விடியல்!

முல்லையாய்ச் சிரித்து
மல்லிகையாய் மணம் வீசி
சம்பங்கியின் மணத்துடன்
ரோசாவாய் மலர்ந்து
சூரியகாந்தியாய்
கதிரவனை நோக்கி
காத்திருந்தேன்..

ஒவ்வொரு நாளும்
ஒரு புதிய நாளாக
என் நாளும் பொன்னாளக
இத்திருநாள் நன்னாளாக
மலரும் என்ற
நம்பிக்கையுடன்!!

-பிரியா பாஸ்கரன் 😀

கருமை!

மண்ணிற்க்கு
மணதிற்க்கு
இனிய
மழைத்தோழியை
தரும்
கார்மேகம்
கருப்பு!

பெண்மைக்கு
அழகு
சேர்க்கும்
பட்டான
கார்கூந்தல்
கருப்பு!

மங்கையின்
மைவிழி
மயக்கம்
தரும்
கண் மை
கருப்பு!

வண்ண மயில்
கோலம்
வானவில்
வர்ண ஜாலம்
கண்டு களிக்கும்
கண்விழிகள்
கருப்பு!

இனிய குரலில்
இலவச
இசை மழை
பொழியும்
கானக் குயில்
கருப்பு!

விலை உயர்ந்த
ஆபரணங்களில்
ரத்தினமாக
அழகுக்கு அழகு
சேர்க்கும்
வைரம்
கருப்பு!

ருசித்து புசிக்கும்
கருப்பட்டி
வெல்லம்
எள்ளுருண்டை
காந்தல் உப்புமா
கருப்பு!

ஒத்தத் தலைவலி
போக்க
தனிமையை
நாடும்
அறையின்
இருள்
கருப்பு!

ஒய்யாரமாய்
ஓய்வெடுத்து
படுத்துறக்கும்
இரவின்
இருட்டு
கருப்பு!

கராத்தே கலையில்
அடிப்படை
நுணுக்கம்
திறமை
ஒழுக்கம்
கற்றதை
நிர்ணயிக்கும்
பட்டை
கருப்பு!

ஓவியக்
கலைஞனின்
கை வண்ணத்தில்
முதன்மை
வண்ணங்களை
கலந்தால்
வரும் நிறம்
கருப்பு!

நானோ
விஞ்ஞானி
ஆராய்ச்சிக்கு
பயன்படுத்தும்
கார்பன்
கருப்பு!

பாரினில்
பட்டம் பெற்று
சட்டம் காக்கும்
நீதிமான்கள்
அங்கி
கருப்பு!

காலம்
சென்றோரின்
கண்ணீர்
அஞ்சலி
சுவரொட்டி
கருப்பு!

திதியன்று
முன்னோர்களை
நினைத்து
அன்னமிட்டு உண்ண
அழைக்கும்
காகம்
கருப்பு!

அயல் நாட்டில்
கல்யாணத்தில்
இருந்து
கருமாதி வரை
உடுத்தும்
உடுப்பு
(Tuxedo)
கருப்பு!

எகிப்திய
பேரழகி
கிளியோபாட்ரா
எழிலின்
நிறம்
கருப்பு!

எண்ணங்கள்
எதிப்ப்புகள்
போராட்டங்களின்
சக்தியை
கத்தியின்றி
ரத்தமின்றி
வெளிப்படுத்தும்
கொடி
கருப்பு!

மாயக்கலை
மன்னன்
மாதவன்
மதுசூதனக்
கண்ணண்
கருப்பு!

யார் விட்டுச்
சென்றாலும்
நம்மை விட்டுச்
செல்லாமல்
தொடரும்
நிழல்
கருப்பு!

இத்தனை
அழகு..
பெருமை..
சுவை..
சக்தி..
அறிவியல்..
கடவுள்..
குணங்கள்
கருமைக்கு
இருந்தாலும்..

நாட்டில்
மக்களுக்கிடையே
நிறவெறி
கொடுமை
வன்மை
தனிமை
தலைவிரித்தாடுவது
ஏனோ?

கல்யாண
சந்தையில்
கருப்பழகி(கனை)களை
கருத்தில்
கொள்ளாது
மன அழகு மறந்து
நிறத்திற்கு
விலை பேசுவது
ஏனோ?

நிறம் பார்த்து
மதிப்பு
கொடுக்கும்
மனிதனின்
மணதில்
கருமை
படர்ந்ததாலோ?

வீட்டில்
குழந்தைகளிடம்
நிறத்தை
விமர்ச்சித்து
ஒப்பிடும்
குணத்தை
ஒழித்தால்..

நாட்டில்
மக்களிடையே
நிலவும்
நிறவெறி
கொடுமை
மடமை
ஒழிந்துவிடாதோ?

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

பார்வைகள் பலவிதம்!

குறிப்பு:

வாடகைய்த்தாய், ஏன் பெண்கள் மெத்த படித்த ஆண் மகனை திருமணம் செய்ய
பார்க்கிறார்கள், விவாகரத்து, அடிமைகளாய் வெளி சென்று வேலை
செய்தல், அதனால் பிள்ளைகள் துரித உணவு உண்கிறார்கள்,
வெளி நாடு வாழ் பெண்கள்
உதட்டு சாயம் பூசிக்கொள்கிறார்கள் என ஆதங்க பட்டவரின் பார்வைக்கு
என்னுடைய பதிவு…

உடல் ஆரோக்கியம் இருந்தும்
கருத்தரிக்க இயலவில்லையென
கண்ணீர் வடித்த காரிகைக்கு
கண்ணாளன் கண்ட தீர்வு
வாடகைத்தாய்!!

வறுமையின் காரணத்தினாலோ..
வாழ்வின் ஏற்ற இறக்கத்தினாலோ..
இக்கால குந்தி தேவியாய்
மகவை ஈன்றேடுத்து
வசந்தத்தை வீசச்செய்தால் மற்ற
மங்கையரின் வாழ்வுதனிலே!!

மெத்த படித்த
அன்னை அவளின் கூற்றில்
உண்மை இருந்தாலும்
ஒத்த படித்த தந்தையே
“ படித்த திமிர்” பட்டம்
கொடுத்தால்..
கண்ணி மகள் மணம்
இன்னும்
மெத்த படித்தவனை தேடுவது கூட
இயல்புதானே!!

இருமனம் கலந்து..
திருமணம் நடந்து..
இருவரும் சமம் என்ற
உறுதியை பூண்டு..
விட்டு கொடுத்து..
கட்டி கொண்டு வாழ்ந்தால்..
திருமணம் இரத்தென்ற வார்த்தையையே
“இரத்து” ஆகிவிடும் அல்லவா?

கைக்கட்டி வேலைக்கு
வெளியே சென்றாலே
அனைவரும் அடிமைளே..
இதில்
“ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன எல்லாம்
ஓர் இனம் தான்” என்ற
கவிஞர் வைரமுத்து
வரிகளை நினைத்து..

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அனைத்தையையும் பின்பற்றி
வெளி சென்று
அடிமைகளாய் சில நேரங்களில்
பணியாற்றினாலும்
அடக்கமாய், அமைதியாய்
நினனத்ததை நிறைவேற்றும்
மாதர்தம்மை மதிப்போம்!

ஊருக்கே ராணி ஆனாலும்..
“லொக்கு லொக்கு “ இரும்பும் தேவனுக்கு..
சூடான பாலுடன் மிளகு மஞ்சள்
கலந்து கொடுக்கும் தேவியாய்..
பூச்சிகொல்லி மருந்து இல்லாத
காய் கனிகளை பார்த்து பார்த்து வாங்கி சுவையுடன் சமைத்து சூடாக பறிமாறும்
சேவகியாய்..
வயிற்று வலி தலைவலி என்று கதறும் மக்களுக்கு வைத்தியம் செய்யும்
செவிலியாய்..
இருப்பவளும் இவளே!

அயல் நாடு வாழ் பெண்டிர்..
“ஊரோடு ஒத்து வாழ்” என்பதை பின்பற்றி..
உதட்டுச்சாயம் பூசி வெளி வேசம்
போட்டாலும்..
தைத்திருநாளில் தழைய தழைய
புடவை கட்டி பொட்டிட்டு
கலாச்சாரத்தை கடைப்பிடிப்பவளும்
இக்கால பெண்டீரே!!

சிவனுக்கு சக்தியாய்..
கணபதி கந்தனுக்குத் தாயாய்..
காளி, தாரா, திரிபுரசுந்தரி,
புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா,
தூமாவதி, பகளாமுகி, மாதங்கி,
கமலாத்மிகா ஆகிய பத்து அவதாரங்களை எடுத்த
உமையாளின் வழிதடத்தை
பின்பற்றி..

பல அவதாரங்களை
இப்பிறவியில் எடுத்து
“முயன்றால் முடியாதது இல்லை”
என்று பின்பற்றும் மாதர்களை
புகழ வேண்டாம்..
போற்ற வேண்டாம்..
சகமனிஷியாய் மதிக்கலாம்..
நாம் அனைவரும்!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

தோழனின் நட்பு!

பார்த்த முதல் நாளில்
சண்டையிட்டு பிறகு
பழம்விட்ட
ஆரம்பித்த நட்பு
காக்கா கடி கடித்து
கடலை மிட்டாய்
பகிர்ந்ததில் இருகியது!

போட்டி போட்டு
படித்தாலும்
மதிப்பெண்கள் வந்தவுடன்
பொறாமையின்றி
மகிழ்ச்சியாய்
கொட்டமடித்ததில்
அன்பு வளர்ந்தது!

இருவரில் ஒருவர்
வகுப்புக்கு வரவில்லை
என்றதும்
“ அய்யோ, உடம்பு
சரியில்லையோ?”
என மனம்
தவிக்கும் தவிப்பில்
பாசம் துளிர்த்தது!

கருத்து வேறுபாடு
வந்து அடித்து கொண்டாலும்
நான் தடுக்கி விழுந்தால்
துடித்து தோள் பற்றி
கைப்பிடித்து நிறுத்தியதில்
தூணாய் தாங்கி இருக்கும்
உறுதி இருந்தது!

மாதவிடாய் நாள்களில்
உடலும் உள்ளமும்
சோர்வடையும் போது
இளநீர் தந்து
அரவனைத்து ஆறுதல்
கூறுகையில்
அன்னையை
உணர முடிந்தது!

தவறே செய்தாலும்
மற்றவரிடம் விட்டு கொடுக்காமல்
தாங்கி பேசி
தனிமையில் தவறை
சுட்டி காட்டி
திருத்தும் போது
ஆசானை பார்க்க முடிந்தது!

விளையாடும் மும்முரத்தில்
தோளில் இருந்து
ஆடை விலகினால்
சிறு கண்டிப்புடன்
சீர் செய்ய சொல்லும் போது
நட்பின் கண்ணியத்தை
காண முடிந்தது!!

பேருந்து பயணத்தில்
இடி மன்னர்களிடமிருந்து
போக்கிரிகளின் வம்பு
தும்புகளில் இருந்து
காக்கும் போது
பாதுகாவலனாய்
இருக்கும் பாங்கு
தெரிந்தது!

திருமணத்திற்க்கு மணாளனை
தேடும் போது
“இரு மனங்கள் இணைவது
மட்டும் திருமணம் அல்ல
இரு குடும்பங்கள் இணைவதும்”
முக்கியமே என்று
துப்பறியும் வேலை
பல செய்ததில்
தந்தையின் தவிப்பை
உணர முடிந்தது!

கல்யாணத்தின் போது
என்னவர் எனக்கு
இது பிடிக்கும்
இது பிடிக்காது எனும் போது
அப்படியா!!
என ஆச்சரியப்பட்டு
அவரை அகமகிழ செய்த போது
இருவருக்குள்ளும்
ஆரோக்கியமான உறவு
மலர்ந்தது!

மூன்று தசாப்தத்திற்குப்
பிறகும் அவன் குடும்பமும்
என் குடும்பமும் வெகு தொலைவில்
வசித்தாலும் நம் குடும்பம்
என்ற பந்தத்திற்குள் பிணைந்து
மீண்டும் எப்பொழுது
சந்திப்போம் என உணர்வை
கொடுத்தபோது
எங்கள் நட்பின்
ஆழத்தை ஆனந்தத்தை
சுவாசிக்க முடிந்தது!

நான் எங்கு சென்றாலும்
நீ எங்கு இருந்தாலும்
இன்று போல் என்றும்
மாறாத அன்புடன்
வற்றாத பாசத்துடன்
அழியாமல் நிலைத்து
நிற்கும் நம் நட்பை
நினைக்கும் போது
கர்வமாய் இருக்கிறது
என் தோழனே!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

மறக்குமா?

ரயிலின் ஓசை..
பேருந்தின் சத்தம்.
மிதிவண்டி மணியின் ஒலி..
இருசக்கர வாகனத்தின் இரைச்சல்..
மாட்டுவண்டியின் தாலாட்டு..

மழையின் முத்தம்..
மண் வாசனை..
வண்ணத்துப்பூச்சியின் ரிங்காரம்..
முற்றம் வைத்த வீடு..
தென்றல் காற்று..

ஆடுகளின் மே மே சத்தம்..
காளையின் வீரம்..
பசுவின் பாசம்..
கன்றின் உரசல்..
வறட்டியின் வாசம்..

மார்கழி மாத பஜனை..
பெருமாள் கோயில் புளியோதரை..
தெருதோரும் ரங்கோலி..
பரங்கி பூவின் சிரிப்பு..
பச்சரிசி மாக்கோலம்..

பாலாற்று நீர்..
ஆற்று நீச்சல்..
கிணற்று குளியல்..
வாய்க்கால் பாட்டு..
வரப்பு ஓட்டம்..

கரும்பின் இனிப்பு..
திருட்டு மாங்கா சுவை..
புளியம்பழ புளிப்பு..
சுட்ட சோளம்..
அவித்த கடலை..
குளிர்ந்த நுங்கு..

வெள்ளி கிழமை எண்ணெய் குளியல்..
தாத்தா கொடுத்த மரபொம்மை..
பாட்டியின் உருண்டை சோறு..
வெட்டிவேர் பானை தண்ணீர்..
கொட்டகை சினிமா..
கயிற்று கட்டில் உறக்கம்..

“பழையன கழிந்து புதியன
புகுத்தும் “ போகி..
தைத்திருநாள்
பொங்கலோ பொங்கல் கூவல்..
மாட்டுப் பொங்கல்
மந்தைவெளி காளைகளின்
அலங்கார அணிவகுப்பு..
காணூம் பொங்கல்
ஜல்லிகட்டு..
சொந்தம்(மாகிய) பந்தம்
காலில் விழுந்து காசாக
பெற்ற பரிசு பணம்..

பாவடைத் தாவணி நளினம்..
கரு கரு நீண்ட கூந்தல்..
மல்லிகையின் மணம்..
மருதாணி சிவப்பு..
கொலுசின் ஜல் ஜல் ஒலி..

மாரியம்மன் திருவிழா..
அம்மனின் அழகு முகம்..
பலவிதமான கொழுக்கட்டை..
பொங்கல் படைத்தல்..
பூ(தீ) மிதித்தல்..
குலவை எழுப்பி கும்மியடித்தல்..

பொய்க்கால் குதிரை ஆட்டம்..
வண்ண மயிலாட்டம்..
கண் கவர் ஒயிலாட்டம்..
கலகலப்பான கரகாட்டம்..
விறுவிறுப்பான வில்லு பாட்டு..
அருமையான மேடை நாடகம்..

திருவிழா கடைகண்ணி..
வண்ண வண்ண கண்ணாடி வளைவி..
ரங்கராட்டினம் சுற்றல்..
குச்சு பனிச் சுவை
தோழிகளுடன் கிணுகிணுப் பேச்சு..
அத்தை பையனுடன் அரட்டை..

அனைத்தும்
மனதில் நிலைத்து..
மகிழ்வில் திளைத்து..
நினைவில் நிறைந்து..
இருக்கும்
என் காலம் மறையும் வரை!!

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” – திரு மந்திரம்!
“யான் பெற்ற இன்பம் பெறுக
நம் பிள்ளைகள்” – என் மந்திரம்!

நம் மாந்தர்களுடன்
கோடை விடுமுறைக்கு
சென்றிடுவோம் நம் வேர்
தேடி!
நம் இன்பத்தை
பகிர்ந்திடுவோம் நம் மொழி
நாடி!
உறவினருடன்
களித்திடுவோம் ஒன்று
கூடி!

_பிரியா பாஸ்கரன் 🤗🙏🏾

நிதர்சனம்!

விழித்துப்பார்த்தேன்
தெரிந்தது கனவென்று…
தேடிப்பார்த்தேன்
புரிந்தது தொலைத்துவிட்டேனென்று…
கதறிப்பார்த்தேன்
இழந்தது நட்பென்று…
தோற்றுவிட்டேன்
துணையிடம்..
வாழ்க்கையில்
ஜெயித்துவிட்டேனென்று!!

-பிரியா பாஸ்கரன் 💞

ஒருபெண்ணின் வேண்டுதல்!

பாடி களித்து பறந்து
வந்த பூஞ்சிட்டை
மெல்லிடை வஞ்சி இவளை
வஞ்சம் தீர்க்க காத்திருந்த
காமுகன்!

மதயானை பலங்கொண்டு
மலர்ந்த மொட்டை
கசக்கி முகர்ந்து
உருக்குலைத்த
கிராதகன்!

“சகதி தெறித்துவிட்டதாலே
சாக்கடை ஆவதில்லையென”
மனம் வெதும்பி
சட்டத்தின் உதவியை
நாடினாள் மங்கை!

“பணம் பாதாளம் வரை பாய்ந்து”
சட்டத்தின் சல்லடையில்
சாட்சிகள் மெளனமாகி
வெளியேறினான் வெறிபிடித்த
ஓநாய்!

ஓய்ந்துவிட்ட காரிகையை
கேள்விகேட்டு ஓயவில்லை
உறவினர்கள்..
அவள் கல்லறை
செல்லும்வரை!!

பெண்ணாண்ட
சண்டாளனை
வேரோடு சாய்க்க
மனக்குமுறலில்
மண்டியிட்டு
வேண்டுகிறேன்..

காட்டுமிராண்டி
காமவெறியனின்
தாயாக இருந்தால்
அவன் கழுத்தறுத்து
கொன்று புதைத்திடு!
தாரமாக இருந்தால்
அவன் ஆண்குறியை
அறுத்தெறிந்து
எரித்திடு!

பிரம்மனே!
பெண்னை
படைத்திடு …
பாதகர்களை பந்தாடும்
சக்தியாய்!

சிங்கவதனனே!
காத்திடும் கழுவை (சூலம்)
காட்டிவிடு…
இக்கால
இரணியனிடமிருந்து!

அம்மையப்பனே!
அழித்திடும் ஆளுமையை
கொடுத்திடு…
இப்பெண்ணவளுக்கு!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

தினக்கூலி!!

சீப்புச் சீப்பாக
வாழை!
குலை குலயாக
திராட்சை!
கொத்துக் கொத்தாக
கொய்யா!
சுவைச் சுவையான
மாங்கா!

விடிய விடிய எழுந்து..
கூடை கூடையாக பறித்து..
பார்த்து பார்த்து அடுக்கி..
கட்டுக் கட்டாக கட்டி..
வரிசை வரிசையாக ஏற்றினான்
வாகனத்தில்..
ஏற்றுமதி செய்ய!!

வாங்கி சுவைக்கத்தான்
வழியில்லை வறுமையில் உழல்பவனுக்கு!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

சிப்பாய்!

உதிரத்தை தாய்ப்பாலாக்கி
ஊட்டினாள்
தாய் தன் மகவைக்காக்க!!

தன் உயிரை உதிரமாக்கி
ஊட்டினான்(ள்)

சிப்பாய் தன் நாட்டைக்காக்க!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

அப்பா!

தனக்கென்று சேர்க்காமல்

தன் சந்ததிக்கென்றே

ஆயிரமாண்டு திட்டதை

அறிமுகப்படுத்தி

சேமிக்கும் வங்கி!!