எதிர் எதிர் இருக்கையில்
இருக்கின்றோம்
சன்னல்களுக்கு வெளியே
கைக்கெட்டும் வானம்
வேகமெடுக்கும் இரயிலில்
விட்டு விட்டுப் போகிறது
மின்சாரக் கம்பங்கள்

வெயில் குடையின்றி நனைகிறது
மழை முக்காடின்றி காய்கிறது

மனதிற்கெட்டிய தூரம் வரை
மனப் பதிவுகளை
விரல்களைப் பின்னியபடி
மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள்

தேடலின் சுகத்தை அடைவதற்குள்
நிறுத்தமொன்றில் ஏறிய
பயணிகளால் முற்றுப் பெறுகிறது
விடைகாணா தேடல்கள்

நினைவுகளின் பேரகழிக்குள்
விடுதலையென்ற ஒன்று
விழிகளுக்குள் முளைத்துக்கொண்டிருந்தன

~ ப்ரியா பாஸ்கரன்

எழும்போதே முத்தங்கள்
கன்னங்களில்

அப்படி இப்படியெனக் கடக்கையிலெல்லாம்
அணைப்பின் முத்தம்

பூனைக்குட்டியாய்
உரசிப் பதிக்கும் எச்சில் முத்தம்

தகிக்கும் வெக்கையின் உச்சம்
தணிக்கும் குளிர்ந்த கூழாய்
சில்லென்ற முத்தம்

வாடைக் காற்றில் பறக்கும் இறகாய் முத்தம்

எத்தனைக் கொடுத்தாலும்
தீராத வட்டிக் கடனாய்
நிலுவையில் ஓராயிர முத்தங்கள்

எனக்கும் அன்பு
மகளுக்குமிடையேயான
முத்தங்கள்
ஆயுட் கால குத்தகைக்கு
என்றும்.

~ ப்ரியா பாஸ்கரன்

நீல நிறப் புன்னகை

அம்மாவின் பிரத்தியேக
வியர்வை மணக்கும் பருத்திப் புடவை
மடிதனில் படுத்துறங்க
தம்பியுடன் போட்டியிட

அன்னப்பறவை இறகினும்
மென்மையான
இட்டலிகளை உண்ணத்தரும் தமக்கையின்
கைமணத்திற்கு அடிமையாக

நல்லாச் சாப்பிடுமா என்றதட்டி
இன்னுமொரு வாயென
ஊட்டும் தந்தையின் அன்பில்
நெகிழ்ந்துருக

எதைக் கேட்டாலும்
சல்லடை போட்டுத் தேடி
வாங்கித்தரும் அண்ணாவின் பாசத்தில்
திக்குமுக்காட

தோழியாய் தோள் தாங்கி
கோபமாய்க் கொஞ்சிப்பேசி
அர்ச்சனையில் அழகாய்த் திட்டி
மனக்கவலை போக்கும் சின்னக்காவின்
நேசத்தில் நனைய

குட்டிம்மா செல்லம்
எப்படியிருக்கயென
உச்சிமோந்து முத்தமிட்டு
திருஷ்டி கழித்துச் சிரிக்கும்
பாட்டியின் சுருக்கங்கள்
நிறைந்த கன்னக்குழி அன்பில்
நீந்த

கடல்கடந்து வாழும் நான்
ஆண்டு பல கடந்து
தாய்வீட்டிற்குச் சென்றபொழுதினில்
வண்ணத்தால் கொள்ளைகொண்டு
வாசத்தால் கைது செய்யும்
என்னோடு வளர்ந்த
அனிச்சம் பூவின்
நீல நிறப் புன்னகை வரவேற்பில்
மீண்டும் குழந்தையாகிறேன்.

~ ப்ரியா பாஸ்கரன்

அச்சமும் துயரும் வியாபித்துப் படர்ந்த
நீண்ட உறங்காத நினைவுகள்

சலூனுக்குச் செல்லும் முன் பத்து முறையும்
கழனிக்குச் செல்லும் முன்
இருபது தடவையும்
குளியலறைக்குச் செல்லும் முன்
நூறு வாட்டியும்
தகவல் சொல்லும் அப்பா

விழிக்காத உறக்கத்திற்குச்
செல்லும் பொழுது ஏனோ மறந்துவிட்டாய்

நம்மிடையேயான உரையாடல்கள்
ஒருவழிச் பாதையாகிவிட்டதேயென்று
கண்ணீருடன் சண்டையிடுகிறேன்

அப்படி இல்லையென மனதோடு
நன்று பேசுகிறது
எனக்கேயான
அப்பாவின் ஒரு துளி ஆன்மா

~ ப்ரியா பாஸ்கரன்