முரண்!

சொல்வது சொல்லிவிடலாம் ஆனால்
சொல்லியதை அள்ளினவர்
இல்லை

கெட்டவங்க திருந்தலாம் ஆனால்
கெட்டவங்க எல்லோரும் திருந்தினதாக சரித்திரம் இல்லை

கனவு காணலாம் ஆனால்
கனவு எல்லாம் நிசங்களாக மாறுவது இல்லை

பொய்பேசக் கூடாது ஆனால்
பொதுவாய் நல்லது நடக்க பொய்யும் தவறில்லை

கடன் வாங்கலாம் ஆனால்
கடன் அன்பை வளர்த்தது
இல்லை

மரத்தை அழித்து வீடு கட்டலாம் ஆனால்
மரத்தை அழிப்பதனால் மழை வருவது
இல்லை

விளைச்சல் அதிகமாகலாம் ஆனால்
விளைத்தவனுக்கு விடிவு காலம் வருவது
இல்லை

முரண் இருக்கலாம் ஆனால்
முரணே வாழ்க்கையாக இருப்பது நல்லது இல்லை

முரண் இல்லாமல் வாழ்க்கை இருக்கலாம்
முரணே இல்லாமல் இருக்கும் வாழ்க்கை
இனிப்பது இல்லை

முரண் இருக்கலாம் ஆனால்
முரணோடு சேர்ந்த அரண் இல்லாத
வாழ்க்கைப் பயன் இல்லை!!

“முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.” – வள்ளுவன்

மு. வ: மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

-பிரியா பாஸ்கரன் 🙏

நிலமகள்!

வெண்பட்டுச் சேலை அணிந்து மலர்ச்சூடி
வெண்முத்து மாலையுடன் காக்கும்இப் -பெண்ணவள்
கண்டு தலைவனை நாணம் வெகுவாகக்
கொண்டு மறைந்ததே னோ?

ஈதல் இசைபட வாழ்தல்!

எத்தனைப் பிறவியுமே எடுத்தாலும்
அத்தனைப் பிறவியிலும் செய்திடும்
இத்தனை ஈதலும் ஈன்றிடும்
பித்தனைப் போலற்ற புது வாழ்வு!!

“ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.” – வள்ளுவன்

மு.வ. பொருள்:

தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

-பிரியா பாஸ்கரன் 🙏

தமிழே…காதலனே..!

கால் நனைத்து கொஞ்சி
விளையாடும்
கடல் அலைகள்…

காலம் நேரம் தவறாமல்
கணக்காக வேலை செய்யும்
கடிகாரம்…

காலையில் கிழக்கில் உதித்து
மாலையில் மேற்கில் மறையும்
கதிரவன்..

இரவு பகல் வேறுபாடு
இல்லாமல் சுழலும்
பூமி..

காலமெல்லாம் உயிர்வாழ
சுவாசிக்கும் காற்றை வெளியிடும்
மரம்..

அனைத்துக்கும்
ஓய்வு என்பதே இல்லையோ
அதுபோல..

தன்னில்
மாய்ந்து போகாமல்
உன்னில்
கரைந்து காலம்
செல்லும் வரை
என்னில்
தமிழே…
என் காதலனே
ஓயாமல்
என் நெஞ்சத்தில்
நீயே நிறைந்து
கைகோர்த்து நடந்து
சுவாசத்தில் கலந்து
இருப்பதனால்
உயிர்ப்புடன் இருக்கும்
உன் காதலி… பிரிய பிரியா!!

-பிரியா பாஸ்கரன் ❤

வாழ்க்கை..!

புரியாத புதிராக
புரியாமல் இருப்பதனால்
புதுமை படைக்க
புதுவேகம் பிறந்து
புதுத் தேடல் துவங்கி
பூமியில் இருக்கும் வரை
புண்ணியம் செய்து
புதுச் சுகம் பெற்று
புத்துயிர்(புது மலர்ச்சி) ஈன்று
புது உலகம் அடைந்து
புசு சென்மம் இப்பிறவியிலே
எடுப்போமாக…!!

-பிரியா பாஸ்கரன் 🙏

பேசும் சித்திரங்கள்!

“உங்கள் மகிழ்ச்சிக்கும்
துயரத்துக்கும் நீங்களே காரணம்!” –
புத்தரின் சித்திரம்
புன்னகையுடன் புத்திமதிச்
சொன்னது நான் கண்ணீர்விட்டபொழுது!

“மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்;” –
பாரதியின் சித்திரம்
தூக்கி நிறுத்தியது நான்
துவண்டப்பொழுது!

“பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.” –
மகாத்மாவின் சித்திரம் அன்புடன் அறிவுறுத்தியது நான் பிறரைக் குறைச் சொன்னப்பொழுது!

“மனிதன் எதை விதைக்கிறானோ
அதன் விளைச்சலையே அறுவடை
செய்வான்” –
யேசு நாதர் சித்திரம்
எடுத்துச் சொன்னது நான்
கோவப்பட்டப்பொழுது!

“கட்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னைக் கொன்று விடும்
கண்ணை திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்” –
அப்துல்கலாம் சித்திரம்
நினைவூட்டியது நான்
துன்பத்தை கண்டு ஓடியபொழுது!

“ஆயிரம் எதிரிகளைவிடத் தன்னை
வெல்வதே கடினமான செயல்” –
மகாவீரர் சித்திரம்
மெளனமாக மொழிந்தது நான்
“நான்” எனும்
அகந்தையில் ஆழும்பொழுது!

“மரத்தை வைத்தவன்
தண்ணீர் ஊற்றுவான்” –
அகத்தில் தோன்றும்
அப்பாவின் சித்திரம்
அப்பப்ப இந்த பழமொழியை
அறிவுறுத்தும் நான்
வீண் மனகவலைக் கொள்ளும் பொழுது!

“உயர்வாய் உள்ளென உண்மை
உரைத்த திருவள்ளுவன் திருவுளம் பற்றுவாம்” –
தோழனின் மனச்சித்திரம்
உள்ளத்தில் குரலெழுப்பும் நான்
தீர்வு காண திணறும் பொழுது!

“அன்புடன் இரு
ஆனந்தத்தைக் கொடு
இறுமாப்பு கொள்ளாதே
ஈகை செய்
உண்டிச் சுருங்கு
ஊழ்கம் செய்
எண்ணிச் செய்
ஏளனம் செய்யாதே
ஐந்தெழுத்து மந்திரம் சொல்
ஒயாமல் கல்
ஓங்காரனைத் துதி
ஒளவியம் ஒழி
அஃதே நல்லது” –
தினந்தோறும்
கண்ணாடியில் தெரியும்
என் சித்திரம்
தலைத்தட்டிச் சொல்லும் நான்
தலைவாரும் பொழுது!!

யார் சொன்னது?
சித்திரங்கள் பேசாது என
சித்திரங்களை உற்று கவனித்தால்
சிறந்த கருத்துகளையும்
சிந்தித்து செயல்படுவதற்கும்
சிறப்புடன் வாழ்வதற்க்கும்
சிறந்த பாடம் எடுக்கும்
நாம் கற்கும்
மாணவர்களாக இருந்தால்..!

-பிரியா பாஸ்கரன் 🙏

ஆழிப்பேரலை..!

அலைகளே..
நீ ஆர்பரிக்க ஆர்பரிக்க

“வூம்” கொட்டி
ஊற்சாகப் படுத்திய
கடலின் செயலால்
ஆழிப்பேரலையாகி
கரைக் கடந்தாயோ?

“வூம்” கொட்டி
களைத்த
கடலின் செயலால்
ஊற்சாகம் வேண்டி
கரைக் கடந்தாயோ?

என நான் கேட்க

அலைகள்
ஆணித்தரமாகச் சொன்னது

“டூர்” சத்தமிட்டு
ஆழ்த்துளைக் கிணறு
தோண்டுவது
அணுவைப் பிளப்பது
குப்பையைக் கொட்டி
தட்ப வெப்ப நிலை மாற்றுவது
நிலத்தின் மார்பில் குத்திக்கிழித்து
நிலமடந்தையை கொல்ல முயல்வது
அதனால்
நீ உண்டாக்கிய பேரலையே
பேரழிவுக்குக் காரணம்
உன் பேராசையேயன்றி
வேறேது காரணம்
முட்டாள் மானிடா..
என்றது..! –
“தன் வினைத் தன்னைச் சுடும்”.

– பிரியா பாஸ்கரன் 🙏

இந்தியப் பயணமும் மலரும் நினைவுகளும்..!

இந்தியப் பயணமும்…
மலரும் நினைவுகளும்..!

பறந்து சொந்த மண்ணுக்குச் செல்ல
பயணச் சீட்டு வாங்கியவுடன்
பல திட்டங்களை வகுத்து
படபடத்துப் பறபறக்கும் மனது
பல காதங்களைத் தாண்டி
பட்டாம் பூச்சியாய்..

நாட்களை எண்ணிஎண்ணி
நாளும் பொழுதும் ஓடாதாவென
நாட்காட்டியை நாள்தோறும்
பார்த்தாலும்
நாள் ஒன்றுக்கு இருபத்தி
நான்கு மணி நேரம் ஆகவேண்டுமென
நன்கு தெரிந்தாலும் நப்பாசையில்
நாழிகைகளை எண்ணிடும் என் மனது..

வீட்டிலிருந்து புறப்பட்டு
விமானம் நிலையமடைந்து
வரிசையில் நின்று பாதுகாப்பு சோதனை
முடிந்து விமானத்திற்கு
வாயிலில் காத்திருக்கும் வேளையில்
அடுத்த நிமிடம் ஊரை
அடைந்துவிட மாட்டோமாவென
மனம் மிதமிதக்கும் காற்றில்..

விமானத்தின் சன்னல் ஓரத்தில்
உட்கார்ந்து கொண்டு இருக்க
விமானம் தரையிரங்க
நம் மண்ணைக் காண போகும்
சில நொடிகளுக்குள்
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உணர்ச்சிப் பொங்க
ஒரு பந்து உருளும்
கண்களில் கண்ணீர்த் துளிகள்
திரண்டு நிற்கும்
காத்திருக்கும் சொந்தங்களை
காண..

ஆயிரம் வார்தைகள்
சொல்லா சுகத்தை
ஒரு இறுகிய அணைப்பு
சொல்லிவிடும் தெரிவித்துவிடும்
சொந்தங்களுக்கு..

விமான நிலையத்திலிருந்து
வீடு செல்லும் வரை
வீட்டுச் செல்ல பிராணி முதல்
ஊர் சொந்த பந்தங்களின்
நலன் விசாரிப்பை பேசிச் செல்ல
சில மணி நேரப் பயணம் கூட
சில நொடிகளாகிவிடும்..

வீடு போகும் வழியில்..

நான் படித்த அரசினர்
பள்ளிளைக் கடக்க
தோழிமாறுடன் காக்கா கடி கடித்து
உண்ட மிட்டாய்..

சந்தையைக் கடக்க..

கண்ணாடி வளைவிகளை வாங்கி
கைநிறைய அடுக்கி
கலகலவென ஓசையெழுப்பி
கடைத் தெருவில் ஆங்காங்கே
தொங்கும் கண்ணாடியில்
அப்படி இப்படி திரும்ப திரும்ப பார்த்தது..

என் தோழன் கணபதியின்
கோவிலைக் கடக்க..

அவனுடன் பல நேரங்களில்
சண்டையிட்டுச் சமாதானம் ஆகியது
நினைவு வர கோயில் உள் செல்ல
“என் அம்மாவோ குளிக்காம கூட
கோயிலுக்கு போகும் பொண்ணு
நீ மட்டும் தான்னு சொன்னா..
என் நண்பண்ணு சொல்லுவ”
என்ற புலம்பலுடன் வீடு செல்லுவாள்..

பிறகு பொடி நடையாக
அங்கிருந்து வீட்டுக்கு நடைப்போட
வழியில் வாஞ்சையுடன் பாப்பா குட்டியம்மா வாத்தியார் பொண்ணு
ஏங்கண்ணு எப்ப வந்த
எப்படியிருக்க எனும்
பிரியாவுக்கு பிரிய நலவிசாரிப்புக்கள்..

நூலகத்தை கடக்க..

மதிய உணவுக்குப் பின்
மாலை ஓய்வு நேரத்தில்
“சத்தம் போடாதே” என்ற
பலகையின் பக்கத்தில்
குரட்டையுடன் தூக்கும்
நூலகர் மாமாவின் நினைவு..

தபால் நிலையத்தை கடக்க..

ஆங்கில படிவத்தைப் பார்த்து அலறி கைகள் வேலை நிறுத்தம் செய்ய
தபால்காரத் தாத்தா
ஆங்கிலத்தின் மீதிருந்த
பயத்தைப் போக்கியது..

எங்கள் வீதியில் நுழைந்தவுடன்
ஒவ்வொரு சொந்தமாகிய பந்தங்களும்
ஆடு மாடுகளும் வீடும் மரமும்
கிணறும் தண்ணீர் குழாயும் ஏன்
கல்லும் மண்ணும்கூட
பல கதைகள் கதைக்கும்..

பாதை மாறாமல் வீடு செல்ல அப்பாவோ
என்னம்மா எல்லாம் முடிந்ததா என கேட்க அம்மாவோ எங்க இன்னும்
களத்து மேடு கழனி காடு
கிணற்று குளியல்
மாரியம்மன் கோவில்
மாங்காய் தோப்பு
புளியம் பழம் புளிப்பு
கடைத்தெரு கடலை உருண்டை
கனகாம்பரத்துடன் பிடித்த முல்லைப்பூ
முழம் முழமாய் சூடி
கடைவீதியில் தெருக்களில்
கண்ட அனைத்தையும் வாங்கி
மாலையில் மகாவீரர் தரிசனம்
மணிக்கணக்கா தோழிகளுடன் அரட்டை அப்புறம் தான்
தேர் நிலைக்கு வரும் என
நீண்ட பட்டியலிட..

அம்மாவை அணைத்து அவளின்
மஞ்சளுடன் கலந்து வரும்
வேர்வையின் வாசத்தை நுகர்ந்து
முத்தமிட்டு ஓடுவேன்
பின் வாசலின் கிணற்றடியை நோக்கி
சிறு பிள்ளையாய்..

திரும்ப அமெரிக்கா வரும்
நாளில் அடுத்து சொந்த ஊருக்கு
செல்லும் வரை தாங்க வேண்டிய இனிமையான நினைவுகளை
மூட்டை மூட்டையாகக் கட்டி
சேமித்து வைத்து மனதில் ஒரு பாரம் குடியேறி சுகமான சுமையாகக் கணக்க
மீண்டும் சன்னல் ஓர விமானப் பயணம்…!!

“ஹே தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ……..ஆ ……..ஆ …..ஆ….”!!!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

மறுமணம்!

இனமோ பெண்மை
இறந்தது ஆண்மை
அழகிய பதுமை
வயதோ பேரிளமை

உடலில் வளமை
அழகின் பகைமை
கயவர்களின் தீமை
அதுவே உண்மை

வாழ்வில் ஏழ்மை
குணத்தில் தகைமை
மனதில் நோன்மை
இவளோ மென்மை

கைம்மையின் அடிமை
பிரிவின் தனிமை
ஒதுக்கப்பட்ட ஒருமை
காலத்தின் கொடுமை

சகுனத்தின் உவமை
சொற்களில் வெம்மை
செயல்களில் கடுமை
பழிப்பதா தன்மை?

வலிகளின் உடமை
கனவுகளும் கருமை
சமூகத்தின் கயமை
ஏனிந்த பொறுமை?

எண்ணங்களின் பழமை
ஊராரின் மடமை
உடைத்தெறிவது கடமை
உறவுகளின் உரிமை

போதுமிந்த இம்மை
வேண்டும் மறுமை
வேண்டாமே வெண்மை
மறுமணமே மேன்மை

பிறக்கட்டும் புதுமை
வெல்லட்டும் வாய்மை
நிலைகட்டும் திண்மை
கிடைக்கட்டும் ஒண்மை

வளரட்டும் செழுமை
சிறக்கட்டும் நிலைமை
அடையட்டும் தாய்மை
மலரட்டும் இனிமையோ இனிமை!!

-பிரியா பாஸ்கரன் 🙏

நண்பா(பர்களே) ஒரு நன்றி நவில் வெண்பா..!

வெண்தளிக்கு தோழமை இந்த மரங்களும்

கண்ணிமைக்கு தோழமை கண்மையும்இப் – பெண்ணவளின்

கற்ற குழுவினர் தோழமையில் பாடமும்

கற்று கவிதையில்தேர்ந் தேன்!

மண்ணுக்கு தோழமை இந்த மழைச்சாரல்

விண்ணுக்கு தோழமை கொண்டல்இப் – பெண்ணவளின்

உற்ற குழுவினர் தோழமையில் அந்தாதிக்

கற்று கவிதைவரைந் தேன்!

வெண்நிலவின் தோழமை இந்த கதிரவனும்

வெண்பாக்கு தோழமை யாப்புஇப் – பெண்ணவளின்

கற்ற குழுவினர் தோழமையில் வெண்கவிக்

கற்று கவிதைவடித் தேன்!

வெண்பனிக்கு தோழமை இந்த பொதிகையும்

வெண்மலைக்கு தோழமை காற்றும்இப் – பெண்ணவளின்

உற்ற குழுவினர் தோழமைக்கு நன்றிகள்

பற்பல வைஉரைத் தேன்!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾