காதலித்துப் பார்!

உறவுகளை
காதலித்துப் பார்..
சுமைகளை சுகமாக
மாற்றிடுவாய்!

பெற்றோரை
காதலித்துப் பார்..
பிள்ளைக்கு
கடவுளாகிடுவாய்!

பிள்ளையை
காதலித்துப் பார்..
பாலை வனத்தை
பசுச்சோலையாக்கிடுவாய்!

துணையை
காதலித்துப் பார்..
ஒவ்வொரு யுகமும்
ஒரு நொடியாக்கிடுவாய்..

செய்யும் தொழிலை
காதலித்துப் பார்..
தோல்விகளை
வெற்றி படிகட்டுகளாக்கிடுவாய்!

துன்பங்களை
காதலித்துப் பார்..
மலை போன்ற இன்னல்களை
மடுவாக்கிடுவாய்!

உழைப்பை
காதலித்துப் பார்..
கனவுகளை
நிசமாக்கிவிடுவாய்!

தோழமையை
காதலித்துப் பார்..
தோல்விகளை வென்று
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திடுவாய்!

காற்றைக்
காதலித்துப் பார்..
புழுதியில்லா வீதியை
உருவாக்கிடுவாய்!

மரங்களை
காதலித்துப் பார்..
மண் பார்த்து பொழியும்
மழையில் நனைந்திடுவாய்!

மண்ணை
காதலித்துப் பார்..
குப்பை மேடுகளை
போபுரங்களாக்கிடுவாய்!

தண்ணீரைக்
காதலித்துப் பார்..
குளங்களை பராமரித்து
காத்திடுவாய்!

தீயை
காதலித்துப் பார்..
தீயெண்ணத்தை தீயிலிட்டு
நல்லெண்ணத்தை எழச்செய்திடுவாய்!

ஆசானை
காதலித்துப் பார்..
அறவழியில் வாழ்ந்து
வளம் பெற்றிடுவாய்!

மொழியை
காதலித்துப் பார்..
வாழிவின் இலக்கியங்களை
கற்று பயன்பெறுவாய்!

கடவுளை
காதலித்துப் பார்..
அகமும் முகமும்
மலர்ந்திடுவாய்!

காதலை
காதலித்துப் பார்..
ஆதி முதல் அந்தம் வரை
ஆடிப்பாடி களித்திடுவாய்!

-பிரியா பாஸ்கரன் ❤

தீராத விளையாட்டுப் பிள்ளை!

யசோதைக் கண்ணா – நீ
யது குல அரசா
யாமறிந்த கிருட்டிணா
கோபாலா கோபாலா
கோவிந்தா கோவிந்தா..

ஆயர்பாடிக் கண்ணா – நீ
ஆயர்குலம் ஆலமாய்(உலகம்)
ஆளவந்த அச்சாலா
அச்சுதா அமலா
ஆதிதேவா..

அற்புதக் கண்ணா – நீ
அளவில்லா செய்த
அங்கசேட்டைகள் எண்ணிலடங்கா
அவை அழகோ அழகு
ஆனந்தசாகரா..

கருமை நிறக் கண்ணா – நீ
கண்ணில் நிறைந்து
காற்றின் மொழியறிந்து
கான குழலிசைக்கும்
முரளிமனோகரா..

மாதவக் கண்ணா – நீ
மாதர் கண்ணயர்ந்த வேலையில்
மண்பானை உடைத்து
வெண்னெய் திருடும்
நவநீதசோரா..

மயூரக் கண்ணா – நீ
மங்கையிடம் மாட்டி
மயக்கும் புன்னகையில்
மாயவித்தை காட்டும்
மணிவண்ணா..

மோகனக் கண்ணா – நீ
கழனியில் கோபியர் நீரிறைத்து
மண்பானையில் எடுத்துவர
கல்லெறிந்து ரசிக்கும்
மனோகரா..

மதனக் கண்ணா – நீ
கோபியர்கள்
கோபங்கொண்டு விரட்ட
மாயமாகி ஓடி மறையும்
மாயவா..

பிருந்தாவனக் கண்ணா – நீ
பிரியப் பெண்டீரின்
பின்னலை இழுத்து அவள்
பிளிரும் வேலையில் நகைக்கும்
பால கிருட்டிணா..

கமலநாதக் கண்ணா – நீ
கரிய வண்ணக்
கார்கூந்தல் மயில்பீலில்
காரிகையே மயங்கும்
காஞ்சலோசனா..

கந்தர்வக் கண்ணா – நீ
காந்தக் கண்களில்
காணும் எழிலில்
கன்னியர் மனக்கவரும்
கமலநயனா..

நந்தகுமாரக் கண்ணா – நீ
நகைக்கும் நளினத்தில்
நங்கையின்
நாணம் பெருக்கும்
நந்தகோபாலா..

மதனக் கண்ணா நீ
மங்கையர் மனதில்
மகிழ்ச்சியூட்டி
மயக்கும்
மன்மோகனா.

கோகுலக் கண்ணா – நீ
கோவர்தனக் குடையாக்கி
கொடும் மழையில்
கோமாதாவைக் காக்கும்
கோபாலா..

கேசவா கோவர்தனா
சனதனா சர்வபாலகா
சாதனா சியாமா
நந்தகுமாரா நாரயணா..
நிர்குணா நிரஞ்சனா
பத்மநாபா பரம்பிரம்மா
வர்த்தமான வாசுதேவபுத்திரா
யாதவேந்திரா..அப்பப்பா..
எண்ணிலடங்கா உன்
நாமங்களைப் போல
எண்ணிலங்கா சேட்டைகள் செய்து
தீராத விளையாட்டுப் பிள்ளையாய்
என்னகத்தில் வீற்றிருக்கும்
லோகாதியட்சகா உன்னைப்
போற்றி வணங்குகிறேன்!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾🙏🏾🙏🏾

மன்னிப்பாயா? தண்டிப்பாயா?

மரங்களை அழித்து
மனைகளாக்கி
மாடி கட்டங்களாய்
மாற மழை குறைந்தது..
மரமே..மழையே..
மன்னிப்பாயா?

ஆற்று படுக்கையில்
அளவுக்கு அதிகமான
ஆற்று மணல் அள்ளி
அடுக்குமாடி அலுவலகங்களாக
நிலத்தடி நீர்மட்டம்
சீர்கெட்டது..
மணலே..நீரே..
மன்னிப்பாயா?

விவசாய நிலங்களில்
விளைச்சல் அதிகரிக்க
விசமான செயற்கை
உரங்களை மருந்தாக
ஊற்றிட
மண்ணின் வளம்
கெட்டது..
மண்ணே.. நிலமே..
மன்னிப்பாயா?

நவீனமயமாதலில்
தொழிற்சாலை வெளியிடும்
புகையினால்
காற்று மாசாகி அதை
சுவாசிக்க
புற்றுநோய் வந்து
உடல் கெட்டது..
காற்றே.. உடலே..
மன்னிப்பாயா?

பணத்தேவையோ
பதவி மோகமோ வந்து
கால நேரமில்லாமல்
உழைத்து உறவுகளை
சந்திக்க நேரமில்லாமல்
தவிக்கிறாய்..
உறவே..காலமே..
மன்னிப்பாயா?

“தெரிந்து செய்தால் தப்பு..
தெரியாமல் செய்தால் தவறு..”
செயல்களை தெரிந்தே
செய்து அதன்பொருட்டு
வரும் விளைவுகளை தெரிந்தே மறந்துவிட்ட மானிடரை
மன்னிப்பாயா? தண்டிப்பாயா?
இறைவனே.. இயற்கை அன்னையே..!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

குடை!

மழையில் பூக்கும்
மனங்களை மகிழ்விக்கும்
பல வண்ணங்கள்
கொண்ட வானவில்
குடை!

மழையில்
தன்னை நனைத்து
நின்னை காக்கும்
தன்னலமற்றது
குடை!

வெய்யிலில்
தன்னைக் காய்த்து
நமக்கு நிழலளிக்கும்
கையடக்க மரம்
குடை!

கை
தளர்ந்தோர்க்கு
கைப்பிடி
கைத்தடியாகி
கைத்தாங்களாக
துணை நிற்கும்
குடை!

சிலநேரம்
பிறழும் பிள்ளையை
சிறந்தவனாக்க
பிறம்பாய் மாறும்
உறவான ஆசிரியரின்
குடை!

எளியோர் வலியோர்
ஏற்றத்தாழ்வு
இல்லாமல்
தன் கூரையின் கீழ்
நிழல் தரும்
குடை!

வழிபறிப்போரின்
கழுத்துப் பட்டையை
எட்டி பிடித்திழுக்கும்
தற்காப்பு ஆயுதம்
குடை!

வித்தைகாரனின்
வித்தையில்
குழந்தையை
குதூகலமாக்கும்
விளையாட்டு பொம்மை
குடை!

நினைவில்
நிலைத்து நிற்க
நிழற்படம் பிடிக்க
செயற்கை ஒளியைப்
பரப்பும் சாதனம்
குடை!

கம்பி வளைந்து
காம்பு (கைப்பிடி) ஒடிந்து
கருப்புதுணி கிழிந்தவனை
கம்பீரமாக்கி சரிசெய்த
பாட்டனை
நினைவுபடுத்தும்
குடை!

ஆண்டி முதல்
அரசன் வரை
ஆசான் முதல்
ஆண்டவன் வரை
ஆண்டாண்டாக
ஆண்ட பொருள்
குடை!

மானம் மூடியிருந்தால்
“மழை பெய்யும் போல
குட எடுத்துனு போ” –
அம்மாவின் குரல்
அசரீரியாக ஒலிக்க
தேடுவேன்
விட்டத்தில்
மடித்து வைத்த
குடை!!

-பிரியா பாஸ்கரன் ☔ ☂ 🌂

பூக்கள்!

பூக்கள்..
ஒரு நாள் வாழ்ந்தாலும்
அனைவரின் நெஞ்சிலும்
நிலைத்து நின்று விடும்
சித்திரம்!

பூக்கள்..
வலியோர் எலியோர்
பேதமின்றி
புன்னகைக்கும்
அரசி!!

பூக்கள்..
பிறப்பிலிருந்து
இறப்பு வரை
உடன் வரும் உறவு!

பூக்கள்..
தினம் மடிந்து
அடுத்த நாளே
பிறந்து வரும்
மறுபிறவி!

பூக்கள்..
வண்டுகளை
மயக்கும்
மது(மாது)!

பூக்கள்..
வண்ணச்சேர்க்கயை
வாரி இறைத்த
அற்புத ஓவியன்!

பூக்கள்..
காரிகையின்
கார் கூந்தலை
அலங்கரிக்கும்
கிரீடம்!

பூக்கள்..
அமரிக்கையான
அமைதியான
அகங்காரமில்லா
அழகு தேவதை!

பூக்கள்..
விடியற்காலையில்
விழித்து கூவும்
தோட்டத்தின்
அலாரம்!

பூக்கள்..
என்றும்
மணம் மாற
இயற்கை
வாசனை திரவியம்!!

பூக்கள்..
மக்களின்
மனழுத்தத்தை நீக்கி
மகிழ்விக்கும்
இலவச மருத்துவன்!

பூக்கள்..
முள்ளிலும் சரி
சேற்றிலும் சரி
மலர்ந்து சிரிக்கும்
மழலை!

பூக்கள்..
உன்னை சரணடைந்து
கரைந்திடும்
பனித்துளிக்கு
தெய்வம்!

பூக்கள்..
கடவுளை
அலங்கரிப்பதால்
எப்போதும் நீ
அடைவாய் சொர்கம்!

-பிரியா பாஸ்கரன் 🌺💐

மழலை!

துன்பங்கள் காற்றில் பறந்திடும்
உன் கொவ்வை இதழ் சிரிப்பில்..
வின் சென்று பறந்திடுவேன்
உன் செவ்விதழ் முத்தத்தில்..
தீயாக தகிக்கும் உள்ளம் குளிர்ந்திடும்
உன் சிரிக்கும் பார்வையில்..
தேகம் பனிக்கட்டியாக கரைந்திடும்
உன் கைத்தீண்டலில்..
உணர்வு மயங்கி மண்ணாகிடும்
உன் மெய் தீண்டலில்..
பஞ்ச பூதங்களிலும் சில நொடிகளில்..
பயணம் செய்திடுவேன்..
உன் மழலையின் பேச்சில்…
ம்…மா….ஆ…

-பிரியா பாஸ்கரன் ❤

வெண்ணிலா!

மார்கழி மாதம் மிச்சிகன் மாகாணத்தில்
வெண்மேகத்திற்க்கு குளிரெடுத்து
குளிர் தாளாமல்
பாதையெல்லாம் பனிமழை பொழிந்து
போர்வையாய் போர்த்திருக்க..
அதை காணும் ஆவலில்
கதவை திறக்க..
பனிமழை பளபளக்க..
பளீர் ஒளி வீச்சு
வானவீதியிலிருந்து வீச..

அண்ணாந்து பார்க்க..
ஆகாய மச்சி வீடு
இள நீல வண்ணம் பூசியிருக்க..
அதில் எழிலோவியமாய்..
வைர ஆபரணம் அணிந்து
சொலிசொலிக்க..
வெள்ளி கம்பிகளில் கோர்த்த
வெண்பனி மலர்கள் அழகுடன்
அலங்கரிக்க..
மென்மையான வெண்பட்டுத்தி..
மென்னகை எனும் புன்னகைப்பூசி..
வெண்முத்து நட்சத்திர தோழிகள் புடை சூழ..
வெண்மேகத்தில் வெட்கத்துடன்..
“வெளியே உள்ளே” ஆட்டம் ஆடி..
பால் பொங்கும் குதூகலத்துடன்..
பூப்பெய்தி (முழுமதி) பொலிவுடன்..
அன்று மலர்ந்த வெண்தாமரையாய்..
தேவதையாக வீற்றிருந்தாள் ..
பால் நிலவான வெண்ணிலா!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

மார்கழி நிலா

மார்கழி நிலா!

ஆகாயத்தை தேற்றாமரமாக்கி(வீடு)
தாழம்பூ வண்ணத்தில் ஆடையணிந்து
தங்கத்தை ஆபணரணமாகப் பூட்டி
அளப்பரியா அழகுடன்
அமரிக்கையான எழிலுடன்
மினுமினுக்கும் காந்த பார்வை வீசி
தளதளக்கும் தேகத்துடன்
பூசணிப்பூவாய் மலர்ந்து
தோழிப் பெண்டுகள் விண்மீன்களுடன்
மார்கழி மாதம் விடியலில்
பனிமழையில் நனைந்து
வீதி உலா வர ..
கதிரவன் உதிக்க
நாணம் கொண்டு
மறைந்ததேனோ?

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

மார்கழி மதி!

மார்கழி மாதம் விடியற்காலம்..
இருள் பிரிந்தும் பிரியாமலும்..
பனிமழை பொழிந்தும் பொழியாமலும்..
சில்லென்ற காற்று வீசியும் வீசாமலும்..
இருந்த ஒரு நாளில் அதிகாலை
கோலம் போட எழ..
பூசணிப்பூ பறிக்க..
வாசல் கதவு திறக்க..
பூசணிப்பூ ஆகாயத்தில்
பூத்து விட்டதோ என
பூரித்து பார்த்தால்
புரிந்தது பூமதி
முழுமதியான
பெளர்ணமி என்று..
வந்து விட்டாள் என்
வாசலை அலங்கரிக்க
என் வான்மதி!!

-பிரியா பாஸ்கரன் 🌙🌝

நிலாக்காலம்!

அது ஒரு வைகாலம்..
விளைந்த பொன்னி அரிசியில்
வடித்த சுடச்சோறில்
வீட்டில் உருக்கிய பசு நெய்யுடன்
பருப்பை குழைத்து
சிறு வயதினில் உனைக்காட்டி
ஊட்டிடுவாள் நிதமும்
கூடவே உரைத்திடுவாள்
பாட்டி வடை சுட்ட கதைதனையும்
அன்னை..
அன்றிலிருந்து ஆனாய்
என்னுடன் கதைக் கேட்டு
விளையாடும் தோழியாய்!!

அது ஒரு இனிய மேககாலம்..
நண்பர்கள் கூட்டமுடன்
லொடலொட என்று பேசி
கலகல என
கிண்கிணியாய் சிரித்து
நொண்டி ஆட்டம் ஆட..

சட்டென்று
சிலுசிலு காற்று வீச..
கீசுகீசு என குருவிகள் கத்த..
சடசட சாரல் மழை தூவ..
படபட என இமைகள் கொட்ட..
தொபதொப என நனையாமலிருக்க..
திபுதிபு என நாங்கள் ஓடி..
புசுபுசு வென்று மூச்சு வாங்க..
வாசல் திண்ணையில்
வாகாக சாய்ந்து கொண்டு
அமர்ந்தோம்!

அன்னாந்து வானத்தை பார்த்தால்
முக்காடு இல்லாமல்
முழுதும் நனைந்து
நிர்மலமான முகத்துடன்
பளபள ஒளி வீசி..
தகதக மின்னி..
தளதள அழகுடன்..
வீற்றிருப்பாள் என் தோழி
சந்திரமதி என்னுடன் கதைகேட்க
அதனால்..

நான் அம்மா என கத்த..
மொறுமொறு தோசை
அம்மா சுட சுட..
சுடசுட தோசையை
கமகம சாம்பாருடன்
பலபல கதைகள் பாட்டி
சொல்லசொல்ல கேட்டுக்கொண்டு
கடகட வென
சாப்பிட்டோம்!

அது இன்னும் ஒரு சாயங்காலம்..
அந்தி மாலை அடிக்கடி நடக்கும்
மின்வெட்டு..
அதுவும் அன்று பெளர்ணமி..
அடுத்த நாள் விடுமுறை என்றால்
இரெட்டிப்பு சந்தோசம்..

முழுமதி என் தோழி
உன் எழிலை காண
ஓடோடி வந்து முற்றத்தில்
எட்டி பார்க்க எடுப்பான தோற்றத்தில்
ஓய்யாரமாய் உயரத்தில்
பளீர் சிரிப்புடன் பளப்பளவென்று
பாங்காக நீல வண்ண
வான் கடலில்
வெண்மேக அலையினிடையே
நங்கூரமிட்டு நாங்கள் கும்மாளம்
போடுவதை பார்க்க காத்திருந்தாய்!!

அப்பாவும் அண்ணாவும்
கயிற்று கட்டிலை
வாசலில் எடுத்து போட
அக்காள்கள் பாய்களை
முற்றத்தில் விரித்து விட
தம்பி பையன் அக்கம்
பக்கத்து வீட்டில்
மளமள என நிலாச்சோறு
சேதி சொல்ல

அண்ணன் தம்பி
அக்காள் தங்கையுடன்
அடுத்த வீட்டு வாண்டுகளும்
எதிர் வீட்டு பொடிசுகளும் இணைய
அனைத்து சொந்த பந்தங்களும்
குதூகலத்துடன் கூட..
இரண்டு வீடு தள்ளி இருக்கும்
பெரியம்மா கொண்டு வந்த
கைமுறுக்கு கடலை உருண்டையுடன்
அமர்களமாய் தொடங்கியது
சீட்டுக் கச்சேரி..

இந்த அமர்களத்தில் நான் இருக்க
என் தோழி நிலா பெண்னை மறக்க..
அவளோ காற்றை தூதுவிட்டு..
சிலுசிலு காற்று வீசி..
உடல் சிலிர்த்து..
கழுத்து சிலுப்பி..
தலைதூக்கி
நான் அவளைப் பார்க்க
அவள் செல்லச் சண்டையிட்டு
வெண்மேக அலையில்
ஒளிந்து மறைந்து
கண்ணாம்பூச்சி ஆடினாள்
என்னுடன்!

அம்மா அடுக்கடுக்காக
சுடச்சுட கேழ்வரகு
அடை சுட்டு அவியலுடன்
அதிரசமும்..
அடுத்த வீட்டு அத்தை
அவித்த காஞ்சிபுர இட்லி
அரைத்த புதினா சட்னியையும்..
எதிர் வீட்டு சித்தி
எலுமிச்சைப் பிழிந்து
தாளித்த இடியாப்பம்
தேங்காய் பாலுடன்
வகை வகையான உணவுகளை
கொண்டுவர குடும்பமாய்
அமர்ந்து கதம்பமாய் கலந்து
வாயக் கொள்ளாமல்
பலகாரங்களை உண்ண

பாட்டியோ எங்கள் லட்சுமி
கொடுத்த பாலைக்
கெட்டி தயிராக்கி சோறுடன்
பருப்பு துவையலையும்
உருட்டி உருட்டி கைகளில்
தர தர அதை வாங்கி
லபக்கு லபக்கென்று விழுங்கிடுவோம்
பொடிசுலிருந்து பெரிசுவரை..

சுண்டக் காய்ச்சிய பசும் பாலை
சூடாக அருந்திவிட்டு
அடுத்து பாட்டுக் கச்சேரி
களைகட்ட தொடங்க..
நான் பாடினேன்..
“இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே..”

கொண்டாட்டம் முடிந்தது
விடியற்காலம்..
அதுவே வாழ்வின் வசந்த காலம்..
அது ஒரு பொற்காலம்..
மீண்டும் வருமா அக்காலம்..
மீண்டும் வர முயற்ச்சிப்பேன் இக்காலம்..
இல்லையேல் அடுத்த தலைமுறைக்கு
ஆகிடும் கற்காலம்..
நெஞ்சில் பசுமையாக இருக்கும் நெடுங்காலம்..
நினைவில் நிலைத்து நிற்கும் இறுதிக்காலம்..
அது ஒரு அழகிய நிலாக்காலம்!!

-பிரியா பாஸ்கரன் 🌙 🌝 🙏🏾