தேடல்…சுகமானது!

ஆசிரியரின் தேடலில் மாணவனின் ஆற்றல் வெளிப்படுமே..
ஆரச்சியாளின் தேடலில் புது
உண்மைகள் வெளிப்படுமே..
அறிவின் தேடலில் பல நூல்களின்
பரிச்சயம் கிட்டுமே..

சிற்பி உளியின் தேடல் சிதைந்த கற்களைச் சிற்பங்களாகிடுமே..
எழுத்தாளர் எழுதுகோலின் தேடல்
தேனான தித்திக்கும் படைப்புகளைப் படைத்திடுமே..
புல்லாங்குழலில் காற்றின் தேடல் இனிய கீதம் இசைத்திடுமே..

ஒழுக்கத்தின் தேடலில் நற்பெயர் நல்கிடுமே..
பாசத்தின் தேடலில் உறவுகள்
மலர்ந்திடுமே..
நட்பின் தேடலில் தோல்விகள்
தகர்ந்திடுமே..

விண்ணை முட்டும் மேகங்களின் தேடல்
மழையை பொழிந்திடுமே..
மண்ணை முட்டி வெளி வரும் விதையின் தேடல் மரமாய் வளர்ந்திடுமே..
கண்ணை மூடி காணும் கனவின் தேடல் உள்ளத்தின் எண்ணத்திற்க்கு உருவம் தந்திடுமே..

இளமையின் தேடலில் காதல் கனிந்திடுமே..
முதுமையின் தேடலில் பாசம் மிகுந்திடுமே..
வாய்மையின் தேடலில் தீங்கில்லா
சொற்கள் உதிர்ந்திடுமே..

வறுமையின் தேடல் உழைப்பை
உயர்த்திடுமே..
உழைப்பின் தேடல் வெற்றிகளைக்
கொடுத்திடுமே..
வெற்றியின் தேடல் பெரும் வாகை சூடிடுமே..

உன்னில் உன்னைத் தேடலில்
அகத்தில் அமைதி அமர்ந்திடுமே..
உன்னில் உன்னைத் தேடலில் உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்குமே..
உன்னில் உன்னைத் தேடலில்
நெஞ்சத்தில் நிம்மதி நிலைத்திடுமே..

தேடலே தொடக்கமானது..
தேடலே விழிப்பானது..
தேடலே ஊக்குவிப்பது..
தேடலே நம்பிக்கையானது..
தேடலே முடிவானது..
தேடலே சுகமானது!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾🙏🏾🙏🏾

எங்கள் தமிழ்ப் பள்ளி!

பட்டம் பெற்றவுடன் நல்ல உத்தியோகம் கிடைக்க
பணம் நிறைய சம்பாதித்து
பட்டணத்தில் பெரிய தனிய வீடு கட்டி
பள பளவென நான்கு சக்கர ஊர்தி வாங்கி
படித்த பாவையை மணந்து
அடுத்து அயல் நாட்டில் குடியேறி
பிள்ளையயும் அங்கேயே பிறந்திட
பிறகு குடியுரிமையும் பெற்று
பாட்டன் பாட்டி அவ்வப்பொழுது வந்து போக
பேரப்பிள்ளையும் தமிழ் கற்க முயல
பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க தடுமாறுகிறார்கள்..

மொழி விட்டுப் போனால்
என்னென்ன பிரச்சனைகள்
நம் கண்மணிகள் சந்திக்கும்..

மொழி விட்டுப் போனால்
உறவுகள் விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
கலை விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
பண்பாடு விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
மரபு விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
அரும்பெரும் நூல்கள் படிக்கும்
வாய்ப்பு விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
அறிவு வளர்ச்சி விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
நாட்டுப் பற்று விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
பலதரப் பட்ட மக்களை இணைக்கும்
நல்லுறவு விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
துல்லியமான ஆழமான கருத்துகளை
பகிர முடியாமல் போகும்..

மொழி விட்டுப் போனால்
புரிந்து கொள்ளும் திறன் குறைந்து போகும்..

மொழி விட்டுப் போனால்
திருகுறள் போன்ற வாழ்வியல் நிறைந்த
இலக்கியத்தின் பரிச்சயம் விட்டுப் போகும்..

மொழி விட்டுப் போனால்
பல்லாயிரம் ஆண்டு தொன்மை மொழியான தாய் தமிழ் மொழியுடனான
பாரம்பரியம் பாசம் பந்தம் அனைத்தும்
விட்டுப் போகும்..
நம் கண்மணிகளை விட்டு..

இவை அனைத்தயும்
நம் குழந்தைகளுக்கு
தமிழ் கல்வி
மூலம் புகுத்த..

பார் போற்றும் தமிழ் சங்கம் நடத்தும்
பல தன்னார்வத் தொண்டாற்றும் ஆசிரியர்கள்
பனியாற்றும் தமிழ்ப் பள்ளியில்
பிள்ளைகளுக்கு

முத்து முத்தாக எழுத
தமிழ் எழுத்தறிவு
பல நூல் கல் – நூலகம்
வைத்து பிஞ்சுகளுக்கு
படிக்கும் பழக்கத்தை
வழக்கமாகி படித்த திறனை
வெளிப்படுத்த..

வாரந்தோறும் நடக்கும்
இறைவணக்கத்தில்
பல பேர் முன்னிலையில்
குறள் சொல்ல மொட்டுகளை
ஊற்சாகமூட்ட மலர் அரும்புகள்
குறள்களை கொட்ட
மலர்கள் மொட்டவிழ்ந்து மணம் பரப்பி
மலர்களின் வாசனை(தன்னம்பிக்கை)
நிறையும்..

அது மட்டுமா?
கதைச் சொல்ல
கதைப் படிக்க
கதை எழுத
ஊக்குவிக்கும்
கதைச் சுரபி
பாட்டுப் பாட
நாடகம் நடிக்க
நடனம் ஆட
பேச்சு திறனை வளர்க்க
என பல கலைகள் கற்றுவித்து
கற்றதை கலை நிகழ்ச்சி
ஆண்டு விழா மூலம்
கண்கொள்ளா காட்சியாக
சிட்டுக் குருவிகளை வானில்
சிறகடிக்கச் செய்ய
பெற்றவர்கள் சிலையாய்
மெய் மறந்து மயிர் கூச்செரிந்து அமர்ந்திட..

குழந்தைகளையும் பெற்றோர்களையும்
சிலிர்க்க வைத்தும் சிந்திக்க வைத்தும்
அயல் நாட்டில் அனைவரையும்
ஓர் இடத்தில் எவ்வித வேற்றுமையின்றி
ஒருங்கிணைத்து
பண்பாடு ஒற்றுமை நிலை நிறுத்த
தாய்த்தமிழ் மொழியால்
மட்டுமே சாத்தியம்!!

அது மட்டுமல்ல
பெரியோர்களுக்கு
இலக்கண இலக்கியம்
கற்க வாய்ப்பு
குழந்தைகள் தமிழ் கல்வி
கற்கும் காலத்தில் பள்ளியில்
காத்திருக்கும் பெற்றோருக்கு
உடல் நலம் பேணும்
யோகம் பயில வாய்ப்பு..

இதை சாத்தியமாக்க
பெறும் உதவி புரியும் சாதனையாளர்களான
தன்னலமற்ற ஆசிரியர் பெருமக்கள்
அனைவருக்கும்
பாராட்டுகளையும்
பல நன்றிகளையும்
உரித்தாக்குவோமாக!!

அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾🙏🏾🙏🏾

நீதானே என் நிலா..!

மணவாளன்:

நீதானே
என் நிலா.. மறையாத முழு நிலா..

நீ இருப்பது
அந்த விண்ணிலா.. இந்த மண்ணிலா..

தேகம் சிலிர்த்தது
உன் பட்டுக் கூந்தலிலா.. நீ சிந்தும் சிரிப்பிலா..

காது மகிழ்ந்தது
இசை மெட்டிலா.. உன் சொல்லிலா..

உன் பார்வை தீண்டியது
மலர் அம்பிலா.. காதல் அன்பிலா..

நீ பேசியது
தித்திக்கும் தேன் பலா.. உதிரும் நித்திலா..

உன்னை ஆராதிப்பது
தங்க தட்டிலா.. தேக்கு கட்டிலா..

உனை அலங்கரிப்பது
ஆடை பட்டிலா.. ரோசாப் பூவிலா..

நீயே என் வாழ்வின்
ஒளி நிலா.. மங்காத பொன் நிலா..!!

மனையாட்டி:

பார்வை நனைத்தது
பனிச் சாராலா.. மழைத் தூரலா..

எனை கட்டியது
உன் காந்தக் கண்ணிலா.. தேக்கு கையிலா..

எனை தாங்குவது
காதல் மனசிலா.. தாயாக மடியிலா..

உள்ளம் குளிர்ந்தது
பேசும் காதல் மொழியிலா..வீசும் தென்றலா..

மெய் கரைந்தேன்
உன் இதழிலா.. வெகு ஆவலா..

நான் மயங்கினேன்
உன் பேச்சிலா.. உன் மூச்சிலா..

நான் உயிர் வாழ்வது
உன் உணர்விலா.. நீ விடும் சுவாசத்திலா..

நம் மகிழ்ச்சிகள்
விரல் விட்டு எண்ணிலா.. அருமைக் கண்ணாளாக் காதலா..

நாம் போவோம்
வான் நிலா.. படைப்போம் தேயாத காதல் நிலா!!

-பிரியா பாஸ்கரன் 💕

திரு வாலி அவர்களின்
கல்யாண தேனிலா
பாடலை கேட்க நேர்ந்த
பாதிப்பில் இதை எழுதத் தோன்றியது.
நன்றி 🙏🏾

மனக்கனவுகள்!

அரசு மருத்துவமனைகள்
அசுத்தமில்லாமல்
அமைதியான முறையில்
பணம் வாங்காமல் நோயாளிகளை
கண்ணும் கருத்துமாக கவனித்து
செயல்பட
நோயாளிகள் தனியார் மருத்துவமனை
நாடாமல் அரசு மருத்துவமனை
நோக்கிப் படையெடுக்கிறார்கள்!

அரசு அலுவலகத்தில் பணிபுரிவோர்
அலுவலக நேரத்திற்க்கு சரியாக வந்து
அவரவர் இருக்கையில் அமர்ந்து
அவசர கதியில் திருத்தமாக தாமதிக்காமல் வேலை செய்ய
விண்ணப்பித்த மனுதாரர்கள் நேரத்தை
விரயம் செய்யாமல்
வீண் அலைச்சல் இல்லாமல்
வீணாக பணம் இறைக்காமல்
சிபாரிசு பிடிக்காமல்
வேலை முடித்துக் கொண்டு
வேலையில் அவர்தம் பணிக்கு
திரும்பினர்!

சாலையில் மக்கள்
போக்குவரத்து விதிகளைப்
பின்பற்றாமல் பயணம் செய்ய
போக்குவரத்து காவலர்
விதிகளை மீறியவர்களை
சட்டென்று பிடித்து
அமலில் இருக்கும்
சட்டத்தின் படி
அபராதம் விதிக்க
மக்கள் லஞ்சம் கொடுக்க
காவலர் அதை மறுத்து இன்னொரு
அபராதம் விதித்து
பொறுப்புடன் தன்
கடமையை செய்ய
மக்கள் முன்போல் இல்லாமல்
மும்முரமாக சாலை விதிகளை
பின்பற்றுகிறார்கள்!

கல்வி மையங்கள்
காசு வாங்காமல்
கடமை மட்டுமே
கருத்தில் கொண்டு
கருத்தாக படித்த
கண்மணிகளுக்கு
கல்வித் திறன் அடிப்படையில்
இடம் ஒதுக்கீடு செய்து
சேர்க்கைகள் முடிய
கழனி மேட்டில் களை எடுக்கும்
கண்ணம்மா மகள்
கண் மருத்துவமும்
கந்து வட்டி கனகத்தின் மகன்
கணிப்பொறி இளங்கலை வகுப்பும்
சேர்ந்தனர்.

ஆனந்தமாக இதைக் கண்டு களித்து
ஆர்பாட்டமாக கொண்டாட
ஆறு மணிக்கு வைத்த
அலாரம் சரியாக கிண்னென்று அடிக்க
அலறி அடித்துக் கொண்டு எழ
அனைத்தும் கண்ட கனவுகள்
என என் மண்டையில்
அடித்து சொன்னது அறிவு
ஊழலை எதிர்த்து
உரக்கக் குரல் கொடுக்கும்
உள்ளம் கண்ட
உள்ளக்களிப்பான
மனக்கனவுகள் மட்டுமே என
உணர்ந்தேன்!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

எங்கள் வீதி!

அகலமான வீதியிலே
அழகான சீமை ஓட்டு வீடுகள்
அடுத்ததாக மச்சி வைத்த வீடுகள்
அகண்டு நீண்ட முன்கட்டு பின்கட்டு வீடுகள்
அளவான கூரை வீடுகள்
அனைவரும் வரும் தபால் நிலையம்
அடிக்கடி வேலை நிறுத்தம் செய்யும் தெருவிளக்கு
அளவிலே பெரிய புளிய மரம்
அருகிலேயே அகன்ற
களத்து மேடு
அடுத்து அழகான பசுமை நிறைந்த வயல்வெளிக்கு இட்டுசெல்லும் பாதை
என அமைந்த பிராமணர் தெரு!

சாமக் கோழி கூவும் முன்னே
பால்காரர் தாசு அண்ணா
பசும் பாலை வாங்க
பாம் பாமென்று ஒலியெழுப்ப
பால் சொம்பு எடுத்துக் கொண்டு
பளிச்சென்ற புன்னகையுடன்
பசு லட்சுமியிடம் கன்று
பட்டுவை பாலுண்ண விட்டு பின்
பர பரவென பாங்காக
பால் கறப்பாள் அம்மா!

சலுக் சலுக் ஒலியுடன்
பசுஞ்சாணம் தெளித்து
பரக் பரக்கென பெருக்கி
பதினைந்துலிருந்து எட்டு வரிசை
சந்துப்புள்ளிகளிட்டு
பாங்குடன் பெரிய
ரோசப்பூக் கோலமிட்டு
மார்கழி மாதமாயிருந்தால் நடுவில்
பரங்கி பூ அலங்கரித்து
வீதி மாடத்திலே விளக்கும்
ஏற்றி வைத்திடுவாள் அம்மா!

அதற்க்குள்ளே தண்ணி வந்திருச்சு
வா வாவென கூக்குரல் அழைக்க
அம்மா அடியேய் எழுந்திருங்கடி
என எழுப்ப
அரக்க பரக்க எழுந்து பல்துலக்கி
பள பளவென பித்தளை குடம்
தயாராக இருக்க
தெருக்குழாயில் பாலாற்று
தண்ணீர் பிடிக்க
எடுத்துக் கொண்டு
குடு குடுவென ஓடுவோம்
அக்காளும் நானும்!

லட்சுமி குட்டி பட்டு கயிற்றை
அறுத்துக் கொண்டு வீதியில் ஓட
நான் அவளை பிடிக்க
கட கடவென பின்னாடியே துரத்த
கல் தடுக்கி வீதியில் நான் விழ
அய்யோ என்னடி ஆச்சு என
அம்சா பெரியம்மா அவசரமாக வர
அடுத்ததாக ராசி பெரியம்மா
அப்பவே சொன்னேன் ஓடாதடின்னு வர
அவள தூக்கு முதல்லனு ராசி பெரியப்பா சொல்ல
அப்பாவோ ஏம்மா பார்த்து வரக்கூடாது என கேட்க
அம்மவோ அறிவு கெட்டவ
காலே தரையிலே நடக்காது
என கத்த
அம்மா கையோ அன்பாக அடிபட்ட இடத்தை தடவி கொடுக்க
பாட்டியோ தண்ணீர் கொண்டு வந்து
குடிக்க கொடுக்க
பட்டு கன்று குட்டியோ ஓடி வந்து என்னை உரச
அனைவரும் சூழ நின்று இதைக் காண
அனைவரின் அன்பினால்
ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் வர
அனைவரும் அய்யோ ரொம்ப
வலிக்குதா என கேட்க..
அனைத்தும் நெகிழ்வாக நடந்தேறியது
எங்கள் வீதியிலே!

அறுவடை காலத்தில்
வீதியே களத்து மேடாகி
நெல் பயிரை கட்டு அடிக்க..
அடித்த நெல்லை படி அளந்து எண்ண..
அடுத்து வைக்கோலை காய வைக்க..
நிலக்கடலை மிளகாய்
பருப்பு தானியங்களையும் காய வைக்க..
மாட்டு வண்டி முதல் டிராக்டர் வரை தெருவோரத்தில் நிறுத்த..
ஆடு மாடுகள் கழனியிலிருந்து
திரும்ப நான் வேடிக்கை பார்ப்பேன்
எங்கள் வீதியை!

தெருவெல்லாம்
தேர்தல் நேரத்தில்
தெரியாத பிரமுகர்கள்
வெள்ளை வேட்டிச் சட்டை போட்டு
பல நிறக் கொடி பறக்க
அவரவர் தகுதிக்கேற்ப
மூன்று சக்கரம் நான்கு சக்கரம்
வாகனத்தில் தொண்டர்கள் படைசூழ
ஒலிப்பெருக்கி பிடித்து
வள வளவென பேசி
தேர்தல் வாக்குறுதி அளிக்க..
சிலர் கால் நடையாக வீதிதோரம்
நடந்து ஓட்டு கேட்க..
கட்சித் தொண்டர்கள்
தொண்டை கிழிய கத்த
நான் சத்தத்தில் என்
காதுகளை அடைக்க என
வீதீயே அல்லோகப்படும்!

பண்டிகை நாள் வந்தாலே
பரபரப்பாகும் வீதி..
மார்கழி மாதம் விடியலில்
குடுகுடுக்கைக்காரன்
“நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது”
என குறி சொல்ல..
கோயில் ஒலிப்பெருக்கி
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என பாட..
போகிப் பண்டிகைக்கு
பழைய பாய்காளைக் கொளுத்த..
தைத்திருநாளுக்கு வீதியை
அடைத்து பெரிய பெரிய
கோலங்கள் போட்டு
வண்ண வண்ண கோலப்பொடியிட
கரும்பு இனிக்க இனிக்க
மென்று திண்ண..
மாட்டுப் பொங்கலன்று
கன்று முதல் காளை வரை
குளிப்பாட்டி கொம்புகளுக்கு
வர்ணம் பூசி சதங்கை மணி ஒலிக்க
நடந்து வர..
காணும் பொங்கலுக்கு
சொந்தம் பந்தம் அனைவரும் காண வர..
தீபாவளிக்கு ஊசிப் பட்டாசு
தம்பியுடன் போட்டிப் போட்டு
தெருவெல்லாம் வெடிக்க..
யார் தெருவில் அதிக காகிதக் குவியல்
இருக்கு என அக்கம் பக்கம்
நோட்டம் விட..
திருவிழா காலங்களில் எழிலான தேரில் அம்மன் வீதி உலா வர..
கூடவே மயிலாட்டம் கரகாட்டம்
ஒயிலாட்டம் கலை கட்ட..
ஊர்மக்களுக்கு சுடச்சுட காபி
விநியோகம் நடக்க..
ஆங்காங்கே கன்னிப் பெண்கள்
பையன்கள் கடைக்கண் வீசி
குசு குசுவென பேசி சிரிக்க..
பெரிசுகள் வாய் கொள்ளா சிரிப்புடன்
அவர்கள் பால்ய கதைகளைக் கதைக்க..
அப்பப்பா பல பல கொண்டாட்டங்கள்
அடிக்கடி நடந்தேறும்
எங்கள் வீதியிலே!

பண்டிகை முடிந்தாலென்ன
மீதி நாட்கள் அதைவிட
அருமையான நாட்கள்..
பள்ளி முடிந்து வந்தால்
தெரு நண்பர்களுடன் கூடி
நொண்டி ஆட்டம் பாண்டி ஆட்டம்
“ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரே பூ
பூத்தது” என வித விதமான
விளையாட்டுகள் ஆடி
சந்தோசமாக களித்து களைக்க..
அம்மாக்கள் எல்லாம் கூட்டமாக
இதைக் கண்டு களிக்க..
அப்பாக்கள் வேலை முடிந்து
வந்துவிட்டால் அம்மாக்கள்
கூட்டம் களைய..
இரவில் கயிற்று கட்டிலில்
சுகமாக காற்று வாங்க..
சுதந்திரமாக நிலாப் பெண்ணை ரசிக்க..
வீதியில் பாய் விரித்து
கூட்டாகச் சேர்ந்து குடும்பமாக
நிலாச்சோறு சாப்பிட..
பக்கத்து வீட்டு சொந்தமாகி
பந்தங்கள் கூட்டாக கும்மாளமிட..
தாத்தாக்கள் ஊர் விசயங்கள் ஒன்றுவிடாமல் அலச..
பாட்டிகள் பொக்கை வாய்
சிரிப்புடன் சில பல கதைகள் கதைக்க..
நானும் பாட்டி மடியில் தலை சாய்க்க
பாட்டி தலை கோதி கதை சொல்ல
நான் கதை கேட்டு கண்ணயர்வேன்
எங்கள் வீதியில்..!!

எங்கள் வீதியில் நடந்த
நிகழ்வுகள்
எண்ணி எண்ணி மகிழ
எண்ணிலடங்கா.. அவை
என்னுள் என்றென்றும்
மணம் பரப்பும் மல்லிகையாய்
நெஞ்சில் நினைவில்
நிறைந்து இருக்கும்!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

குழுவாக வேலை செய்..பயனை அடை!

பூக்கள்..
உங்களிடம் இருந்து தான்
குழுவாக சேர்ந்து வேலை செய்வது
எப்படி என்று கற்றுக்கொண்டேன்..
ஏனெனில்
பலவண்ண மணமிக்க பூக்கள்
ஒன்றுடன் ஒன்றாக
தொடுக்கும் நாருடன் பாங்காக சேர
மணமற்ற நாரும் மணந்து சரமாக எழிலான பூமாலையாகிறது –
“பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்”!

தேனீக்கள்..
உங்களிடம் இருந்து தான்
குழுவேலை சுறுசுறுப்பு
விடாமுயற்சி சேமிக்க
கற்றுக்கொண்டேன்..
ஏனெனில்
பல்லாயிரம் காதம் கூட்டாக
பயணம் செய்து
மலர்ந்து மணம்பரப்பும்
மலரிடம் மதுவை இதழ் உறிஞ்சி
மலருக்கு மலர் தாவி
மகரந்தத்தை மலர்களிடையே மாற்றி
மாது மலரை சூலுற வைத்து
மரஞ்செடிகள் காய்ந்து
மண்ணில் விதையிட்டு
இனம் பெருக்க உதவி
தனக்குண்டானத் தேனை
பக்குவமாக குளிர் காலத்திற்க்கு
சேகரிக்கும் தேனடையில் –
“முயற்சி திருவினையாக்கும்”!

எறும்புகள்..
உங்களிடம் இருந்து தான்
குழுவேலை சுறுசுறுப்பு ஒழுக்கம்
முயற்றால் முடியாதது
இல்லை என கற்றுக்கொண்டேன்..
ஏனெனில்
சமூகமாக சாரி சாரியாக
சேர்ந்து நெளிந்து
வளைந்து ஊர்ந்து தன்னை விட
வலுவான உணவுதனை
பலூ தூக்கி சுமைதாங்கி
பதப்படுத்த எடுத்துச் செல்ல
வழியில் வரும் இடர்களை கூட்டாக தகர்தெறிந்து இருக்குமிடத்தை
தக்கவாறு அமைத்துக் கொள்ளும்
அற்புத உயிரினம் –
“எறும்பு ஊற கல்லும் தேயும்”!

வீட்டிலும் பணியிலும்
பொது நல தொண்டிலும்
கொண்ட கொள்கையின்
இலக்கை அடைய குழுவாக
இணைந்து இயைந்து இயங்கி
சுகமான சுமைதாங்கியாய்
செயல்களை பகிர்ந்து வரும்
இன்னல்களை களைந்து
கடினமான காரியங்களை
சுறுசுறுப்பாக சுலுவாக முடித்து
அருஞ்செயல்கள் ஆற்றி அதனால்
பலபேர் பலனடைந்தால்
ஆனந்தமன்றோ!! –
“ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾🙏🏾🙏🏾

சின்ன சின்ன ஆசைகள்..

துள்ளி துள்ளி மான்
போல ஓடிட ஆசை!
வண்ண வண்ண
மீன் போல் நீந்திட ஆசை!
வானில் சிட்டுக் குருவியாய்
சிறகடித்திட ஆசை!
மின்மினிப் பூச்சியாய்
இரவில் மின்னிட ஆசை!
மயில் போல தோகை
விரித்தாடிட ஆசை!

ஆகாயத்தின் அரசன் ஆதவனின் ஒளியில் மலரும் நிலவில் குளிர் காய ஆசை!
பசும் புல்லின் மீது
பனித்துளியாய் விழுந்திட ஆசை!
காற்றில் கீதம்
இசைத்திட ஆசை!
வானவில்லை எடுத்து
வளைவியாய் அணிந்திட ஆசை!
இறைவனைச் சேறும்
பூமாலையாய் ஆகிட ஆசை!

கொட்டும் மழையில்
குடையாய் நனைந்திட ஆசை!
வீசும் காற்றில் தென்றலாய்
இருந்திட ஆசை!
நீருபத்தில் நிலவின் அருகே
நட்சத்திரமாய் ஒளிர்ந்திட ஆசை!
பொதிகையைத் தீண்டி கொஞ்சி
விளையாடும் வெண்மேகமாகிட ஆசை!

மீண்டும் மழலையாய்
மாறிட ஆசை!
தந்தையின் தோளில் அமர்ந்து
பவனி வர ஆசை!
கடைவீதியில் எச்சில் ஒழுக
குச்சி மிட்டாய் சுவைத்திட ஆசை!
கவலையில்லா கண்மணியாய்
சுற்றி வர ஆசை!

அன்பான என் பெற்றோருக்கு ஏழேழு
பிறவியிலும் மகளாக பிறந்திட ஆசை!
அருமையான ஆசையான என் அன்பனுடனும் குழந்தைகளுடனும் ஏழேழு பிறவியிலும் வாழ்ந்திட ஆசை!
அழுக்காற்றில்லா
சுற்றமுடன் வாழ்ந்திட ஆசை!
என்றென்றும் நன்றி மறவாத
மனது நிலைத்திருந்திட ஆசை!

பாரதி கண்ட புதுமைப் பெண்னை
பார்ரெங்கும் பார்த்திட ஆசை!
பாடும் பச்சைக் கிளியை கூண்டிலிருந்து
சுதந்திதமாகப் பறக்க வைக்க ஆசை!
காலம் தவறாமல் வேலை செய்யும் கடிகார முள்ளாய் வாழ்ந்திட ஆசை!
கண்ட கனவுகளை எல்லாம்
மெய்பிக்க ஆசை!

அச்சம் தவிர்த்து அநீதியை எதிர்க்கும்
சிவசக்தியாய் மாறிட ஆசை!
அமைதியான அழகான அன்பான
அகிலம் அமைந்திட ஆசை!
ஊழலில்லா அரசியல்
உருவாகிட ஆசை!
ஊனமில்லா உள்ளம்
ஊரெங்கும் மலர்ந்திட ஆசை!

இயற்கை உரம் போட்டு விளைச்சல் நிலங்களை காத்திட ஆசை!
என்றும் பசுமை நிறைந்த
விளைச்சல் நிலம் விளைந்திட ஆசை!
விளைந்த நெல்லுக்கு விவசாயி
விலை நிர்ணயத்திட ஆசை!
விளைந்த நிலம் வீட்டு
மனையாக மாறாமல் இருந்திட ஆசை!

இயற்கையோடு இணை(சை)ந்து
வாழ்ந்திட ஆசை!
இயற்கையாய் விளைந்த
காய் கறிகளை சமைத்திட ஆசை!
கண்ணீரில்லா வெங்காயம்
உரித்திட ஆசை!
முகத்தில் என்றென்றும்
புன்னகை உறைந்திட ஆசை!

முத்தமிழை கற்று கரைத்துக்
குடித்திட ஆசை!
முத்து முத்து எழுத்தில்
கருத்துள்ள கவி எழுதிட ஆசை!
அகிலமெல்லாம் பேசும் மொழி
தமிழாக இருந்திட ஆசை!
அடுத்த பிறவியில் மீண்டும் நான் நானாக(தமிழச்சி) பிறந்திட ஆசை!

– பிரியா பாஸ்கரன் 💕

கோலம்!

கோலம்!

அம்மை இவள்
அன்றாடம் அதிகாலையில்
அகலமான முற்றத்தில்
பசுஞ்சாணம் தெளித்து பெருக்கி
குனிந்து நிமிர்ந்து
கருவிழிகள் கவனத்துடன்
அழகான அரிசி மாக்கோலத்தில்
புள்ளிகளிட்டு அதனைச் சுற்றி
வளைந்து நெளிந்து
சிக்கல் கோலமிட
எறுப்புகள் விருந்துண்டு செல்லும்..
மாவை நீரில் கரைத்து வீட்டின்
அகத்தில் நீர்கோலமிட
அவை காய்ந்த பிறகு பளீரெனத்
தெரியும் மாவையும்
மகிழ்வுடன் எறும்புகள்
உண்ணும்!

விடியற்காலையில் வாசல் மொழுகி
மெல்லிய இடையாளின்
வல்லியக் கரங்கள்
வனப்புடன் இழுத்திடும்
புள்ளியில்லா
கம்பிக் கோடுகள்
வளைத்தும் நீட்டியும்
வடிவாக உருமாறி
சுற்றி காவி வண்ணம்
வரைந்து வணங்க
சிவ சக்தி ஐக்கியத்தை
வழிபடும் முறையை
உணர்த்திடும்!

மங்கை இவள்
தைத்திரு நாள் கொண்டாட
மார்கழி மாதம் விடியற்காலையில்
பாங்குடன் பசுஞ்சாணம் கரைத்து
வாசலில் தெளித்து தென்னந்துடைப்பத்தால் பெருக்கித்
தரையை பசுமையாக்கி பச்சரிசி
மாவினால் கணக்குடன்
புள்ளிகளிட்டு கோர்த்திட
புள்ளிக் கோலம் பூவாய் மலர்ந்திட
ஒரு சோடிச் சாணிப்பிள்ளையாரை பிடித்து
தலையில் பூசணிப்பூ வைத்து
மாலையில் பிடித்த
சாணிப்பிள்ளையாரை
வறட்டியாக்கி பரங்கிப்பூவை ஒட்டி காயவைத்த வறட்டியை
தைபொங்கலன்று அடுப்புமூட்டி
பற்ற வைத்து “பொங்கலோ பொங்கல்” என ஆனந்தமாகக்
கூக்குரலிட்டு ஆதிபகவனை குடும்பத்துடன் வழிபடுவாள்!!

பாவை இவள்
அன்று மலர்ந்த பூக்களை
அகமகிழ்வுடன் கொய்து
அன்னை நிலமங்கை மேல்
அடுக்கடுக்காக அழகுடன்
அத்தப்பூக்கோலம் அடுக்கி
பூமழை பொழிந்து
எழிலுடன் விளக்கும்
பூமகளை வணங்கி வளம் பெற
பாடிடுவாள் பாட்டு!

காரிகை இவள்
கார்கூந்தல் விரித்தாட
கரங்கள் வரைந்திடும்
வாசலில்
தோகை விரித்தாடும்
வண்ணமயில் கோலம்..
வீதிவழிச் செல்வோர்
விழிகள் பார்த்திட
நர்த்தனமாடும்!

திருவிழா நாளில்
கன்னிப் பெண்கள்
வண்ண உடையணிந்து
வெளிமுற்றத்தில்
குழுவாக ஒன்றுகூடி
சிந்தனை ஒன்றுபட
மாக் கோலத்தில்
தேர் கோலமிட்டு வண்ண
தோரணங்கள் அலங்கரிக்க
கார்குழல் கன்னியர்கள்
முகத்தில் சோர்வு நீங்கி
புன்னகை மலர்ந்திடும்!

அங்கனை இவள்
கைவண்ணத்தில் மழலையை
மகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டாட
தொட்டில் கோலம்
இருமனம் இணைய
திருமண மணக்கோலம்
புதுமனை புகுவிழா சிறக்க
மனை கோலம் என
சதுரப்புள்ளி நேர்ப்புள்ளி
ஊடுப்புள்ளி கோலங்கள்
வண்ணங்களுடன் வடிவம்
பெற்று எழிலோவியமாய்த் திகழ
வானத்திலிருந்து
வானவில் முற்றத்திறக்கு
வந்ததோ என தோன்றிடும்!

நம் பண்பாட்டு கலையான
கோலத்தைப் போற்றி
தினந்தோறும் கோலமிட்டால்..
அரிவை(பெண்) எறும்புக்கு உணவிட்டு
தானம் பலனைப் பெற
தெரிவையை தியான நிலைக்கு அழைத்துச் செல்ல..
அந்திகை(பெண்) சிந்தித்து சிக்கலான
தருணத்தில் பக்குவமான
முடிவெடுக்க..
காரிகையின் கருவிழிகள்
கூர்மிக்க பார்வைத்திறன் அதிகரிக்க..
பெதும்பைக்கு(பெண்) பொருமை
புத்திகூர்மை பரிசாகக் கிடைக்க..
ஆட்டியின்(பெண்) கற்பனைத்
திறன் உயர..
ஆடவளின்(பெண்) உடல் உள்ளம்
ஒருங்கிணைந்து உள்ளக்களிப்படைய
நல்லறத்துடன் இல்லறம்
சிறப்புறும் அன்றோ!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

மேகம்!

வானத்தில் கருப்பு வெள்ளை
கொண்டு தீட்டிய ஓவியம்
காட்டும் காட்சிகள்
கற்பனைக்கு எட்டாதவை..
ஆகாயத்தைப் போர்த்திய
அழகான ஆடை..

நிமிடத்தில் குழுவாகக் கூடி
நிகழ்த்தும் மாயாசாலம்
காண கண் கோடி வேண்டும்..
உன்னால் மட்டுமே பட்டப்பகலை
சாயங்காலமாக்க முடியும்..

காரிருள் திரண்டு
கதிரவனை மூழ்குவதால்
கார்மேகம் ஆனாயோ?

பனித்துளிகளைப்
பொத்தி பொத்தி வைத்து
பொழிவதால்
பொதிகையைத் தீண்டி
கொண்டல்(கொள்ளுகை)
ஆனாயோ?

வற்றாமல் மாரியை
வாரி வாரி
வரையாது வழங்குவதால்
வள்ளல் ஆனாயோ?

மழை பொழிந்து
மண்ணை கொஞ்சுவதால்
மண்ணுக்கு எழிலன் ஆனாயோ?

என்றென்றும் இளமையுடன்
எழில் கொஞ்சும்
உன் முத்துச் சிரிப்புக்களை
சிதறவிடுவதால் மஞ்சு(அணிகலன்) ஆனாயோ?

ஒடி ஒளிந்து கண்ணாமூச்சியாடி
பம்மி பதுங்கி பட படவென
பார் பார்த்து வருவதால்
பம்மு ஆனாயோ?

சில்லறைகளாய் சிதறி இருக்கும்
சித்திரங்களின் சங்கமமே
சில்லென சிலிர்க்க செய்யும்
சாரலோ?

பால் போன்று பரவிக்கிடக்கும்
வெண்மேகங்கள் பொங்கி
பால்பொங்கல் வழிகிறாதோ
பூமாதேவியை வழிபட?

திரண்ட உருண்ட கார்மேகங்கள்
திடீரென ஒன்று கூடி
திருவிழா கொண்டாடி மகிழ்ச்சியில்
ஆனந்தக் கண்ணீர்
பொழிகிறாயா?

உன் ஆனந்தக் கண்ணீர்ப்பட்டு
பசும் புல்லும் தழைத்து
பசுவுக்கு தீவனம் ஆகும்..

உன் நீரால் கிணற்று நீர் நிறைந்து
விவசாயி கண்ணில்
ஆனந்த கண்ணீர் நிறையும்..

நீ உதிர்க்கும் முத்தத்தால்..
மண் குளிரும்
மரம் செழிக்கும்
மழை பெருகும்..
மக்கள் மனம் களிக்கும்!!

– பிரியா பாஸ்கரன் ☁ ☁ ⛅

காதலித்துப் பார்!

ஒளிவட்டம் தோன்றி
கதிர்வட்டமாய் பிரகாசித்து
(சூரியன்)
புல்லி வட்டமாய்
(பூவின் வெளி வரிசை இதழ்)
மலர்வாய்..

விடியா இரவாய்
விரும்பியக் கனவுகள்
வேண்டும் என்பாய்..
வினாடியில்
விடியா இரவும்
விடியுமா என
விட்டத்தைப்
பார்ப்பாய்..

முகம் பார்க்கும்
கண்ணாடியுடனும்
தலைவாரும் சீப்புடனும்
வரம்பற்ற பயன்பாடு
ஒப்பந்தமிடுவாய்..

வண்ண உடைகளில்
வானவில் சாலத்தை காட்டி
வானவில்லை வளைத்து
வண்ண மலரம்புகள் எய்வாய்..

பேனா மைக் கொண்டு
வெண் காகிதங்களில்
கவிதை மழைக் கொட்டி
நனைப்பாய்..

தலையனைக்கு மூச்சு
முட்ட இருகணைத்து
இச் என்ற சத்தத்தில்
நச் என்று இதழ் பதிப்பாய்..

விசில் சத்தத்தில்
சங்கேத மொழிகள் பேசுவாய்..
குளியலறையை மேடையாக்கி
ராக மாலிகை இசைப்பாய்..

கனவுலகில் சஞ்சரித்துக்
காரணமில்லாமல் சிரிப்பாய்..
கடல் அலையில்
கால் நனைத்து
கடல் மணலில்
கால் தடம் பதித்து
கல்வெட்டென்பாய்..

வம்பிழுத்துச் செல்லச் சண்டையிட்டு
வண்ணக் காகிதத்தில்
சின்னப் பரிசுகள் சுற்றி
வார்த்தையில்லா
வாழ்த்துமடலில்
சிலிர்க்க வைப்பாய்..

இருசக்கர வாகனத்தில்
சாலையின் வேகத்தடையை
விருப்பமாக கடந்து
நிமிடநேரப் பயணங்களை
நொடிகளில் கடப்பாய்..

மனது சிறகடிக்கக்
காத்தாடியாய் பறப்பாய்..
சகாராவில் புன்னகையால்
பூஞ்சோலை அமைப்பாய்..
தட்டாமாலைச் சுற்றாமலே
பூமி சுழல்வதை உணர்வாய்..

இருதயம் துடித்து
இடம் மாறி தவிப்பாய்..
தினந்தோரும்
புததிதாகப் பிறப்பாய்..
உலகமே உன் காலடியில்
இருப்பதாய் உணர்வாய்..

சுவாசத்தின் உணர்வாகி
உணர்வின் உயிராகி
ஈறுடல் ஓருயிராகி
காதலில் கசந்துருகி
காலமெல்லாம் களித்து
மனமொத்தத் தம்பதியாய்
ஏழேழு சென்மங்கள்
வாழ்ந்திடுவாய்..
அதனால்..
காதலித்துப் பார்!

-பிரியா பாஸ்கரன் ❤