சிறுகதை…சில நொடி செவி கொடு…
இலட்சுமி அம்மாள், கிட்டதட்ட பின் ஐம்பதுகளில் இருக்கும் மிகவும் கலகலப்பான பெண்மணி. அவர் தன் கணவரை இழந்து விட்டவர். இருக்கும் ஒரே மகனும் அண்டை மாநிலத்தில் வசிக்கத் தனியாக வாழ்ந்து வருபவர்.
அவருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய பலவீனம், மூட்டு வலி என பல்வேறு நோய்கள். பச்சை, சிவப்பு, வெள்ளை, நீலம் எனப் பல்வேறு நிறங்களில் பல வித மருந்துகளை மூன்று வேளையும் தினமும் உட்கொள்ளுபவர். யாரவது என்ன இவ்வளவு மருந்தைச் சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்டால், அதனையும் விளையாட்டாக அவர் தனக்கு வண்ண மிட்டாய் என்றால் விருப்பம், அதனாலே கடவுள் எல்லா வேளைக்கும் வண்ண நிறத்தில் மருந்தைப் போடக் கொடுத்திருக்கிறார் எனச் சொல்லுவார்.
மூலைக்கு மூலை பெருகி வரும் மருந்துக் கடைகளில் மிகப் பெரிய மருந்துக்கடை, வாசுகி மருந்துக்கடை. அவர் வாசுகி மருந்தகத்திற்கு வாரத்திற்கு மூன்று முறையாவது செல்வார்.
அந்த கடையில் பால், முட்டை, ரொட்டி போன்ற அத்தியாவசிய பொருள்களும் விற்பனை செய்வார்கள். அந்த மருந்தகத்தில் அவருக்குத் தெரியாத பணியாளர்களே இல்லை. அனைவரிடமும் அவர்கள் நலன் விசாரித்துக் கொண்டே உள்ளே வருவார்.ஆனாலும் அங்கு மேலாளராக பணிபுரியும் பத்மா என்ற பெண்ணிடம் நிறைய நேரம் பேச முயல்வார்.அன்று ஒரு நாள் வழக்கம் போலச் சென்றார், அங்கு வேலை செய்யும் பத்மாவிடம் பேசிக் கொண்டே தனக்கு வேண்டிய பால் மற்றும் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொண்டே எப்படி வியாபாரம் நடக்கிறது எனக் கேட்டார்.
பத்மாவும், நன்றாக நடக்கிறது. உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது எனக் கேட்டாள். அவரும் கலகலப்பாக அதுவா, நான் எங்குச் சென்றாலும் கூடவே வருகிறது? என்ன செய்ய என்றார். எனக்கு இங்கு வந்து உங்களைஎல்லாம் பார்க்காவிட்டால் மனம் ஏங்குகிறது. என் குடும்பம் போல நீங்கள் எல்லாம் எனச் சொன்னார். பத்மாவும் எங்களுக்கு மகிழ்ச்சியே என்று கூறினாள். ஆனால் மனதிலோ “அய்யோ இன்று நமக்கு நிறைய வேலை மலைபோல குவிந்து இருக்கிறதே, இவரிடம் மாட்டினேனே… இவர் அவ்வளவு சீக்கிரம் பேச்சை முடிக்க மாட்டார்களே” என ஓடியது.
பிறகு அவர் “நீ இந்த வாரம் என்ன செய்த சனி, ஞாயிறு விடுமுறையில்”என்ன கேட்டார்..அதற்கு பத்மா, குளிர் காலத்திற்குக் கம்பளம் ஒன்று தன் கைப்பட நெய்து தன் மகனுக்குப் பரிசளிக்க விருப்பம், ஆனால் தனக்கு நெய்யத் தெரியாது என என்றும் அதனை வலைத்தளத்தில் காணொளி மூலம் கற்று முயன்று தோல்வியுற்றதாகச் சொன்னாள். லட்சுமி அம்மா பத்மாவிடம் அவள் பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு பத்மாவும் தனக்கு அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்க வேண்டும் எனச் சொல்லிச் சென்று விட்டாள். அவரும் பிற பணியாளர்களிடம் பேசிவிட்டு பொருள்களை வாங்கிக் கொண்டு சென்றார்.
சில நாட்கள் கழித்து, வெள்ளியன்றுமருந்தகம் மிகவும்சுறுசுறுப்பாகவும், வார விடுமுறைக்கு முன் நாள் என்பதால் வாடிக்கையாளரின் வருகை அதிகமாகவும் இருந்தது. அனைவரும் மருந்துச் சீட்டை கொடுத்துவிட்டு அப்போதே வேண்டும் எனச் சொல்ல வேலைப் பளு அதிகமானது. அன்று இலட்சுமி அம்மா விறுவிறுவென வந்தார் மருந்தகத்திற்கு. அவர் முகம் சிறிது வாட்டமாக இருந்தது போல இருந்தது. பத்மாவும் அவருக்கு ஒரு தலையாட்டலுடன் எப்படி இருக்கிறீர்கள் கேட்டாள். அவர் மேலும் பேச முயலும் போது, பத்மா இருக்கும் வேலைப் பளுவில் பேச்சைச் சுருக்கென முடித்து, அடுத்துத் தான் என்ன செய்ய வேண்டி இருப்பதை நோக்கி ஓட்டம் எடுத்தாள்.
லட்சுமி அம்மா ஒரு துண்டு சீட்டில் சில வரிகள் எழுதி பத்மாவிடம் சேர்ப்பிக்க கோரி இன்னொரு பணியாளரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.
பத்மா அன்று இருந்த வேலைச் சுமையில் அதை அன்று இரவு வரை பார்க்கவில்லை. அந்த துண்டு சீட்டில் தான் அன்று மாலை ஒரு அறுவைச் சிகிச்சைக்குச் செல்வதாகச் சொல்லித் தான் அடுத்த சில வாரங்களுக்கு மருந்தகத்திற்கு வர இயலாது என்பதைக் குறிப்பிட்டு இருந்தார். தான் அவளுக்கு ஒன்று தர விரும்புவதாகவும் அதனை நேரில் பார்த்துக் கொடுக்க விருப்பியதால் இன்று மருந்தகத்திற்கு வந்தாகவும் கூறினார். விரைவில் வந்து அவளை பார்ப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
பத்மாவின் மனம் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானது. அவள் அவரை அழைக்க, அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. சரி இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அழைக்கலாம் என நினைத்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து அவர் மகன் மருந்தகத்திற்கு வந்து பத்மாவை பார்க்க வேண்டும், அவர் யார் என விசாரித்தார். பத்மாவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தான் அவரைப் பற்றி விசாரித்தாள். அவர், தான் இலட்சுமி அம்மாவின் மகன் என்றும் அவர் ஒரு பரிசு பையை பத்மா, வாசுகி மருத்துவமனை என்று குறிப்பிட்டு உள்ளதை தன்னிடம் தந்து உங்களிடம் சேர்க்கச் சொன்னார் என்றார். பத்மா லட்சுமி அம்மாவின் நலன் விசாரித்தாள். அவர் மகன் சொன்னார் தன் அம்மாவிற்கு அறுவைச் சிகிச்சை முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு நினைவு திரும்பவில்லை என்று. மருத்துவர்கள் சற்று சிரமமான நிலையில் உள்ளார் என கூறியுள்ளதாக சொன்னார். அவர் எந்த மருத்துவமனை என்கின்ற விவரங்களை விசாரித்துக் கொண்டாள் பத்மா.
லட்சுமி அம்மாவின் தேடலான பார்வை தன் கண் முன்னே வந்து சென்றது.அவரிடம் தான் இரண்டு நிமிடம் ஒதுக்கிப் பேசி இருக்கலாம். அவரின் முகம் தன் கண் முன்னே வந்து என்னுடன் நீ பேசவில்லையே என வருத்தம் தெரிவித்தது போல இருந்தது.அந்த பரிசுப் பையைப் பிரித்துப் பார்த்தால், அதில் தன் மகனுக்குப் பிடித்த சிலந்தி மனிதனின் கம்பளம் வெகு நேர்த்தியாக நெய்யப்பட்டு ஒரு பளப்பளக் காகிதத்தில் சுற்றி இருந்தது. அடுத்த வாரம் வரும், தன் மகனின் பிறந்த நாளை நினைவில் வைத்து அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து அட்டையையும் இணைத்திருந்தார். கூடவே தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. அது உயிருடன் இருந்தால் பத்மாவின் வயதில் தான் இருந்திருப்பாள். அதனாலே அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு பாசம் வெளிப்படும். அவளையும் தன் பெண்ணாகப் பார்ப்பதாலேயே இங்கு அடிக்கடி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தது. என் ஆசீர்வாதமும் அன்பும் என்றும் உனக்கு உண்டு என்பதையும், இத்துடன் நானே என் கைப்பட நெய்த கம்பளம் இருக்கிறது எனவும் எழுதி இருந்தது. பத்மாவிற்கு தெரியும்அவருக்கு மூட்டுவலி இருப்பதால் கம்பளம் நெய்வதற்கு மிகுந்த சிரமம் எடுத்து இருப்பார் என.
பத்மா, தான் இன்னும் இலட்சுமி அம்மாவிடம் தன்மையாகப்பேசி இருக்கலாம். அவர் எதிர் பார்த்தது சில நிமிட பேச்சு நம்மிடம், அதனைத் தாராளமாகப் பகிர்ந்து இருக்கலாம் எனக் காலம் தாழ்ந்து உணர்ந்தாள். ஆனாலும் இனியாவது சரி செய்ய முயல வேண்டும் என எண்ணினாள். கடவுளிடம் நெஞ்சுருக அவர் விரைவில் குணமடைய வேண்டிக்கொண்டு அன்று மாலையே இலட்சுமி அம்மாவைக்காண மருத்துவமனை சென்றாள்.
அங்கு அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்ததால் அவரை அவசரச்சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பகுதிக்கு மாற்றி இருந்தார்கள். பத்மா சென்றபொழுது அவர் மயக்க நிலையிலிருந்தார். இவள் இலட்சுமி அம்மாவைத் தொட்டுத் தடவி, தன் பரிசத்தை உணர்த்தி, நெற்றியில் ஈசனின் விபூதியை வைத்து விட்டு, அவரிடம் தான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோரிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் இலட்சுமி அம்மாளின் கைகளில் சிந்தியது. அப்பொழுது அவர் பத்மாவின் கைகளைத் தொட்டார். பத்மா நிமிர்ந்து அவர் கண்களைப் பார்க்க, அவர் பார்வை சொன்னது வந்து விட்டாயா என்னைப்பார்க்க என. வார்த்தைகள் இல்லாத மெளனம் இரு உள்ளங்களின் உணர்வுகளைப் பேசிக்கொண்டது.
பிறகு அவர் விரைவில் நலமடைந்து எப்பொழுதும் போல மருந்தகத்திற்கு வர ஆரம்பித்தார். அவர்கள் இடையே நல்ல உறவு முறை மலரத்துவங்கியது.
வேலைப் பளு இருந்தால் பத்மா இலட்சுமி அம்மாவிடம் அதைத் தன்மையாகச் சொல்லிப் புரியவைத்தாள். இந்த நிகழ்விலிருந்து பத்மா வாழ்வில் நிரந்தரம் என்பது எதுவும் இல்லையென என்பதையும், நாம் நினைத்தால் ஒவ்வொருநொடியையும் உவகையுடன்மலரச் செய்யலாம் மனம் வருத்தாதே செயலில் என்பதையும் கற்றாள். மக்கள் எதிர்பார்ப்பது அன்பான சில சொற்களை, இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க சில நிமிடங்கள் என்பதைப் புரிந்து இனி பத்மா எல்லோருக்கும் சில நொடிகள் செவி கொடுப்பாள்…