வசதியா(க்கா)ன காதல்!

பணம் இருந்த போது..
பழகினாய் பத்து மாம்..
வீசினாய் காதல் பூ வாசம்..
பூர்வ ஜென்ம பந்த பாசம்..
நீயே உயிர் சுவாசம்..
போகலாம் காதல் தேசம்.. என்றாய்!

பணம் இழந்த போது..
நீ வைத்த நேசம்..
எல்லாம் வெளி வேசம்..
செய்தாய் மோசம்..
பறந்து போனாய் வெளி தேசம்.. புரிந்தது!

கலங்கினான்(ள்)..
விழலுக்கு போனது பாசம்..
காற்றில் கரைந்தது நேசம்..
ஆதலால் ஆயாசம்..
வந்தது இச்சாநாசம்(விரக்தி)..
பெற்றோரை விட்டுச் சென்றான்(ள்) பரதேசம்..

கலங்காதே மகனே(ளே)..
பெற்றோர் உபதேசம்..
அழிந்தது விநாசம்(தீமை)..
வந்துவிடு சுதேசம்..
மகிழம் பூ வாசம்..
வரும் உன் வசம்..

கண்ணாட்டி(ளன்) பாசம்..
உருவாக்கும் நேசம்..
சேரும் உன் சுவாசம்..
வாழ்வில் வசந்தம் வீசும்!!

-பிரியா பாஸ்கரன் 💞

கண்ணாட்டி!

வாழ்வில் வந்தாய் தைமாசம்..
மகிழம் பூ வாசம்.
வந்தது என் வசம்..
வீசினாய் காதல் பூ வாசம்..
வீழ்ந்தேன் உன் வசம்..

விட்டுவிட்டு நம் சுதேசம்..
வேலை நிமித்தம் பறந்தோம் பரதேசம்..
போனோம் பட்டணப்பிரவேசம் (ஊர்வலம்)..
கண்டு களித்தோம் சிலவருசம்..

ஒப்பந்த வேலையால் வந்தது மோசம்..
பணிக்கு வந்தது நாசம்..
இழந்தது வேசம்(சம்பளம்)..
துவண்டு போனேன் சில மாசம்..

பொழிந்தாய் தாயாக பாசம்..
ஆசானாய் இதோபதேசம்(பக்குவமான அறிவுரை)..
பகிர்ந்தாய் உபதேசம்(கடவுள் வழிபாடு)..
அழிந்தது விநாசம்(தீமை)..

ஒழிந்தது ஆயாசம்..
அழிந்தது இச்சாநாசம்(விரக்தி)..
பிறந்தது உத்வேகம்..
செயலாக்கினேன் உத்தேசம்(மனத்தில் தீர்மானித்ததை)..

உருவாக்கினேன் உத்தியோகம்..
தந்தேன் வேலைக்கு நல்ல வேசம்(சம்பளம்)..
ஊழியர்கள் காட்டினார்கள் விசுவாசம்..
அடைந்தேன் சந்தோசம்..

எனக்கு ஆனாள் பரிவேசம்(சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம்)..
தந்தாள் தேசம்(ஒளி)..
பிறகு மழலைகள் பிரவேசம்..
அடைந்தோம் மகாசந்தோசம்..

வாங்கினோம் பிரதேசம்(இடம்)..
கட்டினோம் நிவேசம்(வீடு)..
செய்தோம் கிருகப் பிரவேசம்..
வாழ்வோம் ஏகதேசம்(அருமையாக)..

வாழ்வில் புயல் வீசும்.. ஆனால்
கண்ணாட்டி பாசம்..
பூர்வ ஜென்ம பந்த பாசம்..
உருவாக்கிய நேசம்..
சேர்ந்தது என் வசம்..
ஆனது உயிர் சுவாசம்.. அதனால்

வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்..
காண்போம் பல காதல் தேசம்..
படைப்போம் பல இதிகாசம் –
கண்ணாளன்!!

-பிரியா பாஸ்கரன் 💕

அம்மாவின் சேலை!

கருவில் எனை
சுமக்கும் போதே
கைகால்கலால் எட்டி
உதைத்து தொட்டுவிட்டேன்!

பிரவிக்கும் நேரம்
பனிக்குடம்
உடைந்து
நனைத்துவிட்டேன்!

உதிரத்தை பாலாக
ஊட்டும் போது
போர்த்தி
கதகதப்பாக்கிவிட்டாய்!

பாலூட்டி தோளில்
தட்டிய போது
கக்கியதை துடைக்கும்
துணியாகிவிட்டாய்!

ஏழாம் நாளில்
தொட்டிலிடும்
வைபவத்தில்
மெத்தையாகிவிட்டாய்!

தூணில்
தூளியாகி
தாலாட்டும்
ஏணையாகிவிட்டாய்!

வாயில் ஒட்டியிருந்த
சோற்றை துடைக்கும்
சுகத்திற்கு
அடிமையாக்கிவிட்டாய்!

தவறு செய்த போது
கட்டி வைத்து
கண்டிக்கும்
கயிறாகிவிட்டாய்!

கழனியில் எனக்கு பிடித்த
கடலை பறித்து
கட்டி எடுத்து வரும்
மூட்டையாக்கிவிட்டாய்!

தூறல்
வந்த போது
நனையாமலிருக்க
குடையாகிவிட்டாய்!

மழையில்
நனைந்த போது
தலை துவட்டும்
துண்டாக மாறிவிட்டாய்!

இரவில்
தூக்கும் போது
அனைத்து உறக்கும்
போர்வையாகிவிட்டாய்!

படித்த போது
விடுதியில்
பாதுகாக்கும்
துணையாகிவிட்டாய்!

கண்ணீர் விட்டு
அழும் போது
அரவணைக்கும்
அரணாகிவிட்டாய்!

வெட்கத்தில்
முகம் சிவக்கும் போது
மறைக்கும்
திரையாகிவிட்டாய்!

பூப்பெய்திய போது
உடுத்திய
முதல்
உடுப்பாகிவிட்டாய்!

வேலைக்கு
செல்லும் போது
கட்டிய பருத்தியில்
கம்பீரமாக்கிவிட்டாய்!

நிச்சயத்தன்று
பட்டு
அணிந்ததில்
அழகாக்கிவிட்டாய்!

திருமணமாகி
கடல் கடந்து
வந்த போது உடனிருக்கும்
தோழியாகிவிட்டாய்!

பேரனின்(பேத்தியின்)
தொட்டிலை
அலங்கரிக்கும்
தோரணமாகிவிட்டாய்!

மரத்தில் கட்டி
குழந்தைகள்
உற்சாகமாக ஆடும்
ஊஞ்சலாகிவிட்டாய்!

அம்மா!
நான்
உன்னை விட்டு
தொலைவில்
இருந்தாலும்
உன்னை நிதமும்
உணர்கிறேன்
உன் சேலைத்
தலைப்பின் அணைப்பில்!

-பிரியா பாஸ்கரன் 😍🙏🏾

சதாபிடேகம்!(சதாபிஷேகம்)

புத்தாடைகள் அணிந்திட
மோதிரம் மாற்றி
மன்னவன் பார்த்திட
பெண்ணவள் வெட்கப்பட

மணாளன் கண்சிமிட்ட
மங்கையிவள் நாணம் மேலிட
பார்வைத் தாழ்த்திட
கண்ணாளன் முகம் நிமிர்த்திட

பார்வைகள் பரிமாறிட
உள்ளங்கள் சிலிர்த்திட
மனங்கள் துள்ளிட
சிறகடித்து பறந்திட

முகத்தில் மகிழ்ச்சி பரவிட
மெய் மறந்திட
கைகள் குளிர்ந்திட
நெற்றியில் பொட்டிட

மணமகன் மாலையிட
மணமகள் மயங்கிட
நினைவுகள் நிலைத்திட
நிழற்படக் கருவி உள்வாங்கிட

மங்கல வாத்தியங்கள் முழங்கிட
கெட்டிமேளம் கொட்டிட
தேவர்கள் பூமழை பொழிந்திட
அட்சதை தூவிட

தங்கத்தாலி கட்டிட
காண்போர் கண்களில் ஆனந்தம் வழிந்திட
குழந்தைகள் குதுகலித்திட
வந்தவர்கள் வணங்கி வாழ்த்திட

கரங்கள் கோர்த்திட
ஏழேழு ஜென்மபந்தம் தொடர்ந்திட
அகம் மலர்ந்திட
ஆண்டவனிடம் பிராத்தினையிட

நேசங்கள் குவிந்திட
பந்தங்கள் சூழ்ந்திட
பரிசுகள் அளித்திட
காண்போர்கள் களித்திட

பேரக்குழந்தைகள் வாழ்த்து மடல் வாசித்திட
மக்களின் மனம் நெகிழ்திட
மருமகள்(ன்) மனம் மகிழ்திட
மணமக்கள் ஆசி வழங்கிட

காண்போர் பெருமிதப்பட
நெஞ்சங்கள் நிறைந்திட
அனைவருக்கும் எடுத்துக்காடாக அமைந்திட
கோலாகலமாக கொண்டாடிட

அறுஞ்சுவை உணவு பரிமாறிட
வாழைஇலை நிறைந்திட
வயிறு நிரம்பிட
விருந்தினர்கள் சுவைத்திட

இனிப்புகள் வழங்கிட
தாம்பூலம் தரப்பட
வெற்றிலை மென்றிட
நாக்கு சிவந்திட

இனிதே இன்பமுடன்
நடந்தேறியது
இளந்தம்பதிகளின்
சதாபிடேகம்!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

மை அழகு!

வீரமான
ஆண்’மை
அழகு!

அமைதியான
பெண்’மை’
அழகு!

அன்புடன்
அரவணைக்கும் தாய்’மை’
அழகு!

மைவிழி மயக்கம்
தரும் கண் ‘மை’
அழகு!

இளமை தரும்
கூந்தல் கரு’மை’
அழகு!

வயது தரும்
முது’மை’
அழகு!

மக்கட்செல்வத்தால்
வரும் பெரு’மை’
அழகு!

உறவில்
பெருந்தன்’மை’
அழகு!

இல்லறத்தில்
சகிப்புத்தன்’மை’
அழகு!

தோள் கொடுக்கும்
தோழ’மை’
அழகு!

இசை
தரும் இனி’மை’
அழகு!

நிழல் தரும்
குளு’மை’
அழகு!

தீமையை தராத
வாய்’மை’
அழகு!

எளியோர்க்கு
செய்யும் நன்’மை’
அழகு!

செல்வந்தர்க்கு
எளி’மை’
அழகு!

இல்லோர்க்கு கொடுக்கும்
வண்’மை’(கொடை)
அழகு!

மனம் தரும்
வலி’மை’
அழகு!

காதலில்
பொய்’மை’
அழகு!

வள்ளுவர் வகுத்த
பொய்யா’மை’
அழகு!

இயற்கை நல்கும்
பசு’மை’
அழகு!

சுகாதாரத்திற்கு
தூய்’மை’
அழகு!

கல்வி அகற்றும்
அறியா’மை’
அழகு!

பேச்சாளருக்கு
சொல்வன்’மை’
அழகு!

ஒளவை சொன்ன
வறு’மை’
அழகு!

வெற்றிக்கு
தாளாண்’மை’
அழகு!

செய்யும் தொழிலில்
வேளாண்’மை’
அழகு!

கம்பீரம் தரும்
தலை’மை’
அழகு!

நாட்டுக்கு
மேலாண்’மை’
அழகு!

பாராட்டுதலில்
அரு’மை’
அழகு!

என்றென்றும்
எப்பொழுதும்
உண்’மை’
அழகு!

என்றும் அழியாத
தமிழ் மொழி எழுதும்
உன் ‘மை’
அழகோ அழகு!!

-பிரியா பாஸ்கரன் 🖊 ✍ 🖊

விலைமாது!

‘மணிக்கு எவ்வளவு?
என்று தன் திறமைய
காண்பிப்பான்
விலை பேசும் வியாபாரி!

‘எம்மதமும் சம்மதம்’
என்ற உடன் படி(டு)க்கை
அமுல் படுத்துவான் உடனடியாக
சாதி கட்சித் தலைவன்!

பட்டப்பகலில் வீடு(விடுதி) புகுந்து
கொள்ளையடிப்பான்
சட்ட ஒழுங்கை
காக்கும் காவலன்!

உல்லாச பயணத்திற்க்கு
அழைப்பு விடுப்பான்
பெண்ணியம் பேசும்
பெண்ணியவாதி!

விலைமாது கைதானால்
விபச்சார வேட்டையில்
தலைப்புச் செய்தி!

உடன் கைதாகும்
“சதை திண்ணும்”
மிருகங்களுக்கு
எந்த தலைப்புச் செய்தியும்
வைப்பதில்லை
பத்திரிக்கையாளர்கள்!

மாதவிகளின்
பெண்கள்
கண்ணகியே ஆனாலும்
பட்டப் பெயர் என்னவோ
‘பலான’ப்பட்டவளின் பெண்!

‘வேசி’ என்று ஏசப்படும்
விலைமாது இல்லா
சமுதாயத்தை
உருவாக்கு!

பெண்ணியம் பேசாமலே
“ஆணுக்கு நிகர் பெண்”
சமுதாயம் உருவாகும்!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

எழுதுகோல்!

உன் எண்ணங்களுக்கு
உருவம் கொடுத்து
உயிரூட்டிடும்!

வெறுமையான வெற்றுத்தாளில்
பல வண்ணங்கள் இட்டு நிரப்பி
உணர்ச்சிகளை குவித்திடும்!

குனிந்து எழுதினாலும்
உன் உணர்வுகளை
நிமிர்ந்து நிறுத்திடும்!

குமர வேலின் கூர்மை போல்
உன் ‘கூர்’ எதிரிகளை தன் வரிகளால் குதறி எடுத்திடும்!

உன் ’மை’ பல கருமைகளைச் சுட்டிக்காட்டி உண்மைகளை
உலகுக்கு உணர்த்திடும்!

நீ உதிர்த்த கமுனை(மாதுளை) முத்துகள்
படிப்போரின் உணர்ச்சிகளை
வெளிக் கொணர்ந்திடும்!

உன் ‘முள்’ளில் மலரும் கவிதை
மலர்கள் மணம் வீசி மனதை
மலரச்செய்திடும்!

சத்தமின்றி யுத்தமிடும் உன் கூர்
‘முனை’கள் ஒய்வு பெறுவதில்லை
தன் இலக்கை அடைத்திடும் வரை!

தண்ணீருக்கு அணை போடாமல்
இருந்தால் நீர் நதியாக மாறும்
எழுத்துக்கு அணை போடாமல்
இருந்தால் அறிவு ஆற்றலாக பெருகும்!!

என் சிந்த்தனையை தூண்டும்
நெம்புகோலாக இருந்த எழுதுகோலே
எழுதி முடித்திட்டேன்
எழுந்து மடியாமலே!

-பிரியா பாஸ்கரன் ✍

தாலாட்டு!

ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ!

கார்த்திகை மாதத்தில் தீபமாய்
ஒளி வீச வந்தவனே கண்ணுறங்கு!
என் குலங்காக்க வந்த
கோமானே கண்ணுறங்கு!

பாட்டி தைத்த பட்டான பஞ்சு
மெத்தையிலே மெதுவாக கண்ணுறங்கு!
பாட்டன் செய்த நட வண்டிதனை
ஒய்யாரமாய் ஓட்டிடுவாய் கண்ணுறங்கு!

மாமன் தந்த வெள்ளிக் கிண்ணியிலே
அமுதை அருந்திடுவாய் கண்ணுறங்கு!
அத்தை கட்டிய அரைஞாண் கயிரை
அறுக்காமல் இருந்திடுவாய் கண்ணுறங்கு!

சொந்த பந்தங்களுடன் கூடிக்குலாவி
மகிழ்ந்திடுவாய் கண்ணுறங்கு!
உடன் பிறந்தோருடன் இறுதிவரை
ஒற்றுமையாய் ஒன்றிடுவாய் கண்ணுறங்கு!

மாதர்தம்மை மதித்து போற்றி
பாதுகாத்திடுவாய் கண்ணுறங்கு!
தவறுதனை தட்டி கேட்க
வேங்கையாக எழுந்திடுவாய் கண்ணுறங்கு!

தர்மத்தின் வழி நடந்து தலை
நிமிர்ந்து நின்றிடுவாய் கண்ணுறங்கு!
கடமை கண்ணியம் கட்டுபாடு கற்று
கற்பை காத்திடுவாய் கண்ணுறங்கு!

அன்னம் தரும் பூமிதனை பூப்போல
காத்திடுவாய் கண்ணுறங்கு!
பயன் தரும் பல காய்கனிகளை
செழிப்பாக வளர்திடுவாய் கண்ணுறங்கு!

வள்ளுவனை கற்று வையகம் போற்ற வாழ்ந்திடுவாய் கண்ணுறங்கு!
பார் போற்றும் பல்கலை கற்று
பட்டம் பெற்றிடுவாய் கண்ணுறங்கு!

செல்வச் செழிப்புடன் வளமான
நல்வாழ்வு பெற்றிடுவாய் கண்ணுறங்கு!!
மனித நேயத்துடன் எளியோர்க்கு
நன்மைகள் பல நல்கிடுவாய் கண்ணுறங்கு!

நோய் நொடி இல்லாமல்
நூறு ஆண்டு இருந்திடுவாய் கண்ணுறங்கு!
“பதினாறும் பெற்று பெறு வாழ்வு”
வாழ்ந்திடுவாய் கண்ணுறங்கு!

செந்தமிழ் கற்று சிறப்போடு
வாழ்ந்திடுவாய் கண்ணுறங்கு!
நான் காலம் சென்ற பிறகும் உனை
தமிழ்த்தாய் காத்திடுவாள் கண்ணுறங்கு!

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணே கண்மணியே கண்ணுறங்கு!!

-பிரியா பாஸ்கரன் 🎶

திருமண வாழ்த்து!

மழை ஓவியன்
மேகத்துடன
ஊடல் கொண்டு
ஆகாயத்தில்
ஆசையுடன்
தீட்டிய ஓவியம்
வானவில் – அதன்
வண்ணங்கள்
ஏழு!

அகிலத்திற்கு
ஒளி பாய்ச்சும்
அரணான ஞாயிறு
அவனில் இருந்து
ஒளி வாங்கி
குளிர் தரும்
திங்கள்
மற்றதைந்தும்
ஞாயிறுதனை சுற்றி
வரும் கோள்மீன்கள் – என
வாரத்தின் நாட்கள்
ஏழு!!

செவிக்கினிய
நாதத்தில்
சுருதி பிறந்து
ஸ்வரம் தந்த
இராகம்
தாள லயத்துடன்
இணைந்த
சரிகமபதநிச சுரம்
ஏழு!

ஆரோக்கியமாய்
குடும்ப பொறுப்புக்களை
பகிர்ந்து
ஆன்மீக சக்திகளை
வளர்த்து
நீதி வழியில் செல்வத்தை
ஈட்டி
பரஸ்பர அன்பு மரியாதை
நம்பிக்கையால்
அறிவு மகிழ்ச்சி நல்லிணக்கத்தை
பெற்று
நல்லொழுக்கமுள்ள வீர
குழந்தைகளை
ஈன்றெடுத்து
நீண்ட ஆயுளுடன்
ஒருவருக்கொருவர் உண்மையான
தோழர்களாக இருப்போம்
என திருமணத்தில்
எடுத்துவைக்கும்
அடிகள்
ஏழு!

இருமனம் கலந்து
திருமணம் நடந்து
இல்லறத்தில் இணைந்து
மகிழ்வில் திளைத்து
ஈறுடல் ஓருயிராகி
உயிர் ஈன்ற மழலையை
தொட்டிலிடும் நாள்
ஏழு!

விண்ணை தொடும்
பேரரசு கட்டிடம்
விளக்கொளியில் மின்னும்
ஈபிள் கோபுரம்
எல்லையை பாதுகாக்கும்
சீனப் பெருஞ்சுவர்
எழில்மிகு பாபிலோனா
தொங்கு தோட்டம்
பிரமிக்க வைக்கும்
பிரமீடு
சாய்ந்தாலும்
கம்பீரமாக நிற்கும்
பீசா கோபுரம்
காதல் சின்னம்
தாஜ் மகால் – ஆக
உலக அதிசயங்கள்
ஏழு!

பாரம்பரியமிகுந்த
பாரத நாடு இருக்கும்
ஆசியா
பறவைகளின் சொர்க்கமான
ஆஸ்திரேலியா
பல பசுமையான காடுகளை
கொண்ட ஆப்பிரிக்கா
வளமான அமெரிக்காவை
கொண்ட வட அமெரிக்கா
பணபலம் கொண்ட ஐரோப்பா
விண் தொடும் மலைகளையுடைய
தென் அமெரிக்கா
பணிக்கட்டிகளால் சூழ்ந்த
அண்டார்டிகா
ஆக கண்டங்கள்
ஏழு!

ஜைனம்
இந்து
இஸ்லாமியம்
யூதம்
கிறித்துவம்
மற்றும் பல
மதங்கள்
சொல்லும்
சொர்க்கம் ஏழு!

நம்மாழ்வார்
பாடிய
திருவாய்மொழியில்
மலைகள்
கடல்கள்
மேகங்கள்
ஏழு!

ஏழு என்றாலே
ஏகப்பட்ட நல்ல
எண்ணங்கள்
எண்ணத்தில்
எழ
“ஏழேழு ஜென்ம
சம்சார பந்தம்”
நிலைத்து இருக்க..

மங்கலத் திருநாளில்
மணமுடித்து
ஏழு அடிகளை
எடுத்து வைத்து
உறுதி பூண்டு
பல வண்ணங்களை
கொண்ட
வாழ்வுக்கு
இசை சேர்க்க
ராக மாளிகையாய்
செல்வ மணிகளை
ஈன்றெடுத்து
தொட்டிலிட்டு

அதிசயங்கள் பல கண்டு
எந்த கண்டத்தில்
வாழ்ந்தாலும்
மலைகள் கடல்கள்
பல கடந்து
முழுமுதற்க்
கடவுள் நம்
ஆதி நாதன்
பதம் போற்றி

சொர்க்கங்கள்
அனைத்தும்
கண்டு களித்து
ஏழேழு ஜென்மத்திலும்
மனமொத்த தம்பதிகளாய்
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன்!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

என் பாட்டி!

தம்பித் தங்கை
மச்சினன்
பெற்ற செல்வங்களை
தான் பெற்ற
செல்வங்களுடன்
வளர்த்து
கூட்டு குடும்பத்தை
நிமிர்த்திட்டாள்!

பாட்டன் காலம்
சென்ற பின்னே
பாரினை பார்க்க
வந்த என்னை
பாசத்தோடு
தூக்கி
பாந்தமாக
அனைத்திட்டாள்!

பல வண்ண
ஆடைகள் அணிவித்து
தலைவாரி
பூச்சூட்டி
தங்க ஆபரணங்கள்
பூட்டி அழகு
பார்த்தாள்!

பதமாக
வெல்லப்
பாகினை
பச்சரிசியுடன்
நெய்சேர்த்துக்
கூட்டி
நாவில் நீருறும்
அதிரசத்தை
தட்டிடுவாள்!

தட்டிய அதிரசத்தை
சுட்டெடுத்து
கண் மலர்ந்து
கன்னக்குழி விழுந்து
பொக்கை வாய் மலர்ந்து
“வழி மேல் விழி வைத்து”
எனைக் காண
காத்திருப்பாள்!

காத்திருந்து
கண்டு விட்டு
கணக்கில்லாமல்
அதிரசத்தை
ஊட்டி விட்டு
ஜீரணம் ஆக
கை வைத்தியம்
செய்திடுவாள்!

“குட்டி” என்றழைத்து
பழைய கதைகளை
கதைத்து
குட்டி தூக்கம்
போட வைத்து
உச்சி
முகர்ந்திடுவாள்!

தனி மனிஷியாய்
பசுமையாய்
விவசாயம்
செய்து
முப்போகம்
விளைவித்து
தலை நிமிர்ந்து
நின்றிடுவாள்!

தன் வயதொத்த
தோழிகள்
துவண்டு போனால்
தோள் சாய்க்க
தோள் கொடுத்து
அன்பாக பேசி
அரவணைத்து
தேற்றிடுவாள்!

எளியோரை
தேற்றி
அகம் மகிழ
இல்லோர்க்கு
கொடுத்து
தன்னால் முடிந்த
தன்னார்வ தொண்டு
செய்திடுவாள்!

மகளுக்கு மகளான
எனக்கு
மணமான போது
குத்து விளக்கு
கொடுத்து
குலம் விளங்கும்
ஒளியாய் இருக்க
கற்றுக்
கொடுத்திட்டாள்!

நான் பிள்ளை
பேறு பெற
தள்ளாத வயதில்
உண்ணாமல்
விரதமிருந்து
அம்மனுக்கு
மாவிளக்கு
போட்டிடுவாள்!

படிக்காத
மேதையாய்
பாசம் நேசம்
மனிதாபிமானம்
உழைப்பு
தன்னம்பிக்கை
தன்னார்வ தொண்டு என
தன்னையறியாமலே
எனக்கு
ப(பா)ல பாடம்
கற்றுவித்தாள்!

அடுத்த பிறவியில்
நீ எனக்கு
மகனா(ளா)க
பிறந்து
நான் உனைச்
சீராட்ட வேண்டும்
எனதருமை பாட்டியே!
என எல்லாம் அறிந்த
முக்குடையானை
அருகனை
ஆதி பகவனை
நான்
வேண்டுகிறேன்!

-பிரியா பாஸ்கரன் 😀