
அழகான
காலை பொழுதில்
ஆற்றோரப் பாதையில்
அடி எடுத்து
ஆரம்பித்தேன்
நெடுநீள ஓட்டம்
நிறையப்
பயிற்சி செய்ததால்
விரைவாக ஓடி முடிக்கலாம்
என நினைத்தேன் கூடவே
எண்ணத்தில்
பின்வருவன உதித்தன..
அய்யோ
நிமிடத்தில் இத்தனை
காதம் ஓட எத்தனை
மணி நேரம் ஆகும்
இவர் நம்மை முந்தி
செல்கிறாரே
நம்மைவிட வயதில்
மூத்தோர் எளிதாக ஓட என
மனதில் கணக்கு போட
மனமிருகி
வலிபெருகி
கால் வலுவிழந்து
உடல்
கணக்க ஆரம்பித்தது
சில நிமிடங்களில்..
நில் கவனி ஓடு என
மனதில் பதித்து
சுற்று புறத்தில்
நடப்பதை
ரசித்துக்கொண்டு
அனுபவித்து ஓட
ஆரம்பித்தேன்..
ரசிப்பதற்கா பஞ்சம்
ஆற்றோரப் பாதையில்
அழகிய நிழல் தரும் மரங்கள்
அதில் ஒயிலாக உட்கார்ந்து
குயில் பாடும் பாட்டுகள்
ஒன்றோடொன்று
துரத்தி பிடித்து
விளையாடும் அணில்கள்
என் ஓட்டத்திற்கு
ஈடாக
தன் ஓட்டத்தை
வெகுவாக குறைத்து
குடும்பமாக
குதூகலத்துடன்
கூட ஓடின
துள்ளியோடும்
புள்ளி மான்கள்
மரங்களின் இடுக்கில்
கண்ணாமூச்சியாடும்
சூரிய ஒளியின்
ஆட்டம்
இளங்காலை
சூரியனின் சூட்டில்
பளபளத்து
சொலிசொலிக்கும்
ஆற்று நீர்
வளைந்து நெளிந்து
ஓடும் ஆற்று நீரின்
சங்கீதம்
சக ஓட்டக்காரர்கள்
ஓடும் சத்தத்தில் தான்
எத்தனை வகை?
டடக் டடக் என
குதிரையின் குலம்பொலியாய்
வேகமான ஓட்டம்
தட தடவென ஓடும்
தொடர் ரயில் வண்டியாய்
சீரான ஓட்டம்
புச்சு புச்சுவென
மூச்சு வாங்கி ஆங்காங்கே
நின்று ஓடும்
அரசு பேருந்து ஓட்டம்
சல சலவென பேசி
கூட்டாகச் சேர்ந்து
இடைவெளி விட்டு விட்டு
குழுவாக ஓட்டம்
ஓட்டத்தை இப்படி
சப்த அடிப்படையில்
வகைப் பிரிக்கலாம்
மிதிவண்டி
ஓட்டுபவர்களின்
டிரிங் டிரிங்
மணி ஒலி
பாதை ஓரத்தில்
வண்டி நிறுத்துமிடத்தில்
வாகனத்தின்
பாம் பாம் ஒலி
பாதையில்
பெற்றோருடன்
தளர் நடையிட்டு
வரும் மழலையின்
களுக் களுக் சிரிப்பொலி
உரிமையாளருடன்
நடைபாதையில்
நடந்து வரும்
நன்றி மறவாத
நாய்களின்
லொல் லொல் ஒலி
ஆங்காங்கே
தண்ணீர் பந்தல்
வைத்து ஓடுபவர்களுக்கு
தண்ணீர் தாகத்தை
தீர்க்கும் தன்னார்வத்
தொண்டர்களின் ஒலி
கைத்தட்டி
உற்சாகப்படுத்தி
ஆர்வமுடன்
கூக்குரலிட்டு
உன்னால் முடியும்
ஓடு ஓடு என
ஓடுபவர்களை
மகிழ்வித்து
மனசசோர்வு நீக்கும்
மக்களின்
ஆரவார ஒலி
முதுமையில்
துணையுடன்
துடிப்பாக
துள்ளு நடையிடும்
பெயோர்களின்
அட்டகசமான
ஆனந்த சிரிப்பொலி
அத்தனையும் ரசித்து
தொடர் ஓட்டம்
ஓடியதில் நினைத்ததை விட
விரைவாக
ஓட்டத்தை மன நிறைவுடன்
முடித்து எல்லையை
எட்டிவிட்டேன்..!
“ ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”
என்றால் வாழ்கை இனிக்குமா?
அதனால்
வாழ்க்கையும்
அதன் போக்கில்
எதிர் நோக்கி சுற்றி
இருப்பவர்களை
இருப்பவைகளை
அனுசரித்து
அனுபவித்து
அனுதினமும்
அகமகிழ்ந்து
நிகழ் காலத்தில்
நினைவை நிறுத்தி
ஓடினால்
என்றென்றும்
மகிழ்ச்சி
நிரந்தரம்!!
-பிரியா பாஸ்கரன் 🏃♀.