
அப்பாவின் சின்னஞ் சிறு கிளியே..!
என் அன்பு மகளே…
அதிரும் அலறலோடு
அழகு மலராய்
அன்புக்கு சான்றாய் உன்
அன்னையின் மறு உருவாய்
அகிலத்தைப் பார்க்க
அவதரித்தாய் ஆசை மகளே!
கொஞ்சி கொஞ்சி உன்
கொஞ்சுநடையில்
என் உள்ளத்தை
கொள்ளை கொண்டு
அள்ளிச் சென்றாய்
செல்ல மகளே!
சிந்தும் சிரிப்பில்
சில்லறை காசுகளும்
சிரித்து பேசும் மொழியில்
தேன்பலா சுவையும்
மலர்ந்த முகத்தில்
கோடி நிலவின் ஒளியும்
காண கிடைக்க பெற்றேன்
கனி அமுதே!
கால் கொலுசு ஒலிக்க
படிகட்டுகள் அதிர
கால் தரையில் படாது
பட்டாம் பூச்சியாய் பறந்து
ஓடி வந்து தாவி அனைத்து
கழுத்தில் தொங்கி
கன்னத்தில் இச் என நச்சென்று முத்தமிட்டு “அப்பாஆஆ” என்றழைத்ததில்
சொர்க்கம் கைவசப்பட்டது என்
அன்பு மகளே!
இரட்டை சடைப் பின்னல்
மணக்கும் மல்லிகைச் சரம்
மான்விழிக்கு கண் மை
கலகலக்கும் கண்ணாடி வளைவி
முத்துச் சதங்கை கொலுசு
முகத்தில் முத்தான சிரிப்பு
பட்டுப் பாவாடை சட்டையுடன்
பவனி வருகையில்
மனம் ஆனந்தக் கூத்தாடியது என்
பாச மகளே!
என் அன்பு மகளே..
கோபம் இருக்கும் இடம்
தெரியாமல் ஓடி போனது
உன் செவ்விதழ் புன்சிரிப்பில்!
வானவில் வந்து விட்டது
நம் வீட்டிற்கு உன்
வண்ண ஆடை தோற்றத்தில்!
மயில் தோகை
விரித்தாடியது
உன் கார்கூந்தலழகில்!
முல்லை பூ தோற்றது
உன் சிரிப்பழகில்!
நிலவு ஒளியிழந்தது
உன் முகப்பொலிவில்!
என் அன்பு மகளே!
நீ ஆற்றலைப்
பெருக்கும் சக்தி!
நீ பாசத்தைக்
கொட்டும் அருவி!
நீ நேசத்தை
உருவாக்கும் ஊற்று!
நீ அன்பை
பொழியும் அன்னை!
நீ குலம்
போற்றும் தெய்வம்!
நீ வளர்ந்து ஆளாகி
என் மகளாய் இருந்து
உன் கணவனுக்கு
மனைவியாய் ஆனாலும்
நீ எனக்கு என்றும்
பாரதி சொன்ன
“சின்னஞ் சிறு கிளியே –
கண்ணம்மா” அன்றோ!
நீயே
ஏழேழு பிறப்பிலும்
என் மகளாக
பிறந்திடவேண்டுமென
எல்லாம் வல்ல அருகனை
பதம் போற்றி
வேண்டுகிறேன் –
அன்புடன் அப்பா!!!
சின்னஞ் சிறு கிளியே..
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.
சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே – என் முன்னே
ஆடி வருந் தேனே !
ஓடி வருகையிலே – கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !
உச்சி தனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !
கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !
சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !
உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?
சொல்லும் மழலையிலே – கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே – எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,
இன்ப கதைகளெல்லாம் – உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே – உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?
மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?
– பிரியா பாஸ்கரன் 💕









