புலனாய் அறிவு…

தினமும் குழந்தை தொடர்ந்து பயில
புனலாய் அறிவு படர – மனதில்
இனிய மகிழ்ச்சி எழுந்திட பெற்றோர்
கனவு நனவு பெரும்…

~பிரியமுடன் பிரியா 🌷

உண்டாட்டு கொண்டாட…

தண்டலையில் இவ்வழகு தோகை விரித்தாட
தண்டில் அடிவைத்து தன்னவளை – கண்டாட;
அண்மையிலே ஓடிவர ஆவலாய் காத்திருக்கும்
உண்டாட்டு கொண்டாட இன்று…

தண்டில் – மரக்கொம்பில்
உண்டாட்டு – விளையாடல்

~பிரியமுடன் பிரியா 🌷

பார்வையொன்றை வீசி

பார்வையொன்றை வீசி …

அழகிய மாலைப்
பொழுதொன்றில்
காற்று சாமரமாய் வீசக்
காகிதம் எடுத்து
எதுகை மோனை போட்டியிட
இயைபுத் தொடை
இயல்பாய் அமைய
சந்த நயம் சங்கீதமாய் பாய
வெண்பா செப்பலோசை இசைக்கத்
தளை தட்டாமல்
தாளம் போடக்
கவிதையொன்றைக் கச்சிதமாய்
வடித்து முடித்து
கர்வமாய் நிமிர்ந்து பார்த்தேன்.
கள்ளமில்லா
பார்வையொன்றை வீசி
கன்னக் குழி விழக்
கற்கண்டாய் இனிக்க
அம்மா என்றழைத்தது
மழலை.
மனதோ கொள்ளை போக
கர்வமெல்லாம் காற்றில்
கற்பூரமாய் கரைந்தது.

~பிரியமுடன் பிரியா 💕

மெட்டோடு மொட்டு…

பெட்டையொன்று சென்றது பிஞ்சுகளின் ஊண்தேட;
சிட்டுகள் பாடவே செல்லமாய் – மெட்டோடு
மொட்டு விரிந்து மலர; அவைகள்கை
தட்டி மகிழ்ந்தது இன்று…

~ பிரியா 💕

கார்முகிலே…

விழியில் அழைத்து வினவும் மழலை;
மொழியில் கதைத்து மலர்ந்த – குழகுநீ;
பார்க்கும் உனதின்பப் பார்வையில் ஈரமாக
கார்முகிலே செய்யும் தவம்…..

~பிரியமுடன் பிரியா

மறக்க முடியாது…

உன்னை மறந்தாலும்
உன் நேசத்தை மறக்க முடியாது
உன் நேசத்தை மறந்தாலும்
உன் அன்பை மறக்க முடியாது
உன் அன்பை மறந்தாலும்
உன் நினைப்பை மறக்க முடியாது
உன் நினைப்பை மறந்தாலும்
உன் வார்த்தை மறக்க முடியாது
உன் வார்த்தை மறந்தாலும்
உன் மௌனம் மறக்க முடியாது
உன் மௌனம் மறந்தாலும்
உன்னை மறக்க இயலாது
உன்னை மறக்க முடிந்தாலும்
உன்னை மறக்க முடியாது
மறப்பது இயல்பு

நினைப்பது இயற்கை

~பிரியமுடன் பிரியா 💕

அந்திமல்லி வாசம்…

அந்திமாலை சூரியன் ஆர்வமாய் ஓய்வெடுக்க
அந்திமல்லி வாசம் அலரவே – சந்தப்
பறவைகள் இன்னிசை பாட மனமும்
இறகாய் பறந்தது இன்று…

~பிரியமுடன் பிரியா 💕

மலர்கொய்தாள்…

மங்கை யிவளோ மலர்கொய்தாள் இன்பமாய்
புங்க மரத்தடி பேழைவயிர் – அங்கணனை
அங்கம் முழுவதும் அர்ச்சிக்கக் கிட்டுமே
ஐங்கரன் ஆசி தினம்…

அங்கணன் – கருணையான நோக்குடையவன்

~பிரியமுடன் பிரியா🙏

எதிர்பார்ப்புகளினூடான பயணம்

பாறையிடுக்கிலிருந்து
முட்டிமோதி வெளிச்சத்தை
எட்டிப்பார்க்கத் துடிக்கும்
செடியாய் உன்னிடமிருந்து
ஒற்றை வார்த்தை வேண்டி
தவம் பூண்டாயிற்று.

ஏமாற்றத்தின் ஆணிவேர்
எதிர்பார்ப்பே என்பதெல்லாம்
மனதிற்கு எட்டவேயில்லை.

மனதைப்படிக்கும்
நம்மிடையேதான்
நீண்ட மெளனம்
நிரம்பிக் கிடக்கிறது

விடியற்காலை நிசப்தத்தை
கூவும் குயிலின் இன்னிசை
நிறைப்பது போல்
மௌனத்தின் கனத்தைக் களைய
குறுஞ்செய்தி ஒன்று வருகிறது.

எதிர்பாராத நாளொன்றில்
மேல்விழும் மழைத்தூறலின்
சிலிர்ப்பில் மகிழ்வதுபோல்
மனதும் மகிழ்ச்சியடைகிறது.

எதிர்பார்ப்பொன்று பூர்த்தியாகி விட்ட
அடுத்த கணத்தில்
இது நிலைத்திருக்க வேண்டுமென்ற
இன்னுமொரு எதிர்பார்ப்பு
பட்டியலில் இடம்பெற
எதிர்பார்ப்புகளோடான
பயணம் தொடர்கிறது.

பிரியா பாஸ்கரன், வெம்பாக்கம்