நிலா!

தூரிகைக் கொண்டு
காரிருளைப் போக்க
கதிரவன் துணையுடன்
வான்வெளியில்
வ(ரை)ந்த காரிகை நீ!

தங்கத்தை உருக்கி
ஆபரணமாக்கி பூட்டி
வானில் உலவ விட்டு
ஆர்பரிக்கும் அழகுடன்
மினுமினுக்கும்
தாரகை நீ!

வளர் பிறையில்
எடைக் கூடினாலும்
தேய் பிறையில்
எடைக் குறைந்தாலும்
எப்பொழுதும் எழிலுடனிருக்கும்
அழகி நீ!

அகிலத்தை ஒரு நாள்
ஆழ்ந்த கருமையில் அமிழ்த்தி
அடுத்த நாளில்
உன் பிறை முகத்தை
காட்டி மயக்கும்
மாயக்காரி நீ!

ஆகாய அந்தபுரத்தில்
நட்சத்திர தோழிகள்
அரண் அமைத்து
நலமுடன் புடை சூழ
வீற்றிருக்கும்
அரசி நீ!

நிதமும் மழலைக்கு
கதைச் சொல்லி
சோறு ஊட்ட
அன்னைக்கு உதவிய
விளையாட்டு
பொம்மை நீ!

கற்பனையே தெரியாத
காதலனை
காதல் கடிதம் எழுத
கற்று கொடுத்து
கவிஞன் ஆக்கிய
ஆசான் நீ!

மனதுக்கு மட்டுமே
அறிந்த ரகசியத்தை
மகிழ்வுடன்
பகிர்ந்து கொள்ள
துணை நாடும்
தோழி நீ!

நீல வண்ண
நீள வானத்தில்
வெண்மேகத்தில்
ஒளிந்து மறைந்து
கண்ணாம்பூச்சி ஆடும்
குழந்தை நீ!

கவிஞ்சனின்
கற்பனைக்கு கருவாகி
கவிதைகளில்
காவியங்களில்
உலா வரும்
கதாநாயகி நீ!

காசு வாங்காமல்
மின் வெட்டு
இல்லாமல்
குளுமை தந்து
ஒளி கொடுக்கும்
மின்சாரம் நீ!

எல்லையில்
நாட்டை காக்கும் தலைவனும்
வீட்டில் இருக்கும் தலைவியும்
ஒரே நேரத்தில்
ஒரு சேர பார்க்கும்
ஒரே சொந்தம் நீ!

இருள் பிரிந்தும்
பிரியாமல் இருக்கும்
அதிகாலை வேளையில்
மலர்ந்து மணம் பரப்பும்
மலர்கள் பார்க்கும்
முகம் நீ!

அந்தி மாலையில்
அழகு மலர்ச் சோலையில்
தன்னந்தனிமையில்
தம்பதிகளின்
தேன்நிலவில்
தனிமையை திருடிய
கள்வன் நீ!

சிவனின் சடைமுடியில்
சாபம் நீங்கி
சட்டமாக
அமர்திருக்கும்
எழில் மிகு
முடி முள் நீ!

“நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
தமிழ் பள்ளி தேடி வா
தமிழ் படிக்கலாம் ஓடி வா;” என்று
மழலை மலர்களுக்கு
தமிழ் சொல்லி கொடுக்கும்
பாடம் நீ!!

-பிரியா பாஸ்கரன் 🌙 🙏🏾

புத்தகம்!

தோழியானாய் பயணங்களில்..
துணையானாய் இரவுகளில்..
வழிகாட்டியானாய் துன்பத்தில்..
மருத்துவரானாய் மன அழுத்தம் நீக்கியதில்..
உபாத்தியாயனானாய் நன் நடத்தை கற்பித்தலில்..
ஆசானானாய் அறியாமையை நீக்கியதில்..
அனைத்துமானாய் என் அகிலத்தில்!

பருக பருக தேனாய் இனித்து..
வாசிக்க வாசிக்க வாத்திய இசைப்பொழிந்து..
புரட்ட புரட்ட மகிழ்ச்சி சுரந்து..
பகிர பகிர அறிவை வளர்த்து..
நுகர நுகர சுவாசத்தில் கலந்தாய்!

நீயே..
எண்ணங்களின் வடிவம்..
எண்ணங்களுக்கு எசமான்..
கவிஞனின் படைப்பு..
கற்றோரின் சொத்து..
சுயசரிதையின் பகிர்வு..
சுமைதாங்கியின் பலம்..
வெற்றியின் பரிசு..
கேள்விக்கு பதில்..
பிழைகளின் திருத்தம்..
வரலாற்றின் பகிர்வு..
அமைதியின் சிகரம்..
பகுத்தறிவு பண்டிதர்..
மடமை ஒழித்தல்..
அறனுக்கு ஆசான்..
புரியாத புதிர்..
எழுதுகோலின் துணை..
அகல் விளக்கு..
குளிரும் நிலவு..
சுடும் சூரியன்..
வீசும் தென்றல்..
பாடும் கீதம்..
காக்கும் சக்தி..
ஆதிபகவன்..
இன்னும் இருக்கு பல
எனக்கு தெரியவில்லை
சொல்ல..!

உனைக் கற்றதால்
வானத்தில்
சிறகு இல்லாமல் பறக்கும்
பறவையாகினேன்..
காலம் செல்லும் முன்னே
சொர்கத்தின் கதவுகளை கண்டேன்..

வாய் ஓயாமல் பேசும் எனக்கு
வாசிக்க வாசிக்க
மெளனமே மொழியானது..
அது எப்படி?
என்ன இரகசியம்?
சோர்வே வருவதில்லை
உனை கைகளில் ஏந்தினால்..?

அப்பப்பா..
உனை பற்றி
சொல்ல தெரியவில்லை..
சொல்லி மாளவில்லை..
சிந்திக்க நேரம் போதவில்லை..
சிந்தித்தால் நிறுத்த முடியவில்லை..
வாசிக்க வாய் ஓயவில்லை..
வாசித்தால் காலம் ஓடுவது தெரியவில்லை..
படிக்க கண் பத்தவில்லை..
படித்தால் கண் அயரவில்லை..
அச்சிட தாள்கள் போதவில்லை..
அச்சிட்டால் என்றும் அழிவதில்லை..

ஒவ்வொரு முறையும்
உனை சுவாசிக்க
அகத்தில்
புது (புதிய) வேகத்தால்
புதுக்கணிப்பு (புதியவொளி)
புறப்பட்டு புது உத்தி
(சொல், திறமை, அறிவு, திட்டம்..)
பிறந்து
புத்துணர்ச்சி
உருவாவதால்
“புத்தகம்” ஆனாயோ!!

உனை அறிமுகப்படுத்திய அனைத்து
ஆசான்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾

– பிரியா பாஸ்கரன் 📚 📖 🙏🏾

யாருக்கு யார்?

மல்லிக்கு மதுரை
மதுரைக்கு மீனாட்சி!
பட்டுக்கு காஞ்சி
காஞ்சிக்கு காமாட்சி!

பாட்டுக்கு பாரதி
பாரதிக்கு செல்லம்மா!
குறளுக்கு வள்ளுவர்
வள்ளுவருக்கு வாசுகி!

வாசத்திற்க்கு முல்லை
முல்லைக்கு பாரி!
பாலுக்கு பசு
பசுக்கு மனு நீதிச்சோழன்!

மத நல்லிணக்கத்திற்கு அகிம்சை
அகிம்சைக்கு காந்தி!
ஆண்மைக்கு வீரம்
வீரத்திற்க்கு சிவாஜி!

விருதுக்கு செவாலியர்
செவாலியக்கு அஞ்சலி கோபாலன்!
( செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண்)
நடிப்புக்கு சிவாஜி
சிவாஜிக்கு செவாலியர்!

பெண்மைக்கு பொறுமை
பொறுமைக்கு தாய்மை!
அன்புக்கு தாய்மை
தாய்மைக்கு தெரசா!

கற்பனைக்கு கவிதை
கவிதைக்கு கண்ணதாசன்!
அறியாமைக்கு கல்வி
கல்விக்கு ஆசான்!

விவசாயிக்கு மழை
மழைக்கு மேகம்!
வண்ணத்துக்கு வானவில்
வானவில்லுக்கு மழை!

அடைமழைக்கு கார் காலம்
கார் காலத்திற்க்கு கார்த்திகை!
கார்த்திகைக்கு தீபம்
தீபத்திற்க்கு திருவண்ணாமலை!

உறவுக்கு மொழி
மொழிக்கு தமிழ்
தமிழுக்கு அமுது
அமுதுக்கு தமிழன்னை!!

யாருக்கு யாரோ..
எதுக்கு எதுவோ
எவர் அறிவாரோ..
இறைவன் அன்றி!

“காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா” – சித்தர்

“காதற்ற ஊசியும் வாராது காண்
கடைவழிக்கே” – பட்டினத்தார்

“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்து இவ்வுலகு” –

வள்ளுவனின்
நிலையாமையை
நினைத்து..

உயிர் உடலுக்கு
சொந்தமில்லை..
உடல் மண்ணுக்கு..
என்று உணர்ந்து..

“உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” – திருமூலர்

உயிர் உடலில்
உள்ளவரை
உள்ளத்தில்
நல்லதை நினைத்து
உரியதை செய்திடுவோம்
ஊருக்கு!

அவை நிலைத்திடும்
நினைவுகளில் (வரலாற்றில்)
யாருக்கு யார் என்று..!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

சித்திரம் பேசுதடி!

சித்திரம் பேசுதடி!

ஒன்றாம் வகுப்பிலிருந்து

பன்னிரண்டாம் வகுப்புவரை

ஒரே குறிக்கோளுடன்

கல்லூரி செல்ல வேண்டுமென

ஓடி ஓடி படித்து

நல்ல மதிப்பென் எடுத்து

கால் கடுக்க நின்று

கல்லூரி படிவம் வாங்கி

பூர்த்தி செய்யத் துவங்க

அதில் கேள்வி

“சாதிப் பெயர்? சான்றிதழ் இணைந்துள்ளதா?”

அலுவலக அறையில்

பாரதியின் சித்திரம்..

பேசியது என்னிடம்..

“சாதிகள் இல்லையடி பாப்பா..”!

கணிப்பொறி கற்று

கல்லூரி வளாக நேர்காணலில்

தனியார் அலுவலகத்தில்

பணி கிடைத்து

வேலைக்குச் சென்று

நேரம் காலம் பார்க்காமல்

உழைத்து சம்பளம் சேர்த்து

கனவை நினைவாக்க வங்கிக்

கடன் பெற்று இருசக்கர

வாகனம் வாங்கி பயின்று

ஓட்டுநர் உரிமம் வாங்க

அரசு அலுவலகம் செல்ல

ஊழியர் கேட்டது லஞ்சம்

வேலையை விரைவில் முடிக்க இல்லையேல்

“இன்று போய் நாளை வா”

என்று என்றும் ஒரே பதில்..

வளாகத்தில் பாரதி பிரதி நிலைய

பாரதியின் சித்திரம்..

பேசியது என்னிடம்..

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..”!

காலை எழுந்து

காலைக் கடன் முடித்து

ஒரு மணி நேரம்

ஓடி உடல் பயிற்சி செய்து

அம்மா சமைத்த

சூடான இட்லி

சுவையான சாம்பார்

சுடச்சுடக் காப்பியுடன்

சுவையாகச் சாப்பிட்டு

இருசக்கர வாகனத்தில்

இருபது நிமிடம் பயணத்தில்

அலுவலகம் செல்ல

போக்குவரத்து சமிக்கையில்

“அம்மா பசிக்குது பிச்சை போடுங்க..”

குரல் கேட்க

எதிரில் பாரதி புத்தக நிலைய

பெயர்ப் பலகையில் உள்ள

பாரதியின் சித்திரம்..

பேசியது என்னிடம்..

“ தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்..”!

கல்யாணம் கட்டி கணவருடன்

கடல் கடந்து வேலை நிமித்தம்

வெளி நாட்டில் குடி புகுந்து

மழலைகளை ஈன்றெடுத்து வளர்த்து

கோடை விடுமுறைக்கு

குடும்பத்துடன் குதூகலமாக

வேர்களை அறிமுகப்படுத்தப்

பிறந்த மண்ணுக்கு

அழைத்துச் சென்று

பசுமை நிறைந்த வயல்வெளிகளை

விளைந்து கதிரிருக்கக்

காத்திருக்கும் கழனிகளை

வயக்கால் வழிய நீர்ப் பாயும் கேணிகளை

வான் முட்டி நிற்கும் தென்னந்தோப்புகளைக்

காணச் சென்றால்

கண்டது என்னவோ

விண் முட்டி நிற்கும்

கட்டட குடியிருப்புகளை

வரிசையாக வாகனங்கள் நிறுத்துமிடத்தை

வளமான நஞ்சை புஞ்சைகள்

கூறுப்போட்டு விற்கக் காத்திருக்க..

பாரதி கட்டுமான குழு

பாரதியின் சித்திரம்..

பேசியது என்னிடம்..

“காணி நிலம் வேண்டும் – பராசக்தி

காணி நிலம் வேண்டும்..”

இது அனைத்தையும்

பார்த்து மனது துயர் அடையும் பொழுது

என் மனதில் இருக்கும்

பாரதியின் சித்திரம்

“ மனதி லுறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்”

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

பூவரசி!

செவ்வந்திபூ இதழ் சிவக்க
முல்லைப்பூ சிரிப்புடன்
கனகாம்பரப்பூ வெட்கத்தில்
கன்னங்கள் பூக்க

அல்லிப்பூ கொடி உடலில்
தாமரைப்பூ வண்ணச்சேலையில்
கத்தரிப்பூ சரிகை
தலைப்பு பளபளக்க

ரோசப்பூ பதக்க வைரமாலை மின்ன
பவளமல்லிப்பூ அட்டிகை அணிந்து
கதம்பப்பூ வண்ணங்களால்
வளைவி அடுக்கி

மல்லிகைப்பூ சடைச்சூடி
மரிக்கொழுந்துப்பூ திரவியம் பூசி
சம்பங்கிப்பூ மாலையில்
ரோசப்பூ கொத்து அசைந்தாட

வாடாமல்லிப்பூ போல் பிரகாசமாக
அனிச்சம்பூ போல
மென்மையான அடிவைத்து
குண்டுமல்லிப்பூ செண்டை
குங்குமப்பூ மருதாணி விரல்கள் பிடிதிருக்க

செந்தாமரைப்பூவில் வீற்றிருக்கும் மகாலட்சுமியாய்
சூரியகாந்திப்பூ போல்
முகம் மலர்ந்து
மகிழம்பூ வாசம் வீசி
என்னருகில் அமர

‘பூ’மழை பொழிந்து
தேவர்கள் ஆசிர்வதிக்க
சாமந்திப்பூ கலந்த அட்சதைத்தூவி
சொந்தபந்தங்கள் வாழ்த்த
ஆனந்தப்’பூ’க்கள் பெற்றோர்
கண்களில் பூக்க

பலவண்ணப் ‘பூ’க்களால் ஆன தோரணங்கள் தொங்கும்
வாழைப்பூ பந்தலில்
வாகாய் மாலைமாற்றி
தாழம்பூ சாட்சியாக
உன் கரம் பிடித்தேன்
தங்கமே! – கண்ணாளன்!!

-பிரியா பாஸ்கரன் 💐

உண்மையான நட்பு!

வாழ்வின் ஏற்றத்தாழ்வில்
எம்மாற்றம் இல்லாமல்
ஏமாற்றம் செய்யாமல்
என்றும் நம்முடன்
எண்ணங்களை பகிர்ந்து
தண்டவாளம் போல்
இணைப்பிரியாமல்
இணைந்து பயணம்
செய்வதே
உண்மையான
நட்பு!!

சில சிறப்’பு’கள்!

தாயின் அரவனைப்பு
தந்தையின் கண்டிப்பு
ஆசானின் கண்காணிப்பு
கடவுளின் படைப்பு அனைத்தும் சிறப்பு!

சிறுவர்களின் கலகலப்பு
கொளுத்தும் கம்பிமத்தாப்பு
நெய் அதிரசத்தின் தித்திப்பு
தீபாவளியின் சிறப்பு!

வடையில் உளுந்து பருப்பு
வகிக்கும் முக்கிய பொறுப்பு
தரும் மொறுமொறுப்பு
சுவையோ சிறப்பு!

உள்ளத்தில் இருக்கும் களிப்பு
நீக்கும் உடல் களைப்பு
அதனால் உடல் உறுப்பு
தரும் சுறுசுறுப்பு!

உடல் எடை குறைப்பு
குறைக்கும் இரைப்பு(மூச்சுத்திணறல்)
தரும் உடல் விறுவிறுப்பு
அது மருத்துவர் கணிப்பு!

கற்க வேண்டும் தற்காப்பு
கலை கொடுக்கும் பாதுகாப்பு
அழிக்கும் அருக்களிப்பு (பயம்)
அதுவே புறக்காப்பு (காவல்)!

காதலியின் செல்ல முறைப்பு
கொடுக்கும் குறிப்பு..
ஏறும் காதலன் இதயத் துடிப்பு
ஊடல் காதலின் சிறப்பு!

குழந்தை இதழ் சிவப்பு
உதிர்க்கும் புன்சிரிப்பு
இழுக்கும் ஈர்ப்பு
தரும் அக்களிப்பு(மனமகிழ்ச்சி)!

மனதில் நினைத்த நினைப்பு
பல வண்ணங்களின் கலப்பு
உயிர் கொடுக்கும் உயிர்ப்பு
ஓவியனின் படைப்பு!

தலைமையின் பொறுப்பு
செய்தால் தன்பொறுப்பு(தன்கடமையை)
தொழிலில் இல்லை கைப்பொறுப்பு (நட்டம்)
அதனால் கிடைக்கும் எக்களிப்பு(வெற்றி மகிழ்ச்சி)!

ஆடிமாதம் அம்மனுக்கு மஞ்சள்காப்பு
பிறகு அலங்கரிப்பு
திறக்கும் திருக்காப்பு( கதவு)
கேட்கும் பக்தர்களின் வைகாப்பு (ஆரவாரம்)!

இயற்கை கொடுக்கும் வனப்பு
கடவுளின் படைப்பு
நமக்கு தந்த அன்பளிப்பு
தருவோம் பாதுகாப்பு!

விவசாயி தந்த உழைப்பு
பயிர்கள் வளரும் செழிப்பு
விளையும் முப்போகம் முத்தாய்ப்பு
முகத்தில் விளையும் பூரிப்பு!

குணத்தில் சிறந்தது மன்னிப்பு
அது அழிக்கும் கடுப்பு (அகங்காரம்)
அதனால் நீக்கும் மனக்கசப்பு
வரும் முகத்தில் சிரிப்பு!

குழுவாக அளிக்கும் பங்களிப்பு
உருவாக்கும் உள்ளக்களிப்பு
கொடுக்கும் மனக்களிப்பு
பாடுவோம் ஆனந்தக்களிப்பு(பாட்டு)!!

தமிழ் மொழி வாசிப்பு
ஏற்படுத்தும் நேசிப்பு
தரும் யோசிப்பு
ஆகுமே என் சுவாசிப்பு!

– பிரியா பாஸ்கரன் ❤

பிரியமான சகி!

பள்ளிக் காலத்தில்
பறந்துதிரிந்தோம்
பள்ளி மைதானத்தில்
பல வீதிகளில்
பற்பல கோயில்களில்
பல கழனி மேடுகளில்
பசுச்சோலைகளில்..
பசுமரத்தாணி போல
பதிந்து கிடக்கிறது
பசுமையான நினைவுகள்
இன்றும்..

அரசினர் மேல்நிலைப்பள்ளியில்
ஆறாம் வகுப்பில்
‘அ’ பிரிவில் அடக்கமாய்
ஆசிரியரிடம் அனுமதி பெற்று
ஆர்பாட்டம் இல்லாத
அமைதியான அழகுடன்
அதிர்ந்து பேசாமல் எடுத்து வைத்த
அடிக்கும் வலிக்காமல் நடந்து வந்து
அறிமுகமாகி அமர்ந்தாய்
என்னருகில்..

முதல் நாள் வகுப்பில்
முத்து வேலாயுதம் ஆசிரியர்
முதலில் தமிழ் பாடம் எடுக்க
முத்து முத்து கையெழுத்தில்
முத்தாக தமிழ் எழுதினாய்..
முதல் மதிப்பெண் எடுக்கும் எனக்கு
முத்து கையெழுத்து கனவாகிப் போனதால்
முட்டை விழி விரித்து
மூழ்கினேன் உன் எழுத்தில்..

இருவரும் அறிமுகமாகி
இருந்ததை உணவு
இடைவெளில் பகிர்ந்துண்ணி
இருக்கும் தெருக்களின் பெயர்கள்
இருவரின் சகோதர சகோதரிகள்
இலக்கணம் கணிதம் அறிவியல்
இரட்டை சடை பிடிக்கும் என்று
இஷ்டப்படி மேற்பட்டவைகளை
இருபது நிமிடங்களுக்கு மேல் பேசி
இறுதியில் ஆகினோம்
தோழிகளாக!

கூரைவேய்ந்த வகுப்பறையில்
மண்தரையில் மகிழ்வுடன்
போட்டியிட்டு பொறாமையின்றி
கூடிப் படித்து கும்மாளமிட்டு
வகுப்பில் முதல் இரண்டு
மதிப்பெண்கள் பெற்று
இரட்டையர்கள் என்று
பெயர் பெற்று ஒருவருக்கொருவர்
இனைபிரியா பிராணசகி
ஆகினோம் ஆறாம் வகுப்பு
இறுதியில்!

பள்ளி விடுமுறையில்
பள்ளி மைதானத்தில்
பட்டம் விட ஆசை வந்து
பசங்களிடம் பட்டம் வாங்கி விட்டு அது
பறந்து போய் மரத்தில் சுற்ற
பசங்கள் பயங்கரமாக கத்த
‘பல’த்த அடிகள் அம்மாக்களிடம்
வாங்கமலிருக்க
பஞ்சுமிட்டாய் வாங்க வைத்திருந்த காசை
பதிலுக்கு பேரம் பேசி கொடுத்து
பழகிய வழியில் பதட்டமாக
வந்தோம் ஒன்றாக!

அந்தி மழை நாளில்
தெருவோரம் இருக்கும்
ஆயா கடையில்
சுடும் சூடான போண்டாவை
சுடச்சுட ரூபாய்க்கு நான்கு என
வாங்கி பங்கு போட்டு
சுவைத்துக் கொண்டே
சுற்றுச் சூழலை மறந்து
சுகமாக கதைகள் பல
சுவரசியமாக பேசிக்கொண்டு
காகித கத்திக் கப்பல் செய்து
மழை நீரில் விட்டுக்கொண்டு
கப்பல் முந்திச் செல்ல
நாம் பிந்தி
வீடு செல்வோம்!

வார நாட்களில் படிப்பு
வார விடுமுறையில்
வண்ணமயில் ஆடை அணிந்து
வரப்பு வெளியில்
வளவளத்துக்கொண்டு
வயக்காலில் கால் நனைத்துக்கொண்டு
வழியில் வரும் பெருசுகளிடம்
வம்பிழுத்து வசவுகளை
வரிசையாக வாங்கிக்கொண்டு
கொண்டையிட்ட கோழிகளாய்
சண்டையிட்டு குதுகலத்துடன்
சல சல பேச்சுடன்
கிணற்றில் நீச்சல் அடிக்க
ஓடுவோம்!

வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்
அடிபிராத்தனை
சனிக்கிழமை நவக்கிரகம் சுற்றல்
ஞாயிறு காலை
நல்லெண்ணெய் குளியல்
ஞாயிறு மாலை
தாயாட்டம் பரமபதம் கல்லாட்டம்
“சரியா? தவறா?” பாண்டி ஆட்டம்
திங்கள் முதல் வெள்ளி வரை
தினசரி பள்ளிக்கு ஓட்டம் என
ஆறு முதல் பத்து வரை
‘அ’ பிரிவில் ஒன்றாகப் படித்து
மண் தரையிலிருந்து
மரப்பலகை நாற்காலிக்கு
இடம்பெயர்ந்து
திசை கோணத்தால் பள்ளி
அரசமரத்திலிருந்து நாற்காலி வரை
ஆங்காங்கே நம் பெயர்களை
அழகான சுவடுகளாய் பதித்து
ஆருயிர் தோழிகளாய்
வலம் வந்தோம்!

ஆண்டு விடுமுறையில்
ஆரம்பித்தது சோதனை..
ஆய்வாளரான உன் தந்தைக்கு
அலுவல் பணிமாற்றம் வந்து
அவசரமாக ஊரைவிட்டு கிளம்ப – நாம்
அழுதுகொண்டே
அரசு தொலைப்பேசியினை நம்பி
அனைத்து ஆறுதல் சொல்லிக்கொண்டு
அகன்றாய் என் வாழ்விலிருந்து..
அலைபேசி இல்லாத காலத்தில்
அத்திபூ போல் வேலைசெய்யும்
தொலைப்பேசி அழைப்பு
அதன் வேலையை செய்யாததால்
துண்டிக்கப்பட்டது
நம் நட்பு!

நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி
காலம் அது போக்கில்
கழிய நான் கல்லுரியில்
கணிப்பொறி கற்று
கல்யாணம் ஆகி
கண்ணாளனுடன்
கடல் கடந்து
வந்து விட்டேன்
வட அமெரிக்கா!

கண்டம் விட்டு வந்து
இணையதளத்தில்
வலைவீசி
முகநூலில் உன் முகமதியைத்
தேடினேன்..
படவரியில் உன் படங்களைத்
தேடினேன்..
காயலையில் உன் பெயரை
தேடினேன்..
வலையொலில் உன் வடிவத்தைத்
தேடினேன்..
தேடிக் கிடைக்கவில்லை..
தேடலை நிருத்தவில்லை..

மறவா வரம் கேட்டேன்
உனை எப்பொழுதும் நினைத்திருக்க..அன்றே!
பிரியா வரம் கேட்கவில்லை
உன்னுடன் எப்பொழுதும் இருக்க- அதனால் பிரிந்துவிட்டோமோ?

கணக்கில்லா பொக்கிசங்களாய்
கடலின் ஆழத்தைவிட மனதில்புதைத்து
கண் கலங்க அகமகிழ நினைத்து
காலம் செல்லும் முன்
கடவுள் உனை என்
கண் முன்னே காட்டிவிடுவான் என
கனவு காண்கிறேன்!
கனவு நினைவாகி உனை
கண்டு விட்டு நம் நட்புக்
கரங்கள் மீண்டும் கைகூடும்
கண்டிப்பாக எனதருமை
சகியே!! – என
காத்திருக்கும்
பிரியா சகி!!

-பிரியா பாஸ்கரன் ❤