இதழ்…

இதழ் இசைக்கிறது

மெளன இராகம்..

இதழ் இருக மூடி

இயம்பியது இயலாமையை…

இதழ் சொல்லத் துடிக்கிறது

சொந்தமாகிவிடுவென..

இலை இதழோடு

ஒப்பமந்தமிட்டு உச்சிமோந்தது

பூமாதேவியை..

இதழ் மையாகி

இத்தரை தாளாகி

இலை வரைந்த

இதழோவியம்..!

இதழ் உதிர்த்தது

உறையும்..

இலை உதிர்ந்து

உறையும்..

இரண்டுமே உணர்வில்

நிறையும்..!

~பிரியமுடன் பிரியா 🍂 💋

இதழ் உதிர் காலம்..

வீதிவழி செல்ல விரைந்து நடக்கவும்

ஆதிகதிர் பட்டு மிளிர்ந்தது; – பீதி

அதிர்ந்து விழித்தேன் சிவப்பு இலையா?

உதிர்ந்தது செவ்வித ழா?

————-

உதிரும் இலைகூட

காய்ந்து சருகாகி

மண்ணுக்கு

உரமாகும் மக்கி..

உதட்டில் உதிரும் வார்த்தை

உள்ளத்தில் பதிந்து

உரமாகும் மனதில்

உவகை ஊற்றெடுக்க..

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.”

– வள்ளுவர்

– பிரியா பாஸ்கரன் 💋

ஒன்றாய் நின்று…

ஓய்வாக உட்கார பார்க்கும் மசூதியில்

சாய்வாகக் கோயில் புறா…

நன்றாக ஓடி நதிகள் இறுதியில்

ஒன்றாகச் சேருமிடம் ஒன்று…

உதிரும் நிறம்கூட மாறுமா? எல்லோர்

உதிரம் சிவப்பு நிறம்…

அற்பமாய் தூண்டும் பிரித்தாளும் பேதமையை

ஒற்றுமையாய் வென்றிடுவோம் நின்று…

மனித இணக்கம் தழைத்தோங்க மண்ணில்

மனிதம் கடைப்பிடிப் போம்…

அன்பையும் ஈந்தும் அறத்தினைப் போற்றியும்

ஒன்றாக வாழ்ந்திடு வோம்..!

– பிரியா பாஸ்கரன் ☮️✌️ 🙏🏻

யுகமுள்ளவரை காதல்…

கலமெல்லாம் ஆழ்மனதில் காதலின் ஞாபகம்

ஓலமிடும்; என்றுமே ஓயாத – கோலமே;

காதலர்கள் தோற்கிறார்கள் என்றுமே எப்பொழுதும்

காதலோ தோற்பதில் லை…!

– பிரியா பாஸ்கரன் 💕

அன்பான ஆயம்மா..!

கூனு விழுந்தாலும்

கூனி குறுகி பிறர் முன் நிற்காமல்

வேகாத வெயிலும்

வேப்பம்பழம் பொறுக்கி

கூறு போட்டு விக்க

தள்ளாத வயதைத் தள்ளி வைத்து

தன் கையே தனக்குதவியென உழைக்கும்

குழந்தை மனம் கொண்ட குமரியே

தெரு முனையில் இருக்கும்

கடைக்குக் காய் வாங்கச்

சொகுசாக ஊர்தியில் போய்

சுகம் கண்டு

குனிந்தால் முதுகு வலி

நடந்தால் முட்டி வலி

உத்து பார்த்தால் கண் வலி

நின்றால் இடுப்பு வலி என

நாள் தோறும்

வலிகளை விதவிதமாக பெயரிட்டு

வாழும் இளம் வயோதிகர்கள்

இருக்கும் இந்நாளில்

முட்டிக்காலை முகத்தோடு ஒட்டி

மூன்று தலைகள் தெரிய

கையிரண்டும் பரபரவென

வேலைசெய்ய

விரல்கள் விறுவிறுவென

நர்த்தனமாட

பொக்கை வாய் பாட்டுப்

பாடும் குதலையே

குறை கூறாத மனம்கொண்டு

வாழ வழிதனை செயற்கண்டு

வரிகள் நிறைந்த முகந்தன்னில்

வஞ்சனையில்லாத தெளிவுகண்டு

வாஞ்சையான புன்னகைப்பூண்டு

கள்ளமில்லா உன்னழகைக் கண்டு

மனம் கொள்ளை கொண்டு

வந்துவிடு என்னோடு

துணையோடு வாழ வழிசெய்யவோமென கூற

வாழ்ந்த மண்ணைவிட்டு

வெட்டி வேலை இல்லாமல்

வாழ வயதாகவில்லையென

வேங்கையாய் வீறுகொண்டு

வேறு பேச விடமாட்டாள்

வெள்ளையம்மாள்..

வாய்ப்பேச்சில் உனை வெல்ல

யாருண்டு என வணங்க

வேப்பம் பழம் சாப்புடுகண்ணுவென

மகிழ்ந்து உபசரித்து

வெள்ளந்தியாய்ச் சிரித்து

வாயார வாழ்த்துவாள்

வளமாக நான் வாழ…!

– பிரியா பாஸ்கரன் 🙏🏻

செல்ல மாமாஆ..!

குண்டு மாங்கா திரைப்படம் பாடல் மெட்டில்…

செல்ல மாமா நெஞ்சுக்குள்ள

மின்னல் போல வந்தாயே

யாரும் இல்லா எடமா பாத்து

கண் ணடிச்சாயே அய் அய் அய் அயே

கண்ணடிச்சா என்ன தப்பு செண்டு போல இருக்கிறியே

சொக்கி நானும் நிக்கும் போது ஓடி போகுறியே

உள்ளஇழு க்கும் காத்தப் போல உள்ளுக் குள்ள போகுறியே

மூச்சு முட்ட முழுசா என்ன சாய்க்க பாக்குறியே

மழையின் கால மேகம் போல உடம்பு மேல தூவறியே

எந்தன் நெஞ்சுக் குள்ள போயி உயிர நனைக்கிறியே …

கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்கக்கோ

கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககொக்கக்கோ

ஏ செல்ல மாமா நெஞ்சுக்குள்ள

மின்னல் போல வந்தாயே

யாரும் இல்லா எடமா பாத்து

கண் ணடிச்சாயே அய் அய் அய் அயே

முத்தான விழிக்குள்ள உன்ன நானும் பொத்திப்பொத்தி வைக்கப்போரேன்

உன்னோட முகத்த என்னோட மனசில பச்சக்குத்தி வைக்கப்போரேன்

ஏ பித்தான உம் மேலே உன்ன தானே கண்ணாலம் கட்டப்போரேன்

கண்ணாடி விழியின் முன்னாடி நின்னு தான் சம்மதம் கேட்டகப்போரேன்

மரபாச்சி மரபாச்சி பொம்மபோல நீ

எனப் பாக்காதே

தீண்டாம தீண்டும் சுடர் விழி பட்டதும்

தூங்கதே மனமே தாங்கதே

செல்ல மாமா

செல்ல மாமா நெஞ்சுக்குள்ள

மின்னல் போல வந்தாயே

யாரும் இல்லா எடமா பாத்து

கண் ணடிச்சாயே

– பிரியா பாஸ்கரன் 💕

மாண்டும் மறையாமல் மீண்டும்..

இலைகள் உதிர்ந்து

மண்ணுக்கு உரமானது..

மரம் இறந்து

மண்ணடுப்புக்கு விறகானது…

பனித்துளி கரைந்து

மழையாகப் பொழிந்தது…

விதை வெடித்து

விருட்சத்திற்கு வித்திட்டது…

கல் சிதைந்து

அழகான சிற்பமானது…

தீக்குச்சி தன்னுயிர் ஈந்து

மெழுகுவத்திக்கு உயிரூட்டியது…

மானிடா நீ என்ன செய்வாய்?

கண்மூடிவிட்ட வண்ணம் கண்ட கண்மூடா விழித்திரை

கற்பனையில் வர்ணம் காணாதவர் காண..

இறந்தும் இறக்காமல் துடிக்கும்

இதயம் பிறர் வாழத் துடிக்க..

சீருடன் இயங்கும் நுரையீரல்

சிறப்புடன் மற்றவர் வாழ..

இழந்த இழையங்கள்

இயற்கையாகத் தானே மீளுருவாக்கும்

கல்லீரல் வேண்டியவருக்குக் கிடைக்க..

சிறுநீர் கழிக்கச் சிறுநீரகம்..

உணவுச் செரிக்கும் கணையம்..

இரையகக் குடற்பாதையின் குடல்..

சுருக்கம் நிறைந்த தசை..

உடலுறுப்பு பாதுகாக்கும் எலும்பு..

இவையனைத்தையும்..

மானிடா நீ இறந்து

தீயிக்கு எரிந்து சாம்பலாகும் முன்..

மண்ணில் புதைந்து மக்கும் முன்..

பாழுடம்போடு அழியாமல்

பாரினில் பற்பலர் பயன்பெற்று

மானிடம் தழைத்தோங்கிட

மரணவாசலில் பரிதவிப்பவருக்கு

மாண்டும் மறையாமல்

மீண்டும் மண்ணுலகில் வாழ

மறவாமல் இறக்கும் முன்

மகிழ்ந்து தன்னுடலை தானமாக ஈந்து

உடலை உயிர் பெறச்செய்திடுவாயா..?

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”

– திருமூலர்

நட்பின் இலக்கணம்..!

அன்பு மனம் கண்டு

சந்த நயம் கொண்டு

எழுதிய கவிதைக்குப்

பாராட்டுகள் பலரிடம் பெற

நட்போ

கண்டதே காட்சி கொண்டதே கோலம் கடைப்பிடிக்க..

மௌனத்தை மொழியாகக் கொள்ள..

கவிதையில்

இலக்கணப் பிழை தானோ?

விரதம் கலைக்காத மெளனவாசி

விருப்பம் உரைக்காத சுகவாசி

நட்பைப் போற்றாத சீவராசி

அன்பை உணராத அகராதி

விழிநீர் துடைத்திடும் விரல்

வேண்டாம்

நானிருக்கிறேன் அணைத்திடும் கைகள்

வேண்டாம்

என்னம்மா அழைத்திடும் கரிசனம் வேண்டாம்

உச்சி மோந்து முத்தமிடும் உதடு

வேண்டாம்

பரவாயில்லை உதிர்த்திடும் சொல்

வேண்டாம்

பார்த்துக்கொள்வேன் போற்றிடும் பாசம்

வேண்டாம்

சொல்லுவதைக் கேட்டிடும் காது

வேண்டாம்

பாவம் என்று உச்சு கொட்டிடும் பரிதாபம்

வேண்டாம்

மனதைப் படித்திடும் ஆற்றல் வேண்டாம்

புரிந்து கொண்டேன் என்ற பார்வையும்

புண்படுத்தாமல் இருப்பேன் என்ற முயற்சியும் போதுமன்றோ..

அதுவே நட்பின் இலக்கணமன்றோ?

– பிரியா பாஸ்கரன் 🙏🏻

அன்பு..!

❤️❤️❤️

அன்பு..!

❤️❤️❤️

மனதை

படிக்கும் ஆற்றல்

கொண்டது…

🌸

நம்மில் ஊற்றெடுக்கும்

வற்றாத சீவநதி..

🌸

வாழ்வு வங்கியில்

வீற்றிருக்கும்

விலை மதிப்பில்லாச்

சொத்து..

🌸

இதயம் துடிக்கும் வரை

இருக்கும்

உயிர்ப்பான உணர்வு…

🌸

கெஞ்சும் கொஞ்சும்

மிஞ்சும் விஞ்சும்

தருணங்களைத் தருவது..

🌸

பெறுபவருக்கும்

கொடுப்பவருக்கும்

கிடைக்கும் பரிசு…

🌸

பேச்சில் வெளிப்படும்

மூன்றெழுத்து மந்திரம்..

🌸

காயங்களை

ஆற்றும் அருமருந்து..

🌸

ஊடல் உணர்த்தும்

முடிவு..

🌸

ஓசையின்றி

ஓசையாக

உரைத்திடும்

விழிமொழி..

🌸

விதிமுறைகள்

இல்லாமல்

கட்டுப்படுத்துவது

கட்டுப்படுவது..

🌸

– பிரியா பாஸ்கரன் ❤️