
மரங்(லர்)களே..!

🌸 🌸 🌸 🌸 🌸 🌸
மரங்(லர்)களே!!
🌸 🌸 🌸 🌸 🌸 🌸
மலர்களே..
தினமும்
சிரித்து மறைந்தாலும்
நிதமும்
மலர்ந்து சிரிக்கும்
இரகசியம்
என்னவோ?
🌸 🌸 🌸 🌸 🌸 🌸
மானிடனோ மிதிக்கிறான்..
மரமோ மதிக்கிறது..
பூமாதேவியைப் பூக்களால்
அர்ச்சித்து..!
🌸 🌸 🌸 🌸 🌸 🌸
அட..
உனக்கு
எப்படித் தெரியும்
நான்
வருவேனென
வரவேற்கக்
மலர்கம்பளம்
விரித்தாய்..!
🌸 🌸 🌸 🌸 🌸 🌸
சிந்தும்
சிரிப்பில்
சிதறவிட்டாய்
பூக்களை…!
🌸 🌸 🌸 🌸 🌸 🌸
காற்று தீண்டிட
நாணத்தில் பூக்களை
நழுவவிட்டாயோ..!
🌸 🌸 🌸 🌸 🌸 🌸
பூவையருக்கு
பூக்கோலமிட
கற்றுத்தருகிறாயா?
-பிரியா பாஸ்கரன் 🌸 🌸 🌸
ம்…மா…ஆ! கவி துளிகள்!

கனவாகவே
இருந்து விடுவாயோ
என்றிருந்தேன்..
நிசத்திலே
நீயும் வந்தாய்
வாழ்க்கையை
வண்ணமயமாக்க..!
===========================
சத்தமின்றி முத்தமிடும் உன்
ஒற்றை இதழ் ஒற்றலில்
மூர்ச்சையானேன் என் முத்தே!
===========================
பரிதி கதிர் பட்டிட
பனிமழை உருகுவதுபோல
பாகாய் உருகுகிறேன் உன்
பிஞ்சு விரல்கள்
நெஞ்சை தழுவையில்..
===========================
சில்லென்ற வானில்
சிக்கெனச்
சிறகடித்துப் பறக்கிறேன்
உன் சின்ன
கருவிழிகள் காந்தமாய்
இழுக்கையில்..!
===========================
சிந்தும்
சிரிப்பைச் சிறைபிடிக்கச்
சிக்கிக் கொண்டது
என் மனது!
===========================
நிமிடங்களும்
நொடிகளாய்
கரைந்திடுதே
உன் மழலையில்..!
===========================
(க)விதை வித்திட்டு
விருட்சமாய் வளர்ந்து
வீசுதே மலர் மணம் மனதில்
உன் ஒற்றை சொல்லான
ம்….மா…ஆ…வில்!
-பிரியா பாஸ்கரன் 💕 💕 💕
ஞானம்..!

இன்று கல்லறை
கடக்கும் பொழுது
தோன்றிய கவிதை..
புதுக்கவிதை:
கல்லறை
கடக்கும் பொழுது
கனத்தது மனது..
இறந்தப் பின்
எரிந்து
எந்திரத்திற்கு
இரையாகும் முன்..
இருக்கும் பொழுது
இயன்றதை இல்லோர்க்கு
இன்முடன் இயன்றிடுவோமே..!
மரபுக் கவிதை:
கல்லறை பார்தேன் கனத்தது எண்ணமும்
நல்லறம் செய்வேன்; வலுத்தது – சொல்லறம்
ஈந்துடனில் லோர்க்குப் பகிர்வேன் இருப்பதை
எந்திரத்தில் காந்தலாகும் முன்!
-பிரியா பாஸ்கரன் 🙏
கவிஞர் குடும்பம்..!

கவிஞர் புலனத்தில்
இணைந்து
கவிதை எழுதியதில்
தொடர்ந்து
வெண்பாக்களைக் கற்றுத்
தேர்ந்து
அந்தாதிக்கு வார்த்தைத்
தொடுத்து
எண்ணங்களைக் கவிதையாக
பகிர்ந்து
சொந்தங்களான பந்தங்கள்
அமைந்து
கட்டத்தில் ஒன்றாய்
கலந்து
காலமெல்லாம் நம்முறவு
நிலைத்து
வாழ்வாங்கு வாழ்வோமா!!
-பிரியா பாஸ்கரன் 🙏
பழகி விட்டது..!

கஷ்டங்களைக் காதலித்துப்
பார்க்கப் பழகினேன்..
சந்தோசம் பழகி விட்டது!
தடைகளைப் படிகட்டுகளாக்கி
முயன்றுப் பார்த்தேன்..
வெற்றிப் பழகி விட்டது!
கடுஞ்சொல்லை பேசுகையில்
நீக்கப் பழகினேன்..
இனிமை பழகி விட்டது!
அழுகைப் பலவீனமெனச்
சொல்லிப் பழகினேன்..
சிரிப்பு பழகி விட்டது!
செய்வதை விருப்பமுடன்
செய்யப் பழகினேன்..
மகிழ்ச்சி பழகி விட்டது!
விட்டுக் கொடுக்கத் துணையுடன்
கற்றுப் பழகினேன்..
சுகம் பழகி விட்டது!
விட்டுக் கொடுக்காமல் நட்புடன்
இருக்கப் பழகினேன்..
தோழமைப் பழகி விட்டது!
எண்ணங்களைக் கவியில்
வடிக்கப் பழகினேன்..
நிம்மதியான உறக்கம் பழகி விட்டது!
எதிர்பார்ப்பில்லாத வாழ்கை
வாழப் பழகினேன்..
ஏமாற்றமில்லாத வாழ்கை பழகி விட்டது!
கோபத்தைத் திறனுடன்
அடக்கப் பழகினேன்..
பழக்கமே(அமைதி) பழகி விட்டது!!
-பிரியா பாஸ்கரன் ✌️ 🙏
பறை வாழ்வாங்கு வாழ்க!

ஆதி இசைகள் அழிந்து வருகின்றன
அதில் பறையை இணையாமல் காக்கும் கலைஞர்கள் வாழ்க!
பறைக் கற்றுக் கொண்டு
பேணிப் பாதுகாக்கும் கலைஞர்கள் வாழ்க!
பறையைக் கலையாய் மட்டுமில்லாமல்
பறையை உணர்வாய் மதிக்கும் தமிழர்கள் வாழ்க!
பறையைப் பள்ளியில் பாடமாக்க
பாடுபடும் நல்லுள்ளங்கள் வாழ்க!
பாரம்பரிய இசைக்கருவிகளான
பறைக் கருவிகள் வாழ்க!
உணர்வை பறையடித்து
உள்ளத்தில் உவகை ஊற்றாக
உண்டாக்கும் டெராயிட்
உணருயிர் கலைக்கூடம் வாழ்க!
பரதேசம் வந்து பறையைப்
பறைந்துச் சொல்லும் சக்தி இராவணன்
வாழ்வாங்கு வாழ்க!!
பறைந்துச் சொல்கிறோம்
பாரினில் உள்ள அனைத்துப்
பறைக் கலைஞர்களுக்கும்
பற்பல நன்றிகள் உரித்தாகுக!!
– பிரியா பாஸ்கரன் 🙏🙏🙏
வேலவா!!

கருவாய் உனையே கருத்தில் குருவாய்
உருவாய் மனதில் உவகை – அருள்வாய்;
வருவாய் உனது மயிலில்; தருவாய்
மருவாய் மனம்நிறை வாய்!
—————————————————
கருவாய் உனையே கதியாய் நினைத்தால்
உருவாய் மனதில் உவகை – அருள்வாய்;
வருவாய் மயிலுடன் வேல்கொண்டு என்றும்
தருவாய் அமைதிதீசி தா!
-பிரியா பாஸ்கரன் 🙏
உள்ளே…வெளியே..!

மஞ்சள் சாமந்தி
கேட்டது
வெளியே வெள்ளை
மலர்கள் கொட்டியிருக்க
என்னை ஏன் நீ
வைத்திருக்கிறாய் என்று..
நான் சொன்னேன்
மஞ்சள் மகிழ்ச்சிக்கு
என் வீடு என்றும் மகிழ்ச்சியில்
இருப்பதால்
நீ உள்ளே…
வெள்ளை அமைதிக்கு
என் நாடு என்றும் அமைதியாக
இருக்க வேண்டி
இருப்பதால்
அவள் வெளியே..
என் கைப்பட்டாலும்
நீ கரையாமல்
சில நாட்கள்
சந்தோசமாக இருப்பாய்
உள்ளே வாடாமல்..
என் கைப்பட்டால்
அவள் கரைந்து
சில நொடிகளில்
காணாமல் போய்விடுவாள்
வெளியே உருகிப்போய்..
அவரவருக்கென்று ஓரிடம்..
அவரவர் காலம் இருக்கும் வரை
மகிழ்ச்சியாக இருக்கட்டுமே..!!
-பிரியா பாஸ்கரன் 🙏
இராணுவ வீரன்!

ஒரு வெண்பா வீரர்களுக்கு….
தடையாக நாட்டுடை எல்லையில் வீர
நடையுடன் ஏதடை வெல்லப் – படைகள்
புடைசூழ நிற்கிறான் நம்முயிர் காக்க
கொடையாகத் தன்னுயிரே ஈந்து!
பொருள்:
இராணுவ வீரன்..!
தடையாக(காவலாக) நாட்டின் எல்லையில் வீர நடையிட்டு ஏதடை(பகைமை) வெல்லப் படைகளுடன்(ஆயுதங்களுடன்) புடைசூழ நிற்கிறான் நம்முயிரைக் காக்க கொடையாக(தானமாக)
தன்னுயிரைத் தந்து..
-பிரியா பாஸ்கரன் 🇮🇳
