
தூர்ந்து போன நினைவுக்கிணறு…
My thoughts and lyrics

சேலம் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை நடத்திய சுதந்திர தின விழா கவிதைப் போட்டியில் விருது பெற்றுத் தந்த கவிதை…
அச்சமில்லை மனமே!
கானகத்தை அழித்து கட்டிடங்கள் கட்டுவதைத் தடுத்து
புள்ளி மான்கள் துள்ளித்திரிந்து ஓடிட வழி வித்திடு
விளைச்சல் நிலங்களைக் கூறு போட்டு விற்று
விவசாயத்தை அழிக்கும் வேலை செய்பவரை ஒழித்திடு
கடலலையில் கால் நனைத்து அலைகளின் ஆனந்தத்தைக்
கால வரையற்று கண்டுகளிக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கிடு
தலைவனென்று மேடையேறிப் பொய் வாக்குறுதி முழங்கும் பொழுது
தலை தட்டிக் கேட்கத் துணிந்திடு
பெண்ணியத்தை தன்வீட்டில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு
பெண்ணியம் பேசும் பேச்சாளர்களை எதிர்த்துச் சண்டையிடு
ஏகாந்தத்தில் நிலவோடு தனித்திருக்க ஏக்கம் கொண்டால்
எள்ளளவும் பயம் கொள்ளாமல் நடுநிசியில் நடைபோட்டிடு
வண்ணக் கனவுகளை நீல வானின் மை கொண்டு
வெண் மேகக் காகிதத்தில் தீட்ட வானிடம் கேட்க விரைந்திடு
சிறகடித்துப் பறந்து பந்தத்தைக் காணச்
சிறகுகளைக் கடன்கேட்டு சிட்டுக்குருவியிடம் உறவாடிடு
எண்ணியதை எண்ணியபடி செயலாற்றி
உள்ளதை உள்ளபடி எங்கும் உரைத்திடு
“சுதந்திரம் எனது பிறப்புரிமை”
அச்சமில்லை மனமே… அச்சமில்லை மனமே… என
மார்தட்டி முழங்கிடு..!
~ பிரியா பாஸ்கரன்
முடிந்தது தேர்வு
விடுமுறையில் மெல்ல எழுகிறது
பெரும் பதட்டம்
மீண்டும் ஒரு தேர்வு
பயிற்சி வகுப்பு
உடனே தொடங்க
மனங்களின் மீது படிகிறது
சுமை
தேடித்தேடிப் படித்துத்
தேர்வெழுதி முடிவு வர
தொகைதொகையாய்க் கொல்லப்பட்ட
கனவுகள்
நசியுண்டு கதறுகிறது
மாண்டுபோகிறான் மனமுடைந்து
குருதி வழிந்தோட
உடற்கூராய்வின் போது
புன்னகைத்துக் கேட்கிறான்
இன்று நான்.. நாளை…?
~பிரியா பாஸ்கரன், வெம்பாக்கம்


உன்னைப் புரிந்து
கொள்ளுவது கடினம்தான்.
அவ்வாறில்லை நீ எனக்காய்
எழுதின கவிதைகள்.
நெடுந்தூரப் பயணத்தில்
தேன் கொணரும்
தேனீயைப் போல் பயணிக்கிறது
உன் கவிதைக்குள் என் மனம்.
சாதாரண சொற்கள் தான்
நீ அடுக்கி வடித்த அழகில்
பிரம்மன் படைத்த
அழகு வந்துவிடுகிறது.
எழுதிப் பகிர்ந்த
ஒவ்வொரு வரிகளிலும்
தூண்டிலில் சிக்கிய மீனாக
சிக்கிக்கொண்டு
தவிக்கிறது மனது.
காற்றில் திசைமாறும்
காற்றாடியாய்
நீயோ மாறிவிட்டாய்.
நீ இல்லாத எதுவும்
நிசமில்லை என்றாகும் பொழுது
புதிராய் ஆகிறது வாழ்க்கை.
நிலவில்லா நள்ளிரவிலும்
புதிருக்கு விடைதேடி அலைய
மின்மினிப் பூச்சியாய் ஒளிர்கிறது
உன் கவிதைகள்
என் நிழலுக்குத் துணையாய்.
~ பிரியா பாஸ்கரன்

தவறவிட்டத் தருணம்…
காலையில் சன்னலில் கம்பி வழியாக
சாலையைப் பார்க்கச் சிருங்கார – சோலையில்
வானம் இரவு வசமாகத் தூவியதால்
ஆன துளிகள் அழகாக – தானே
இலையிலே உட்கார்ந்தே இன்னிசை சிந்த
அலைபோல தீண்டி அகத்தில் – கலக்க
நினைவு படுத்தியது நான்தவற விட்ட
நனவின் தருண மென…
~ பிரியமுடன் பிரியா

புலரும் இனிய பொழுதினில் அன்பால்
அலரும் கனவும் அகத்தில் – மலர;
விழியில் நிறைத்து விழித்தே உறங்கும்
அழகு தருண மது…
~பிரியமுடன் பிரியா 💕
அழுக்கு நீங்கி
பளிச்சிடும் சாலைகள்
நீரை வாரியிறைத்து
ஓடும் வாகனங்கள்
மூட முடியாத
பேருந்து சன்னல்
முகத்தில் பட்டு
முத்தமிடும் நேசம்
நனைந்து அழகாய்
சிரிக்கும் மரங்கள்
சிறகைப் படபடத்துச்
சிலுப்பும் பறவைகள்
காற்றில் தலைதிருப்பிக்
கோபிக்கும் குடைகள்
கோணிப்பையைக் குடையாக்கி
மகிழும் விவசாயிகள்
குதித்து கப்பல்விட்டுக்
குதுகலிக்கும் குழந்தைகள்
அதட்டி முந்தானையால்
தலைதுவட்டும் அம்மாக்கள்
பட்டென அணைந்து
ஓய்வெடுக்கும் மின்சாரம்
மின்மினியாய் ஒளிரும்
மண்ணெண்யெய் விளக்கு
இவற்றை
இரசிக்கும் நான்
என்னை இரசிக்கும்
எனதருமை மழை..!
~பிரியமுடன் பிரியா
My thoughts and lyrics
A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.
My thoughts and lyrics
Longreads : The best longform stories on the web
The latest news on WordPress.com and the WordPress community.