசிதனை..!
~ பிரியமுடன் பிரியா

கவிதைகளும்
சோக கீதம் வாசிக்கிறது
நீ மெளனமானால்…
என் கண்ணீர் விடுப்பெடுக்கும்
நிரந்தரமாய்..
கண்ண கசக்கிட்டு
நிக்ககூடாது
அசரீரியாய் உன்குரல் கேட்க…
விழியில் நீ இருக்க
இமைக்கவும் மறந்தேன்…
என்னம்மா
என்றழைக்கையில்
இன்னுமொரு தாய்மடியாக
உன்னருகில் நான்…
நீ பிடிவாதமாக
இருந்தாலும்
உன்னிடம் தோற்கவே
விரும்புகிறது மனது…
உன் நினைவுகள்
உறங்காமலிருக்க
உறக்கம் மறந்தது…
தனிமையும் இனிமையே
உன் நினைவுகளை
அசை போடுவதால்…
தீட்டிய கத்தியைவிடத்
தீண்டும் உன் வார்த்தைகள்
கூர்மையாய் பதம் பார்க்கிறது…
உணர்ச்சியற்ற கவிதையும்
“உயிர் மெய்” ஆகிறது
நீ இரசிக்கும் போது…
~பிரியமுடன் பிரியா 💕

இரசிக்க வைத்தாய்
எண்ணத்திலே..
மயங்க வைத்தாய்
பேச்சிலே..
வியக்க வைத்தாய்
அறிவிலே..
அள்ளிக் கொண்டாய்
அன்பிலே..
அழகு இலக்கணமானாய்
நட்பிலே..
ஊக்கம் கொடுத்தாய்
உணர்விலே..
முத்தம் கொடுத்தாய்
உச்சியிலே..
வானாமாய் இருந்தாய்
நேசத்திலே
கடலாய் இருந்தாய்
பாசத்திலே..
குடையாய் இருந்தாய்
விழியிலே..
விதையாய் இருந்தாய்
மண்ணிலே..
தென்றலாய் இருந்தாய்
காற்றிலே..
ஒளியாய் இருந்தாய்
பகலிலே..
தண்மையாய் இருந்தாய்
இரவிலே..
ஆசானாய் இருந்தாய்
ஒழுக்கத்திலே..
உயிராய் இருந்தாய்
மூச்சிலே..
உயர்வாய் இருந்தாய்
பண்பிலே..
வழி நடத்தினாய்
மெளனத்திலே..
கவிதை கருவானாய்
எழுத்திலே..
அனைத்துமாய் இருக்கிறாய்
என்னிலே..
அம்மாவாய் இருக்கிறேன்
உன்னிலே..!!
~பிரியமுடன் பிரியா 💕

அதிகாலையில் கொக்கரக்கோ சேவல் கூவல்
அமர்க்களமாய் அம்மா பாடும் எருமை நேரமாச்சு எழுந்திரு
அப்பாவின் ஏம்மா குழந்தையைத் திட்டாத தூங்குடா கொஞ்சல்
அம்மன் கோவில் ஒலிபெருக்கியில்
செல்லாத்தா செல்ல மாரியாத்தா எல்.ஆர். ஈசுவரி பாட்டு
அதிகாலை அக்கா அழகுற வரையும் மாக்கோலம்
அதில் அவள் பிடித்து வைக்கும் பசுஞ்சாணம் பூசணிப்பூ
ஆத்துத் தண்ணி பிடிக்கப் பித்தளை குடத்துடன் துள்ளல் ஓட்டம்
ஆரவாரமாய் அடுத்த வீட்டு அக்கா தண்ணி பிடிக்கச் செய்யும் ஆர்ப்பாட்டம்
பாம்பாம் பால்காரர் தாசு அண்ணா மிதிவண்டி ஒலி
பரபரவென பால் கறக்கப் பால் பாத்திரத்தைத் தொட்டு இசைக்கும் இன்னிசை
பரந்த கூடையில் பச்சைக் கீரை காய்கறி கொண்டு வரும் பச்சையம்மா பாட்டி
பாசமாகக் கன்னம் வழித்து உச்சிமோந்து கொடுக்கும் வாயாடி பட்டம்
வைக்கோல் அசைப்போட வாயார அம்மாஆ என அழைக்கும் பசு லட்சுமி
வந்து முகத்தில் உரசி முத்தமிடும் கன்றுக்குட்டி பட்டு
வீட்டுத் தோட்டத்தில் இரு(றை)க்கும் கிணற்று நீர் தண்ணீர் வாலி
வளைந்து படர்ந்து பரவி இருக்கும் கல்யாண பூசணிக்கொடி
காடு கழனி வாய்க்கால் வரப்பில் கால் நனைய ஆட்டம்
கிணற்று நீச்சல் அடித்துத் துவைத்த துணி தோளில் ஆடும் சிலிர்ப்பு
திருட்டு மாங்காய் சுவைக்கத் தாண்டி குதிக்கும் வேலி
தெம்மாங்கு பாட்டுக் குத்தாட்டம் கும்மாளம் குதுகலம்
இரட்டைச் சடைப்பிண்ணல் இறுக்கிக் கட்டிய வண்ண ரிப்பன்
இரண்டு சரம் நெருக்கத் தொடுத்த மணக்கும் மல்லி மஞ்சள் கனகாம்பரம்
காஞ்சிப் பட்டுப் பாவாடைத் தாவணி
கையில் கலகலக்கும் கண்ணாடி வளைவி
ஊர்கூடித் தேர் இழுக்கும் திருவிழா
உற்சாகமூட்டும் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம்
பார்க்காமல் பார்த்து முறைத்து இரசிக்கும் இளவட்டம்
பார்த்து இரசிக்க மனசில் வரும் தம்தன தம்தன இளைய இராசா பாட்டு
அன்புத் தம்பியோடு தீபாவளி சரவெடி பங்கிடப் போடும் செல்லச் சண்டை
தெவிட்டாத நெய் அதிரசம் மொறுமொறு கைமுறுக்கு
அக்காவுடன் குளியலறைக்கு வம்பிழுத்து வலுச்சண்டை நல்லெண்ணெய் குளியல்
அண்ணன் வாங்கி தந்த அழகான சுடிதார் அணிந்து அப்படி இப்படி ஆயிரம் திருப்பல்
வெள்ளி தோறும் போகும் மாரியம்மன் கோயில்
வரும் வழியில் பிள்ளையாரிடம் சண்டையிட்டு சமாதானம்
அருகனிடம் அமைதி வேண்டல் ஈசனிடம் இமைமூடி தரிசனம்
அங்கு அறிந்தவர் தெரிந்தவர் அன்பான குட்டிம்மா எப்படி இருக்க விசாரிப்பு
கோடை நாளில் வெட்டிவேர்ப் பானைத் தண்ணி
கம்மக்கூழு பச்சை வெங்காயம் கார மிளகாய் கடி
கோடை விடுமுறைக்குப் பட்டணத்துப் பெரியம்மா பிள்ளைகள் வருகை
கொட்டமடித்து கொட்டகை சினிமா படம் கொறிக்க திண்பண்டம்
பச்சை வயல் ஊடே சன்னல் ஓரம்
பேருந்து பயணம்
பசங்க பண்ணும் கலகலக்கும் கலாட்டா வம்பு தும்பு
பாலாற்றுப் பாலம் மேல் மூச்சு வாங்கப் பேருந்து ஏற்றம்
பார்த்தால் தெரியும் ஏகாம்பரர் கோயில் இராச கோபுரம்
திண்ணையில் ஒன்றுகூடி ஊர்க்கதை கதைக்கும் பாட்டிமார்கள்
தெருவில் தோழமையுடன் விளையாடும் சரியா? தப்பா? ஓடி ஒளியும் கண்ணாம்பூச்சி
காற்று வாங்க வாசலில் கிடக்கும் கயிற்றுக் கட்டில்
கையில் பாட்டி சாதம் உருட்டிப் போட வயிறு முட்டச் சுடச்சுட உண்ணும்
நிலாச்சோறு
மகிழ்ச்சியில் திளைத்துச் சுவைத்து
மனம் நிறைந்த காலம்
மறக்காமல் நினைவில் நிலைத்து என்றென்றும் இருக்கும் கனாக்காலம்
மீண்டும் வேண்டுமென்றாலும் கிடைக்காத சொர்க்க காலம்
மீண்டு(ம்) எக்காலத்தில் எப்போது வருமோ இந்த பொற்காலம்?
~பிரியமுடன் பிரியா 💕

யார் நீ?
அந்தமும் ஆதியுமாய்
இருந்து
சிந்தையை மயக்கினாய்
யார் நீ?
புது புவனம் படைத்து
புவனத்தில் கதாநாயகி
ஆக்கினாய்..
யார் நீ?
துவளும் போது
எண்ணங்களைக்
கொட்டி தீர்க்க
தோள் கொடுத்துத்
தாங்கும் தோழனாகினாய்
யார் நீ?
உனை கண்டாலே
உயிர்த்தெழுச் செய்து
மயிர்க்கூச்செறியச்
செய்கிறாய்…
யார் நீ?
நித்தமும்
நின்மடிச் சேராமல்
நினைத் தழுவாமல்
நித்திரை நித்தியமில்லை…
யார் நீ?
கண் மூடி கனவு காணக்
காணாமல் கண்ணாமூச்சி
ஆடி தவிக்க வைக்கிறாய்…
யார் நீ?
பகலின் ஒளி
இரவின் ஏகாந்தம்
நிலவின் தண்மை
தென்றல் காற்று
புயலின் வேகம்
புரிய வைத்தாய்…
யார் நீ?
பாட்டா படிப்பா
நாட்டியமா
கட்டுரையா கவிதையா
ஆனந்தமா அழுகையா
ஆர்ப்பாட்டமா ஆரவாரமா
அனைத்திலும்
யாது மாய் இருக்கிறாய்…
யார் நீ?
அருகன் அருளுடன்
அகிலத்தை அறிமுகப்படுத்திய
அன்னையா தந்தையா?
ஏழடி வைத்து ஏழேழு
சென்மத்திற்கும்
உடன் வருவேனென
உறுதி பூண்ட
கணவனா?
தவமாய் தவமிருந்து
திருவருள் வேண்டிப்
பெற்ற பிள்ளையா?
இரத்த சொந்தமா
சொந்தமாகிய பந்தமா
பந்தமாகிய உறவா
உறவாகிய சகியா…
யார் நீ?
மண்ணில் புதைந்து
மண்ணுக்கு என்னுடல்
இரையாகும் வரை
மனதில் நிலைத்து இருப்பாய்..
யார் நீ?
விழியில் நிறைந்து
விரல் கோர்த்து
உணர்வில் நுழைந்து
உள்ளத்தில் மலர்ந்து
உயிர் மூச்சில் கலந்து
உயிரை உருக்கும்
அன்பனே ஆருயிரே
அருவுருவமானவனே
இனியவனே என்னவனே
என்னுள் நிறைந்தவனே
நீயின்றி வேறெவரோ…
தமிழனே தமிழே…!
~பிரியமுடன் பிரியா 💕

குத்திட்டாளே
நெஞ்சிலே
குத்திட்டாளே
காதலை நெஞ்சிலே
வித்திட்டாளே….
விதைச்சிட்டாளே
மனசில
விதைச்சிட்டாளே
அன்பை மனசில
பயிரிட்டாளே..
மலர்ந்திட்டாளே
பூவாக
மலர்ந்திட்டாளே
மகிழம் பூவாக
மணம் வீசிட்டாளே..
சிவந்திட்டாளே
கன்னம்
சிவந்திட்டாளே
குழிவிழ கன்னம்
சிரிச்சிட்டாளே..
விழவைத்திட்டாளே
அவளிடத்தில
விழவைத்திட்டாளே
மொத்தமா அவளிடத்தில்
கவுத்திட்டாளே..
சொல்லிட்டாளே
சம்மதம்
சொல்லிட்டாளே
கட்டிக்க சம்மதம்
கொடுத்திட்டாளே..
போற்றிடுவாளே
என்னை
போற்றிடுவாளே
அவளுள் என்னை
வாழ வைத்திடுவாளே..
~ பிரியமுடன் பிரியா 💕
My thoughts and lyrics
A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.
My thoughts and lyrics
Longreads : The best longform stories on the web
The latest news on WordPress.com and the WordPress community.