நையப்புடை…


பொதிகை தமிழ் அறக்கட்டளை மற்றும் ழகரம் வெளியீடு இணைந்து நடத்தும் இணைய வழிப்பன்னாட்டுக் கவியரங்கத்தில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கவிஞர் பேரா மற்றும் அவருடன் இணைந்து ஒருங்கிணைக்கும் அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள். மற்றும் என்னுடன் பங்கேற்கும் சக கவிஞர்களுக்கும், நேரலையில் கண்டு களிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.


எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு
**பாரதியின் உள்ளொளி… நையப் புடை..**

அகிலத்தில் பாலியல் கொடுமையைத் தடுத்திடஅனலிலிட்ட புழுவெனத் துடிக்கப் பாவிகளை நையப் புடைத்திடு


வலியோரை எதிர்த்து வீர முழக்கமிடவீறுகொண்டு எழுந்து அச்சம்தனை நையப் புடைத்திடு


யார் கொடுத்தார் உரிமை அதனைத் தட்டிப் பறிக்க எனக் கேட்டிட
யாவரும் சமமே என்றுரைத்துத் தாழ்வு மனப்பான்மையை நையப் புடைத்திடு


மனித நேயம் போற்றிக் காத்திடமக்களிடையே நிலவும் சாதியை நையப் புடைத்திடு


நாட்டில் அமைதி நிலைத்து நின்றிடநாசக்காரரின் வன்முறையை நையப் புடைத்திடு


புகழ் போதையிருந்து மனம் தெளிந்திட
பொறாமை குணத்தினை நையப் புடைத்திடு


விரலிடுக்கில் நழுவும் வாகையை அடைந்திட
விரைந்து செயலாற்றி தோல்வியை நையப் புடைத்திடு


ஆணவம் கொண்டு ஆடிடும் மனதை அடக்கி வைத்திட அகத்திலிருக்கும் அகங்காரத்தை நையப் புடைத்திடு


சிந்தனை மேம்பட்டுச் சிறப்புடன் வாழ்ந்திட
சாத்தானாயிருக்கும் சோர்வை நையப் புடைத்திடு


உழைப்பைப் போற்றி உள்ளம் மகிழ்ந்து வாழ்ந்திடஉடும்பாய்ப் பற்றும் சோம்பேறித் தனத்தை நையப் புடைத்திடு


சாதிக்கப் பிறந்தோர் என்றதனை மனதில் விதைத்திட
சான்றோனாவதைத் தடுக்கும் அறியாமையை நையப் புடைத்திடு


செய்யும் செயலில் நேர்மை வெளிப்பட
சாகசம் புரியும் வஞ்சம்தனை நையப் புடைத்திடு


நல்வழியில் நின்று அறம் புரிந்திடநீதியைக் குலைக்கும் மன மாசுதனை நையப் புடைத்திடு


பெண்ணாய்ப் பிறந்தமைக்கு பெருமை கொண்டிட
பெண்ணியத்தை இகழும் எவ்வினத்தையும் நையப் புடைத்திடு


பார் போற்றும் புதுமைப் பெண்ணாய் சிறந்து விளங்கிடபாட்டன் பாரதி சொன்ன அடிமைத்தனத்தை நையப் புடைத்திடு நையப் புடைத்திடு..!


இந்த அறிய வாய்ப்பை அளித்த அனைவருக்கும்என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

~பிரியா பாஸ்கரன்

வாடாமலர்

மணமான மலரிடையே
மணம் புரிய
மனதைத் திறந்த கதவு..!

பூந்தோட்டத்தில் மலர்ந்த
வாடா மலர்.. காதல்..!

மலரே மலரை
கண்டு ஆச்சரியப்பட்டது..!

~பிரியா

ரோசாக்களின் போட்டி…

பெண்மலரே தோட்டத்தில் பார்க்க அழைத்தேனே
கண்ணான உன்னைக் கணநேரம் – வெண்ணிலவே;
பூந்தோட்ட ரோசாக்கள் போட்டியிடச் சொன்னது
பூந்தட்டாம் தன்சொந்த மென்று…

~பிரியமுடன் பிரியா 🌷

அழைப்பு மணியொன்று…

அழைப்பு மணியொன்று…

பயிரோடு வரும் களைகளென
அடிக்கடி வரும்
அலைபேசி அழைப்புகள்
வெறும் எண்களாய்
பதிந்திருக்கிறது
மனதில் வெற்றிடமாய்.
ஓர் மாலைப் பொழுதில்
அவ்வெண்களைக் கடந்து
கேட்ட துடிக்கும்
அழைப்பு மணியொன்று
குயிலின் பாடலென
நினைவின் வழியே
அழைப்பாகி
நிரம்புகிறது
மனதின் வெற்றிடம்.

~பிரியமுடன் பிரியா

என் வீட்டுத் தோட்டத்தில்…

முட்டையிட வந்ததே மொட்டுக் கிடையிலே
சிட்டொன்று தோட்டத்தில் சிக்கென; – கட்டியதே
சட்டென இங்கே சிருங்கார கூட்டினை
இட்டமாய்; தாய்மை அழகு…

~பிரியமுடன் பிரியா 🌷

கனவைப் பிரசவித்தாய்…

கனவைப் பிரசவித்தாய்…

எண்ணத்தைத் தாளிலே இட்டு நிரப்பவே
வண்ணத்தைத் தீட்ட வடிவாகக் – கொண்டே;
மனதில் எழுந்த மகிழ்வாய் உதித்த
கனவைப் பிரசவித்த தாய்…

~பிரியமுடன் பிரியா 🌷

பேசாக் கவிதை…

பேசாக் கவிதை…

தூரிகைத் தூவானமாய்
தெளித்த சாரல்…

தூரிகை எழுதிய
பேசாக் கவிதை…

இரசிகனின் பார்வைத் தரிசித்தது
படைப்பாளியின் கருவறையை…

ஓவியனின் கைவண்ணத்தில்
மலர்ந்த மலர்கள் என்றும்
வாடுவதில்லை…

~பிரியமுடன் பிரியா 💕

நிலவாய் உலா வரும் நினைவுகள்…

நிலவாய் உலா வரும் நினைவுகள்…

நம்மிடையேயான
புலனச் செய்திகளின்
படங்களை நட்சத்திரக்
குறியிட்டு பாதுகாக்கிறேன்.

ஒவ்வொரு நாளும்
அதைத் திறந்து பார்க்க
குறியிட்ட புலனச் செய்திகளுக்கிடையில்
மின்னி ஒளிர்கிறது
உனது முகம்.

அழகான முழுமதி நிலவாய்
உலா வருகிறது
உனது நினைவுகள்.

~பிரியமுடன் பிரியா 🌷

தனிமை கொணர்ந்த கவிதை…

பொழுதுகளற்ற உலகம்
நீண்டு விரிந்திருக்கத்
தனிமையை மிகவும்
பிடிக்கிறதென்றேன்
அதுவும் அன்புடன்
என்னை விட்டு
அகல மறுக்கிறது
மேலும் தன்னுள்
என்னை ஆழ்த்தி
நனவில் கவிதை
வடிக்க வித்திட்டது
கனவிலும் வந்து
பூங்கொத்தை நீட்டி ஏகாந்த
கனவு கவிதைக்கு வித்திட்டது.

~பிரியமுடன் பிரியா